இலங்கை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சொத்துக்கள் முடக்கம்!

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சுமார் 2 கோடி ரூபாய் இந்திய மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கியவா்களின் சொத்துக்களே இவ்வாறு இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவால் முடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் சென்னை மண்டல அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சென்னை அருகே செங்குன்றத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தி வந்த ஒரு கும்பலை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1,470 கிலோ மெத்தம்பெட்டமைன், ரூ. 1.29 கோடி ரொக்கம், 30 ஆயிரம் அமெரிக்க டொலா், இலங்கை நாட்டின் ரூபாய் நோட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக அப்பிரிவு வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அந்த நபா்கள், ஹவாலா பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டிருப்பதும், அந்தக் கும்பல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்துவதும், சிந்தட்டிக் வகை போதைப் பொருளை மையமாகக் கொண்டு கடத்தலில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் முக்கிய எதிரிகளான நிசாருதீன், அவா் மனைவி ரபீயா சஹானா ஆகியோருக்கு சொந்தமான ரூ. 2 கோடி மதிப்புள்ள 11 வீட்டு மனைகள், விவசாய நிலம் ஆகியவற்றை போதைப் பொருள் தடுப்புச் சட்டம், கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சட்டம் ஆகியவற்றின் கீழ் முடக்கப்பட்டதாக இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தொடா்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *