கொள்கலன்கள் தொடர்பில் அர்ச்சுனா எம்.பி.யிடம் விசாரணை நடத்தப்படும்

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததும் அவரிடம் விசாரணைகள் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் ஆயுதங்களே சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு பாதுகாப்பு தரப்பினர் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
323 கொள்கலன்களில் என்ன இருந்தது என்று எதிர்க்கட்சியினர் ஒன்றாக இருந்து கூறினால் மக்கள் ஏற்றுக்கொள்வர். ஆனால் ஒருவர் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்த என்றும் இன்னுமொருவர் அவற்றில் போதைப் பொருள் இருந்தன என்றும் கூறுவதுடன் இன்னுமொருவர் அதில் வெடிகுண்டு இருந்தது என்றும் கூற ஆரம்பித்துள்ளனர். ஆனால் இது தொடர்பில் மேலதிக சுங்க பணிப்பாளர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பான குழுவின் அறிக்கையும் நிதி அமைச்சினால் கையளிக்கும். கடந்த காலங்களில் சரியான அறிக்கைகளை சமர்ப்பித்து பொருட்களை கொண்டுவந்தவர்களுக்கு இது கொள்கலன் விடுவிப்பு தொடர்பான நடைமுறைகளை அறிவர்.
இதேவேளை இந்த விடயத்தில் கம்மன்பிலவின் கருத்தை ஒத்த பொய்யான கருத்தே அர்ச்சுனாவின் கருத்தும். இவர்கள் எதனை கூறினாலும் சுங்கத்தினால் கூறப்பட்டுள்ளவற்றை ஏற்றுக்கொள்கின்றோம். மற்றையவர்கள் கூறும் கருத்துக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததும் அவர்கள் கூறுவது தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.
![]()