நாம் வென்ற அனைத்து சபைகளிலும் தவிசாளர்கள் பதவி தமிழரசுக்கே;

இன்றிலிருந்து சபைகளிலே தவிசாளர் தெரிவுகளுக்கு வாக்கெடுப்பு ஆரம்பமாக இருக்கின்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களை அனைத்து சபைகளிலும் தவிசாளராக நியமிப்பதற்கு அனைத்து கட்சிகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் முன்வரவேண்டும். சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது உறுப்பினர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கோ தேசிய மக்கள் சக்திக்கோ ஆதரவு வழங்கச் சொன்னால் மக்கள் அதற்கான தீர்ப்பை வழங்குவார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிசபைகளுக்கான தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட தமிழரசுக்கிளையின் தலைவருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற போது அதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
2018ஆம் ஆண்டு நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட்டதை விட அதிகளவான ஆசனங்களை தனித்து நின்று பெற்றுள்ளோம்.
நாங்கள் போட்டியிட்ட 11 சபைகளிலும் தமிழரசுக் கட்சி ஏதோவொரு வகையாக ஆட்சியதிகாரத்தை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது இதிலே தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒன்பது பிரதேச சபைகளிலே நாங்கள் தவிசாளர் ஒருவரை, மேயர் ஒருவரை, உதவி தவிசாளர் ஒருவரை, பிரதி மேயர் ஒருவரை எங்கள் கட்சியின் சார்பில் முன்மொழிய இருக்கின்றோம்.
நாங்கள் போட்டியிட்ட அனைத்து சபைகளிலும் தவிசாளர் பதவி எங்கள் கட்சிக்குத்தான் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
நாங்கள் சிறுபான்மையாக இருக்கும் ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய இரண்டு சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எங்களுடைய உறுப்பினர்கள் தான் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றார்கள். நாங்கள் சில சபைகளிலே முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. குச்சவெளி, மூதூர் போன்ற சபைகளிலே 40வீதமான தமிழர்களும் 60வீதமான முஸ்லிம்களும் இருக்கின்ற மூதூர் சபையிலே தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது.
எங்களுடைய அரசியல் குழுக் கூட்டத்திலே நாங்கள் எடுத்த தீர்மானம் தமிழ் பேசும் கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நாங்கள் எங்களுடைய தவிசாளர் பதவிகளை எடுப்பதற்கான வேலைகளை பார்க்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்திருக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே நாங்கள் எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து சபைகளில் ஆட்சியதிகாரத்தை எடுப்பதற்கு செல்லவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு வழங்குவோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமான பொய் .திங்கட்கிழமை கூட மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற ஈ.பி.டி.பி உறுப்பினர்களை சாணக்கியனுடைய அலுவலகத்திற்கு அழைத்திருக்கின்றார்கள் என்று பொய்யான செய்திகளை பரப்பியிருந்தனர். இப்படியான பொய்யான செய்திகளை பரப்பி எங்களுடைய மாவட்டத்தில் எங்களுடைய கட்சிக்குள்ளே பல குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இது முற்றாக பொய்யான செய்தி .
பல கட்சிகள் எங்களுடன் பேசியிருந்தனர். நீங்கள் இந்த சபைகளை விட்டுத்தந்தால் நாங்கள் மற்றைய சபைகளிலே உங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவோம் என்று அதிலே சில கட்சிகள் கூறியிருந்தனர். எங்களுடைய கட்சியை சேர்ந்த ஒருவர் தவிசாளராக, மேயராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றபோது எங்களுடைய கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் அந்த சந்தர்ப்பத்தை இன்னுமொரு கட்சிக்கு வழங்குவதை விரும்பமாட்டார்கள். ஏனைய கட்சிகளுடைய செயற்பாடு எவ்வாறாக அமையுமென்று நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
தேசிய மக்கள் சக்தி ஒரு பேரினவாதக் கட்சியாகும். தமிழ் மக்களுக்கு விரோதமான கட்சி. இந்த மாவட்டத்திலே ஆட்சியமைப்பதற்கு விரும்புமாக இருந்தால் அவர்கள் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைப்பது என்றால் அது அவர்களுடைய முடிவாகும். அதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள். அதேபோல சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது உறுப்பினர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கோ தேசிய மக்கள் சக்திக்கோ ஆதரவு வழங்கப்போகின்றார்கள் என்றால் மக்கள் அதற்கான தீர்ப்பை வழங்குவார்கள்.
அவர்கள் தமிழ் மக்களுடைய பிரதானமான கட்சியும், கூடிய ஆசனங்களை பெற்ற கட்சியுமான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தங்களுடைய ஆதரவை வழங்காது விடுவார்களானால் அவர்களுடைய எதிர்கால அரசியலைப்பற்றி மக்கள் முடிவெடுக்கட்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சியை தோற்கடிப்பது மாத்திரம் தான் உங்களுடைய நோக்கம் என்றால் எங்களுடைய கட்சியைத் தோற்கடிப்பதற்கு மனச்சாட்சிக்கு ஒவ்வாத விடயங்களை நீங்கள் செய்வீர்களானால் அதற்கான பதிலை எதிர்வரும் காலங்களில் எங்களுடைய மக்கள் வழங்குவார்கள் என்றார்.
![]()