முச்சந்தி

அநுரவின் வாக்குறுதிக்கு மாறாக தொடரும் காணி அபகரிப்பு – எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தயாராகும் கிழக்கு மாகாணம் ..!

அநுரவின் வாக்குறுதிக்கு மாறாக கிழக்கு மாகாணத்தில் தொடரும் நில அபகரிப்பு மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு தமது கண்டனத்தை வெளியிடுவதுடன் அவற்றுக்கு எதிராக பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கிழக்கு மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை சர்வோதயத்தில் நேற்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின்போதே அமைப்பின் மாகாண பொருளாளர் தட்சணாமூர்த்தி நவஜோதி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் நிறைவுற்ற பின்னர் பல ஆட்சியாளர்கள் மாறினாலும் அன்றில் இருந்து இன்று வரை பல சைவ ஆலயங்கள் பௌத்தமயமாக்கப்பட்டு வருகின்றன. திருகோணமலையை பொறுத்தவரையில் வெருகல் கல்லடி பகுதியில் உள்ள சைவ ஆலயமான மலை நீலி அம்மன் ஆலயத்தினுள் பௌத்த மதத்தை நிறுவும் முகமாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மூதூர் 64ஆம் கட்டை மலையில் பௌத்த விகாரை ஒன்று நிறுவப்பட்டு வருகின்றது. சைவ ஆலயங்கள் என்பது வாழ்வியலும் நம்பிக்கையுமாகும்.

தற்போது ஆட்சிக்கு வந்திருக்கின்ற அனுர அரசாங்கத்தின் ஆட்சியில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்தார். எனினும் அனுர அரசினுடைய ஆட்சியிலும் இது தொடர்ந்து வருகின்றது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் உகந்தை மலையில் பௌத்த சிலை வைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆலய நிர்வாகத்தினர் ஏற்கனவே அப்பகுதியில் 125 அடி உயரமான முருகன் சிலையை நிறுவுவதற்கு அனுமதி கோரியபோது அங்கிருந்த கடற்படையும், வன வள பாதுகாப்பு திணைக்களமும் அதனை தடுத்திருந்தனர். இந்நிலையில் திடீரென அவர்களின் முன்னிலையிலேயே அப்பகுதியில் தற்போது புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் சார்பாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை வழங்குவதற்கும் அதேபோன்று எதிர்வருகின்ற நாட்களில் கிழக்கு மாகாணத்தில் தொடரும் நில அபகரிப்பு மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டங்களையும் நடத்துவதற்கு தயாராகி வருகின்றோம்.- என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button