எந்த சபையிலும் ஆட்சியமைக்காத சஜித் தரப்பு ; 151 சபைகளில் தனித்து ஆள்கிறது ‘திசைகாட்டி’

தேர்தல் நடைபெற்ற 339 உள்ளூராட்சி சபைகளில் 14 மாநகர சபைகள், 12 நகர சபைகள் மற்றும் 135 பிரதேச சபைகள் அடங்கலாக 161 சபைகள் நேற்று திங்கட்கிழமை அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 151 சபைகளில் தேசிய மக்கள் சக்தியும்(திசைகாட்டி), 6 சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சியும், 2 சபைகளில் தேசிய காங்கிரசும், ஒரு சபையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தனித்து ஆட்சியமைத்துள்ளடன் இன்னுமொரு சபையில் சுயேச்சைக் குழுவொன்றும் ஆட்சியமைத்துள்ளது.
எனினும் எனினும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் எந்தவொரு சபையையும் அமைக்கவில்லை.
28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் அடங்கலாக 339 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்றது. இந்தத் தேர்த முடிவுகளுக்கமைய 161 சபைகளில் தனி கட்சி அல்லது சுயேச்சைக்குழுவினால் பிரச்சினையின்றி தனித்து ஆட்சியமைக்க முடியுமாக இருந்தது.
இதன்படி அமைக்கக்கூடிய உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர், பிரதி மேயர், நகர முதல்வர், பிரதி முதல்வர், பிரதேச சபைத் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்களின் பெயர் விபரங்கள் முதலாம் திகதி வெளியிடப்பட்டது. இந்த வர்த்தமானிக்கமைய நேற்று முதல் அந்த சபைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 13 மாநகர சபைகள், 12 நகர சபைகள் மற்றும் 126 உள்ளூராட்சி சபைகள் அடங்கலாக 151 சபைகளில் தேசிய மக்கள் சக்தி தனித்து ஆட்சியமைத்துள்ளது.
அதேபோன்று இலங்கை தமிழரசுக் கட்சியானது கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி உள்ளிட்ட 6 பிரதேச சபைகளில் தலைவர் மற்றும் உப தலைவர் பதவிகளுக்கு தமது உறுப்பினர்களை நியமித்து தனித்து ஆட்சியமைத்துள்ளது.
அத்துடன் தேசிய காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபையில் தனித்து ஆட்சியமைத்துள்ள அதேவேளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி காத்தான்குடி நகர சபையில் தனித்து ஆட்சியமைத்துள்ளது.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் திருக்கோயில் பிரதேச சபையை சுயேச்சைக் குழுவொன்று அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களுடன் தனித்து ஆட்சியமைத்துள்ளது.
எவ்வாறாயினும் எஞ்சிய கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 14 மாநகர சபைகளும், 24 நகர சபைகளும் மற்றும் 140 பிரதேச சபைகளுக்கும் அடங்கலாக 178 சபைகளுக்குமான பதவி நியமனங்கள் தொடர்பாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. குறித்த சபைகளில் எந்தவொரு தனிக் கட்சியோ அல்லது சுயேச்சைக்குழுவோ தனித்த ஆட்சியமைப்பதற்கான அருதிப்பெரும்பான்மை ஆசனங்களை பெற்றிருக்காமையினால் அந்த சபைகளை அமைக்கும் தினம் தொடர்பில் பின்னர் அறிவித்தல்கள் வெளியிடப்படவுள்ளன.
![]()