இலங்கை

300 கொள் கலன்களிலும் வந்தது புலிகளின் ஆயுதங்களே; பிரபாகரனுக்கு சொந்தமானவை-

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சர்ச்சைசக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள்(ஆயுதங்கள்) விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை என்றும், அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

2009க்கு முன்னர் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அர்ச்சுனா எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் காலத்தில் பிரபாகரனின் சிலையை அமைப்பதாகவும், பிரபாகரன் கடவுள் என்றும் என்பிபியினரால் பாடலும் உருவாக்கப்பட்டது. அந்த பாட்டு என்னிடம் உள்ளது. வேண்டுமென்றால் அதனை சபையிலும் சமர்பிக்கலாம். மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு கூறினர். அத்துடன் பிரபாகரனின் அம்மாவின் பெயரில் ஜெட்டி ஒன்றை அமைப்பதாகவும் அந்த பாடலில் கூறினர். அந்தளவுக்கு பொய்களை கூறினர்.

இதேவேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் 300 கொள்கலன்கள் தொடர்பான கதைகள் கூறப்பட்டன. இப்போது இது தொடர்பில் கூறுவதால் எனக்கு சூடுகள் படலாம். ஆனாலும் இதனை கூறியாக வேண்டும்.

அதாவது தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ஜேர்மனிக்கு சென்றிருந்தார். அங்கே புலம்பெயர்ந்தோரை சந்தித்தார். அங்கே இந்த நாட்டில் செய்ய முடியாதவற்றை செய்ய முடியுமென்று வாக்குறுதிகளையும் வழங்கினர்.

அத்துடன் தாய்லாந்தில் இருந்த கொள்கலனில் இருந்த பொருட்கள் பிரபாகரனுடையது. 2009க்கு முன்னர் பிரபாகரன் கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் எஞ்சியிருந்து அதனை குமரன் பத்மநாதன் ஊடாக இப்போது இவர்கள் கொள்கலன்கள் ஊடாக இங்கே கொண்டுவந்துள்ளனர் என்று மக்கள் கதைக்கின்றனர். எனக்கும் ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்த மக்கள் கதைத்தனர். அங்கே எஞ்சியிருந்த ஆயுதங்கள் கொள்கலனில் போட்டு அண்மையில் கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர். இதனை உறுதிப்படுத்த முடியாது. ஆனால் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். அந்த 300 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்டவை பிரபாகரனின் ஆயுதங்களே ஆகும். தாய்லாந்தில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கு சென்று இறுதியில் இங்கே கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை இவற்றை கூறுவதால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். என்னை எம்.பி பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர். ஜுன் 26ஆம் திகதி வழக்கு உள்ளது. என்னை உள்ளே போடலாம். ஆனால் நான் எப்போதாவது வெளியில் வருவேன். ஆனால் நான் அஞ்சவில்லை. ஜனாதிபதி மீண்டும் ஜேர்மனிக்கு போகின்றார். புலிகளின் டயஸ்போராவின் ஜேர்மனியில் உள்ள தலைவர் ஒருவர் என்னிடம் கூறியுள்ளார். ஜனாதிபதி வந்தபோது பணம் கொடுத்ததாக கூறினார். நான் புலம்பெயர்நதோரிடம் இருந்து பெற்ற பணம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் உங்களால் அதனை கூற முடியுமா? என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *