இலங்கை

கொழும்பு மாநகர சபையை எதிர்க் கட்சிகள் கைப்பற்றும்

அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைக்கவுள்ளதாகவும் மாநகர மேயர் தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானம் மேற்கொள்ளுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையில் எதிர்க்கட்சிகளுக்கே அதிக ஆசனங்கள் காணப்படுகின்றன. எனினும் அரசாங்கம் அதனை மூடி மறைத்து கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் சாத்தியமற்றதால் அது வெற்றியளிக்காது. கொழும்பு மாநகர சபையில் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளுக்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அரசாங்கத்துக்கு எதிராக வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு ஏற்றவகையில் நடந்து கொள்வதும் செயற்படுவதும் அரசியல்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.

அவ்வாறான பொறுப்புகளை நிறைவேற்றாது, ஒரு சிலர் இருப்பதை நாம் காண்கிறோம். இருப்பினும் அது மக்கள் ஆணைக்கு எதிரான செயற்பாடாகும். கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தயாராகவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் முன்னணியின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து குழுக்களும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கின்றன. கொழும்பு மேயர் யாரென்பதை ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தீர்மானிக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *