எதிர்காலத்தில் ஒரு அணியாக சைக்கிளும் சங்கும் கூட்டுச் சேர வாய்ப்பு

தமிழ் தேசியப் பேரவைக்கும்(சைக்கிள்) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும்(சங்கு)ஏற்பட்ட இணக்கப்பாடு என்பது ஆக்கபூர்வமானது என்பதை தாண்டி எதிர்காலத்தில் ஒரு அணியாகவும் ஒரு கூட்டமைப்பாக செயல்படுவதற்கான மிகப் பலமான அத்திவாரத்தையிட்டுள்ளதாக தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று நேற்றையதினம் கைச்சாத்திடப்பட்டபோதே கஜேந்திரகுமார் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய அரசியல் நாம் தனித்தனியாக இயங்கிக் கொண்டு வந்த சூழலில் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அந்த அணுகுமுறையில் மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்திக்கு வடகிழக்கு தமிழ் மக்கள் பெரியதொரு ஆணையை வழங்கியதாக தீவிரமாக பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் யதார்த்தம் என்பது அதற்கு நேர்மாறு.
ஆனால் கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் யாழ் மாவட்டத்தில் மாத்திரமே ஓரளவுக்கு தேசிய மக்கள் சக்திக்கான ஆணை சொல்லக்கூடியதாக இருந்தது.ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் தேசிய மக்கள் சக்தி சிறுபான்மையாகத் தான் இருந்தது.
தேசிய மக்கள் சக்தியின் இவ்வாறான பிரசாரம் மேலோங்கி வந்த சூழலில் தவறான கருத்துருவாக்கத்தை முறியடிப்பதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையை தனித்தனியாக முன்னெடுத்தது.
ஆனால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் ஏற்பட்ட பதவி மாற்றங்கள் காரணமாக பேச்சுவார்த்தை தொடர்பாக கடைபிடித்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. ஒருதலைப் பட்சமாக அவர்கள் பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகினர்.
உள்ளூராட்சி தேர்தலை துரதிஷ்டவசமாக நாங்கள் தனித்தனியாக முகம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துக்கே ஆணையை வழங்கினர். ஆனாலும் எந்தவொரு கட்சிக்கும் தமிழ் மக்கள் அறுதிப் பெரும்பான்மையை வழங்கவில்லை.
இந்த பேச்சுவார்த்தை கொள்கை ரீதியாக ஒரு இணக்கமான சூழலை அடைந்திருக்கின்ற நிலையில் இரு தரப்புகளும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளோம்.
தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான இணக்கப்பாடு, இனப்படுகொலைக்கான பொறுப்புக் கூறல் சம்பந்தமான அணுகுமுறை ஆகிய இரண்டு விடயங்களும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தவிர்க்க முடியாத விடயங்களாக இருக்கிறது.இரண்டு விடயங்களிலும் இணக்கப்பாடு வரும்போதுதான் ஒரு கூட்டு முயற்சிக்கு சரியாக இருக்கும்.
அந்த வகையில் தமிழ் தேசியப் பேரவைக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு ஏற்பட்ட இணக்கப்பாடு என்பது ஆக்கபூர்வமான இணக்கப்பாடு என்பதை தாண்டி எதிர்காலத்தில் ஒரு அணியாக ஒரு கூட்டமைப்பாக செயல்படுவதற்கான மிகப் பலமான அத்திபாரம் இடப்பட்டுள்ளது.
அந்த வகையில் எதிர்காலத்தில் ஒன்றாக பயணிக்க தீர்மானித்து இருக்கிறோம். எங்களுடைய இன்றைய ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வை ஒரு இறுதி நிகழ்வாக கணிக்கத் தேவையில்லை.
எம்மைப் பொறுத்தவரையில் இந்தக் கொள்கையின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி செயற்பட்டால் நாங்கள் அவர்களுடன் பேசி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கும் நாங்கள் கதவுகளை திறந்து தான் இருக்கின்றோம்.
இது இலங்கை தமிழ் அரசுக் கட்சியை புறக்கணிக்கும் செயற்பாடாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. அவர்களோடும் இணையும் சந்தர்ப்பத்தை வழங்குகின்ற செயற்பாடாக தான் இருக்க வேண்டுமே தவிர எந்த ஒரு இடத்திலும் ஒரு தரப்பை ஓரங்கட்டி நாங்கள் அரசியல் லாபம் எடுக்கின்ற நோக்கத்தோடு செய்கின்ற ஒப்பந்தம் அல்ல.
துரதிஷ்டவசமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடையவில்லை. கொள்கை ரீதியான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு தமிழ் தேசிய பேரவை நடத்திய அனைத்து முயற்சிகளும் துரதிஷ்டவசமாக தோல்வியில் முடிந்தது. அந்தப் பின்னணியில் தான் நாங்கள் இருதரப்பு மட்டும் இன்று கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்
எதிர்காலத்திலாவது இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நிலைப்பாட்டில் இருந்து விலகி தமிழ் தேசிய மக்கள் வழங்கிய மகத்தான ஆணையை மதித்து கொள்கை ரீதியாக செயற்பட தயாராக இருந்தால் நாங்கள் நிச்சயமாக அவர்களோடு பேசி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கும் தயாராக இருக்கிறோம்.
அதை செய்ய வேண்டும் எனக் கூறியே இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
எங்களைப் பொறுத்தவரையில் இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தாலும் நாங்கள் எதிர்பார்ப்பது இந்த முயற்சி, தமிழ் அரசியலில் ஏற்படுத்தப் போகின்ற திருப்புமுனையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவம் விளங்கிக் கொண்டு தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு நேர்மையாக பயணிக்க முன்வரவேண்டும்
இந்த இணக்கம் நிரந்தரமாக இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் மீறப்படுமாக இருந்தால் தமிழ் மக்கள் அதை தாங்கிக் கொள்ள மாட்டார்கள். தமிழ் தேசிய பேரவை பொறுத்தவரையில் நாங்கள் எமது மக்களுக்கு வாக்குறுதியை வழங்குகிறோம். இந்த ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய அனைத்து அம்சங்களும் நேர்மையாக எமது இறுதி மூச்சு வரை பயணிப்போம் என்றார்.
![]()