உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்று ஆரம்பம் ; 178 சபைகளில் ஆட்சி அமைக்க முடியாத நிலை

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், தனிக் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ முழுமையான வெற்றியை பெறாத 178 உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை தீர்மானிப்பதில் இறுதி தீர்மானம் எட்டப்படாததால், அந்த உள்ளூராட்சி மன்றங்களை நிறுவதில் தாமதம் ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, இந்த சபைகளின் உருவாக்கம் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்ட 161 உள்ளூராட்சி சபைகளை இன்று திங்கட்கிழமை அமைப்பதில் எவ்வித சிக்கலும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவது உள்ளூராட்சி ஆணையாளர்களின் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளன.
கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், 339 உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரத்தில் வெற்றி பெற்ற மற்றும் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் கடந்த சனிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
161 உள்ளூராட்சி மன்றங்களில் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெரும்பான்மை இடங்களை வென்றுள்ள நிலையில், ஏனைய 178 உள்ளூராட்சி மன்றங்களில் எந்தவொரு தனிக் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ முழுமையான வெற்றியைப் பெறவில்லை. இதனால் இந்த உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படுவதில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி, எந்தப் பிரச்சினையும் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு அந்தந்த அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட தலைவர்கள், பிரதி தலைவர்கள், மேயர்கள் மற்றும் பிரதி மேயர்களின் பெயர்களடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதி தலைவர்கள், மேயர்கள் மற்றும் பிரதி மேயர்களின் தெரிவு உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களின் தலைமையில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
![]()