மொட்டு, ஐ.தே.க., ஐ.ம.ச., சுதந்திரக் கட்சி என பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன!

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெற்றிராத உள்ளூராட்சி மன்றங்களில் பொது எதிரணியாக இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த லசந்த அழகியவண்ண ஆகியோர் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தியை விடவும் பொது எதிர்க்கட்சிகளுக்கு அதிக ஆசனங்கள் கிடைத்துள்ளதாகவும் மக்களின் தீர்மானத்துக்கு அமைவாக அந்த உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் மற்றும் தோட்டத் தொழிலாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் என்பன பொது எதிர்க்கட்சியின் கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களின் தலைமையில் இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களின் வாக்கெடுப்பில் பொது எதிரணியாக ஒன்றிணைந்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கருத்து தெரிவிக்கையில், கட்சி ரீதியாக பார்க்கும் போது அரசியல் ரீதியாக வெவ்வேறு கொள்கைகளையும் பொருளாதார தீர்மானங்களையும் கொண்டிருந்தாலும் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு பொது எதிரணியாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நாடு தற்போது பாரிய பாதுகாப்பு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதை அவதானிக்கலாம். இந்நிலைமையில் மக்களின் அரசியல் சுதந்திரத்துக்கு மதிப்பளித்து, கட்சிகளாக ஒன்றிணைந்து பொது எதிரணியாக உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள கருத்து தெரிவிக்கையில், கடந்த உள்ளூராட்சி மன்றங்களில் கட்சி ரீதியாகப் பெற்றுக்கொண்ட ஆசனங்களை கொண்டு பொது எதிரணியாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்துக்கு 161 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளதால், அவ்வாறான உள்ளூராட்சி மன்றங்களில் கட்சிகள் கொண்டுள்ள ஆசனங்களை கருத்தில் கொண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு பொது எதிரணியாக செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண கருத்து வெளியிடுகையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளாக செயற்படும் மற்றும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது எதிரணியாக செயற்படுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மக்கள் தீர்மானத்துக்கு அமைவாக 141 உள்ளூராட்சி மன்றங்களிலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. மேலும் 29 உள்ளூராட்சி மன்றங்களில் 50 க்கு 50 வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள். 132 உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்கட்சிகளுக்கு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்தார்கள். அவ்வாறு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு பொது எதிரணியாக செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
![]()