இலங்கை

பொது மக்கள் உரிமை கோராத புலிகளின் தங்க நகைகள் வடக்கின் அபிவிருத்திக்கு

யுத்த காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உரியவர்கள் வைத்திருந்தால் அவர்களுக்குரிய தங்க நகைகள் கையளிக்கப்படும்.நகைகளுக்குரிய ஆவணங்களை வைத்திருக்கத்தோரின் நகைககள் வடக்கு பொது அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும்.இதற்கு பொது நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச் ) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் விடுத்த வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை அந்த மக்களிடம் மீண்டும் கையளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மேலும் கூறுகையில்,

யுத்தக் காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய சட்ட நடவடிக்கைகள் ஊடாக பொலிஸ் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன .

தற்போது இந்த தங்க நகைகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன . அவை உண்மையில் தங்க நகைகளா இல்லையா என்பது தொடர்பில் அறிக்கை பெற்றுக்கொள்வது அவசியம். அறிக்கை கிடைத்ததன் பின்னர், அவற்றை உரியவர்களுக்கு ஒப்படைப்பதே அரசாங்கத்தின் நோக்கம்.

யுத்த கால சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நகைகளுக்கான ஆவணங்களை உறுதிப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த நகைகளுக்குரியவர்கள் தமது நகைகள் என்பதற்கான ஆவணங்கள் காண்பிக்க வேண்டும். அவ்வாறு ஆவணங்களை காண்பிக்க முடியாதோரின் தங்க நகைகளை வடக்கு மாகாண பொது அபிவிருத்திக்கு பயன்படுத்தும் வகையில் பொது நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க உத்தேசித்துள்ளோம்.

வடக்கு அபிவிருத்திக்கு இவ்வாறு உறுதிப்படுத்த முடியாத தங்க நகைகளும் அரசாங்கத்தால் ஒரு தொகையும் வைப்பிலிடப்படும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த அபிவிருத்தி திட்டத்தில் பங்குப்பற்றுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *