இலங்கை

காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அமுலாக்கத்துக்கு இடைக்காலத்தடை விதிக்குமாறுகோரி மனுத்தாக்கல்

மனு மீதான விசாரணைகள் முடிவடைந்து, இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் வரை வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட 2430/25 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத்தடை விதிக்குமாறுகோரி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

வட மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசாங்கத்தின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430/25 எனும் இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் அவ்வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக வாபஸ்பெறவேண்டும் எனக்கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை இரத்துச்செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.

அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப்பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது காணி அமைச்சர் லால் காந்தவினால் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது இவ்விவகாரம் பற்றி எந்தவொரு விசேட கூற்றும் வெளியிடப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் வியாழக்கிழமை (12) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் காணி ஆணையாளர் நாயகம், காணி உரித்து நிர்ணய ஆணையாளர், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்க, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வடமாகாண காணி நிர்வாக காணித்திணைக்கள ஆணையாளர் ஏ.சோதிநாதன், யாழ் மாவட்ட செயலாளர் (பதில்) எம்.பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஏ.உமாமகேஷ்வரன், மன்னார் மாவட்ட செயலாளர் கே.கனகஈஸ்வரன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

அம்மனுவில் வர்த்தமானியுடன் தொடர்புபட்டதாக பிரதிவாதிகளால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் சட்டவிரோதமானவை, தன்னிச்சையானவை, நியாயமற்றவை மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணானவை என அறிவிக்குமாறும், இம்மனு மீதான முழுமையான விசாரணைகளை அடுத்து இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை வர்த்தமானியில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத்தடை விதிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *