வடக்கில் பாரிய அபகரிப்பு; தெற்கில் காணிகளை அபகரிக்க முடியுமா ?

வலிகாமம், கேப்பாப்பிலவில் ஏன் மக்களின் காணிகளை அபகரித்து வைத்துள்ளீர்கள்?நீங்கள் அம்பாந்தோட்டை மாத்தறையில் இவ்வாறு காணிகளை பிடித்துள்ளீர்களா? பிடிக்க முடியுமா?ஏன் தமிழர் பிரதேசத்தில் மட்டும் இவ்வாறு காணிகளை ஆக்கிரமிக்கின்றீர்கள்? பாதுகாப்பு பிரதி அமைச்சர் என்ன மனநிலையில் மக்கள் காணிகள் தொடர்பில் பேசுகின்றார் என தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்ட எம்.பி சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விலங்குகள் திருத்தச் சட்டமூலம் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகால் சேவைகள் சபை திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள் தமது சொந்த இடமாகதமது கால்நடைகளை வளர்த்து பயன்பெற்றனர். அந்த கால்நடைகளில் ஏராளமானவை அந்த பகுதியில் அத்துமீறி சோள செய்கையில் ஈடுபட்ட பொலனறுவை மாவட்டத்தை சேர்ந்த சிலரால் கொல்லப்பட்டுள்ளன. இது தொடர்பில் கடந்த 6, 7 வருடங்களாக இந்த சபையில் கூறப்பட்டு வருகின்றது.
ஆனால் இந்த அரசாங்கமும் இந்த மேய்ச்சல் தரை விடயத்தில் ஒரு தெளிவான முடிவை எடுக்கவில்லை. இதனால் இந்த முறையையும் அரசாங்கத்திடம் ஒரு கேள்வியைகேட்கின்றோம். அதாவது நீங்கள் விலங்குகள் தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வருகின்றீர்கள். இந்த சட்டமூலத்தில் ஏன் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையை அந்த மக்களிடம் ஒப்படைத்து அவர்களின் கால்நடைகளை வளர்ப்பதற்கான வசதிகளை ஏன் வழங்க மறுகின்றது என்று கேட்கின்றோம்.
இதேவேளை யாழ்ப்பாணம் மண்ணில் மயிலிட்டி, வசாவிளான் போன்ற பிரதேசங்களில் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு போராடுகின்றனர். இதேவேளை விமான நிலையத்திற்கு காணிகளை சுவீகரிப்பது தொடர்பாக மக்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு நிலங்களே வேண்டும் என்று மக்கள் கூறியிருந்தனர்.
1990ஆம் ஆண்டில் ஜூன் 15ஆம் திகதி மயிலிட்டி, பலாலி, தோலகட்டி போன்ற பகுதிகளில் மக்கள் விரட்டப்பட்டு அங்கு இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக அந்த இடங்கள் அபகரிக்கப்பட்டன. இன்று அங்கு இராணுவம் விவசாயம் செய்வதுடன், அவர்களின் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கின்றனர். அவற்றை அந்த மக்களின் கண்முன்னே வெளியில் விற்கின்றனர். யுத்தமில்லாத நேரத்தில் இந்த காணிகளை ஏன் வைத்திருக்க வேண்டும்?
வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 16 கிராம அலுவலகர் பிரிவுகளில் மூன்று கிராம அலுவலக பிரிவுகள் இராணுவத்திடம் உள்ளன. அங்கு இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றனர். அங்கு சலூன் கடைகள் வைத்திருக்கின்றனர். அதனை மக்களுக்கு வழங்காமல் இருப்பது ஏன்?
ஜனாதிபதி அந்த காணிகளை வழங்குவதாக கூறியிருந்த போதும் அது நடக்கவில்லை. இந்நிலையில் விமான நிலையத்திற்காக காணிகள் சுவீகரிப்பு நடவடிக்கையை உடன் நிறுத்துங்கள் என்று வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளருக்கு அண்மையில் கடிதம் அனுப்பியுள்ளேன்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு காணிகள் தொடர்பிலும் இந்த சபையில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 12 ஆண்டுகளாக அந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு போவதற்காக போராடுகின்றனர். அந்த மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ள போதும் இன்னும் சரியான பதில் கொடுக்கப்படவில்லை. அந்த மக்களின் காணிகளை தயவு செய்து வழங்குங்கள்.
இந்நிலையில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர காணிகளை நாங்கள் கொடுக்க மாட்டோம் என்றும், காணிகள் பாதுகாப்புக்கு அவசியமாகும் என்றும் கூறுகின்றார். எங்கே யுத்தம் நடக்கின்றது. இங்கு யுத்தம் முடிந்து எல்லாம் சுமுகமாகியுள்ளன என்று சர்வதேசத்திற்கு கூறுகின்றீர்கள். யுத்தம் இல்லாத நாட்டில் எதற்கு இராணுவத்திற்கு மக்களின் காணிகள் தேவை? வலிகாமம், கேப்பாப்பிலவில் ஏன் மக்களின் காணிகளை அபகரித்து வைத்துள்ளீர்கள்?நீங்கள் அம்பாந்தோட்டை மாத்தறையில் இவ்வாறு காணிகளை பிடித்துள்ளீர்களா? பிடிக்க முடியுமா?ஏன் தமிழர் பிரதேசத்தில் மட்டும் இவ்வாறு செய்ய வேண்டும்? இன்று அங்கு காணிகளை இழந்த மக்கள் தெருக்களில் போராடுகின்றனர்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் என்ன மனநிலையில் மக்கள் காணிகள் தொடர்பில் பேசுகின்றார். மக்கள் காணிகளை மக்களிடமே வழங்குங்கள். மக்கள் உங்களை நம்பியே வாக்களித்தனர். அந்த மக்களுக்கு ஒரு துண்டு நிலத்தைக்கூட நீங்கள் விடுவிக்காவிட்டால் அந்த மக்களுக்கான நீதி என்ன? உங்கள் நியாயம் என்ன? கடந்த கால அரசாங்கங்கள் கடைபிடித்ததையே நீங்களும் கடைபிடிக்கின்றீர்கள் என்றார்.
![]()