இந்தியா – பாகிஸ்தான் இடையே பெரும் போரை நோக்கி நகர்வுகள்!; தாக்குதல்,பதில் தாக்குதல்கள் தீவிரம்

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இருநாட்டின் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் அதேவேளை,எந்நேரத்திலும் பெரும் போர் சூழும் நிலைமை ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. அந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 24 அன்று பொது மக்கள் மத்தியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மோசமான தண்டனையைப் பெறுவார்கள்” என எச்சரித்திருந்த நிலையில்,கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் ‘ஒபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் தாக்குதலை நடத்தியதாக இந்திய ராணுவம் அறிவித்தது.இந்த தாக்குதலில் சுமார் ஒன்பது இடங்களில் ஏவுகணை மற்றும் வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டன என்றும் இந்திய ராணுவம் தெரிவித்தது.
இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதேவேளை, 57 பேர் காயம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதேபோல்,இந்த தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் அறிவித்தார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ”பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து மட்டுமே தாக்குதல்” நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.மறுபுறம், பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதல்களில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 32 பேர் காயமடைந்ததாகவும் இந்திய அரசு தெரிவித்தது.
அதன் பிறகு, பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று வெளியானது. அதில் புதன்கிழமை இரவு முதல், பாகிஸ்தான் ராணுவம் 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வியாழக்கிழமை இரவு 8.45 மணிக்கு, ஜம்மு நகரத்திலிருந்து விமானத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வரத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, ஜம்மு நகரம் முழுவதும் மின் தடை ஏற்பட்டு, விமான சைரன்கள் ஒலித்தன.
ஜம்முவின் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியது என்றும், அனைத்தையும் இந்திய வான் பாதுகாப்பு பிரிவுகள் இடைமறித்தன என்றும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.இந்திய ராணுவத்தின் கூற்றுப்படி, ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது.இந்த தாக்குதல்களில் எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் இந்திய ராணுவம் தெரிவித்தது.
இந்தியாவின் மூன்று ராணுவ இலக்குகளைக் குறிவைத்து வியாழக்கிழமை இரவு ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் பாகிஸ்தான் தாக்கியதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்தியாவின் குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர், ஜம்மு மற்றும் பஞ்சாபில் உள்ள பதான்கோட்டில் செயல்பட்டு வரும் ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் இத்தகைய தாக்குதல்களை நடத்தியதாகவும், இதை இந்தியா முறியடித்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இல்லையென தெரிவித்திருந்தார்.
இதேவேளை இருநாட்டினதும் நிலைமை மோசமடைந்துவரும் நிலையில், இந்திய கிரிக்கெட் சபை 2025 ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. அதேபோல், இண்டிகோ ஏர்லைன்ஸ் 10 இந்திய நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது. மேலும்,பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் சிவில் சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் உத்தரவிட்டுள்ளது.
![]()