கட்டுரைகள்

“கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத” கதை எப்போது நினைவுக்குவருகிறது?… நியூசிலாந்து சிற்சபேசன் 

நியூசிலாந்து சிற்சபேசன்

இலங்கை அரசியலிலே “ஒற்றுமைக்” கதை பேசுகின்ற “சீசனே” தற்போது ஆரம்பமாகியிருக்கின்றது.

தென்னிலங்கையின் மூன்று பிரதான கட்சிகளும் ஒன்றுகூடுவதாக “சீன்” போடுகின்றன. மறுவளத்தில், தமிழ் பேசும் ஆறு கட்சிகளும் “விட்டோமா பார்” என்ற தொனியில் “மேடை” அமைப்பதாகப் பாவலா பண்ணுகின்றன. சனாதிபதி அநுரகுமர திஸ்ஸநாயக்க 60 – 70 விழுக்காடு வரையான ஆதரவைக் கொண்டிருப்பதாக, பெருவெட்டிலான கருத்துக்கணிப்புக்கள், சொல்கின்றன. மறுவளத்தில், சஜித் பிரேமதாசா 20 விழுக்காடு எண்ணிக்கையைக்கூட எட்டிப்பிடிக்கத் திணறுகின்றார்.

நாமல் ராஜபக்சா, ரணில் விக்கிரமசிங்க போன்றோரின் ஆதரவு ஒற்றை இலக்கத்துக்கு இளைத்துவிட்டதாகவே தெரிகின்றது.

அத்தோடு, சனாதிபதி அநுரகுமர ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள், அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் என திரும்பிய திக்கெல்லாம் “எதிரணிக்குத்” தோல்வியே கிடைக்கின்றன.

அதனாலயே, தென்னிலங்கையிலே “ஒற்றுமை” தொடர்பிலான கதைபேசல்கள் ஆரம்பித்துள்ளன. கூடவே, பரபரப்பாகப் பேசப்படுகின்ற நீதித்துறை விடயத்தையும் “எதிரணி” கையிலெடுத்துள்ளது.

Six Tamil and Muslim parties unite on the constitution, elections and land  | Tamil Guardian

நீதிபதிகளின் ஓய்வூதியத்துக்கான வயதெல்லையை அதிகரிப்பதை எதிர்ப்பதனூடாக, நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஜனநாயக ஆட்சி முறைகளையும் பாதுகாக்கவே ரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும், நாமல் ராஜபக்சவின் பொதுஜனப் பெரமுனவும் “ஒன்றுசேர்ந்து” செயற்படப் போவதான தோற்றப்பாடு ஏற்படுத்தப்படுகின்றது.

மேற்படி தரப்புக்கள் ஓரணியில் செயற்படுவதென்பது, புலி – ஆடு – புல்லுக்கட்டு என்பவற்றுடன் ஆற்றைக்கடக்க முற்பட்ட படகோட்டியின் பரிதாப நிலையையே நினைவுபடுத்துகின்றது. ஒரு உள்ளூராட்சி சபையிலே ஆட்சி கவிழ்ந்தாலே, மேற்படி தரப்புக்களின் “ஒற்றுமை” அப்பளம் போன்று நொறுங்கிவிடக் கூடியதாகும்.

மறுவளத்தில், தமிழ் பேசும் ஆறு கட்சிகளின் “மேடைக்” காட்சிகள் விறுவிறுப்பாகக் கட்டமைக்கப்படுகின்றன.

இலங்கை தமிழரசுகட்சி, (ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். இணைந்த) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், (மனோ கணேசன், திகாம்பரம், இராதாக்கிருஷ்ணன் இணைந்த) தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவையே ஒன்றுகூடி “மேடை” அமைத்துள்ளன.

அதனை “உலக மகா அதிசயம்” என்ற “ரேஞ்சுக்குக்” கட்டமைக்கின்றனர். சனாதிபதி – எதிர்கட்சித் தலைவர் முதல் வெளிநாட்டுத் தூதரகம் – அயல்நாட்டு தலைவர்களுடன் சந்திப்பு என்ற வகையில் “பிலிம்” காட்டுகின்றனர்.

புவி வெப்பமயமாதலினால், பருவகாலங்கள் சீரற்றுப் போவதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், மிகப்பெரிய மனிதப் பேரவலத்தின் பின்னரும்கூட, தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் எத்தகைய பாதிப்புமின்றி ஒரே “சீராக” இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அரசியல்தீர்வு, ஒற்றுமை, 13வது திருத்தம், டெல்லிக்கு கடிதம், வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பது, அரசியல்யாப்புத் திருத்தம் என, “சீரான” சுழற்சி முறையில், குறிப்பிட்ட சில விடயங்களையே திரும்பத்திரும்பப் பேசுகின்றனர்.

எந்தவித “சங்கோதமுமின்றி” உடனடித்தேவைக்கு கூட்டணி அமைக்கின்றனர். தேவை முடிந்தவுடன், “பாம்பு செட்டை” கழட்டுவது போன்று உதறித்தள்ளிவிட்டு போகின்றனர். அதனால், அவசரத்திலே அள்ளித் தெளித்த கோலமாகவே “கூட்டணிகள்” அமைகின்றன.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனேயே, ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டன.

அண்மைக்காலத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியுடன் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். இணைந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி “ஒன்று சேர்வதான” தோற்றப்பாடு தென்பட்டது. தமிழ் பேசும் ஆறு கட்சிகளின் “மேடையிலும்” சேர்ந்தே ஏறிக்கொண்டனர்.

இருந்தபோதிலும், அண்மையிலே சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் தெரிவின் போது, தமிழரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் நேரடியாகவே மோதிக்கொண்டன.

மொத்தமுள்ள 16 உறுப்பினர்களில், தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

மீதமிருந்த 14 உறுப்பினர்களில் – இலங்கைத் தமிழரசுக்கட்சியிடம் ஆறு உறுப்பினர்கள் இருந்தனர். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒற்றை உறுப்பினரின் ஆதரவுடன் எண்ணிக்கையை ஏழாக்கிக் கொண்டனர்.

மறுவளத்தில், தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் ஆறு உறுப்பினர்களின் ஆதரவுடன், ஒற்றை உறுப்பினரைக் கொண்டிருந்த ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் பலம் ஏழு உறுப்பினர்களானது.

அந்தவகையிலே, இருதரப்புக்கும் சமநிலை கிடைத்தது. அதனால், திருவுளச் சீட்டு மூலம் தெரிவு இடம்பெற்றது.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு; 25%  மக்களின் உரிமைகளுக்கான ஒற்றுமை முயற்சிக்கு விளக்கம்.!!! - Spot News24

இலங்கைத் தமிழரசுக்கட்சியைத் தோற்கடித்து, ஜனநாயக தமிழ்த் தேசியகூட்டணி வெற்றி பெற்றது.

ஆனால், தமிழ் பேசும் ஆறு கட்சிகளின் “மேடையிலே” இலங்கை தமிழரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் “ஒன்றுபட்டுச்” செயற்படப்போவதாகச் சொல்கின்றன.

அதே, தமிழ் பேசும் ஆறு கட்சிகளின் “மேடை”யைப் பார்த்து, கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் கெக்கட்டமிட்டுச் சிரிக்கின்றது.

மேற்படி செயலகப்பிரிவிலே 90 விழுக்காடு தமிழ் மக்கள் உள்ளனர். அந்த அடிப்படையிலேயே 1989ல் அஃது உருவாக்கப்பட்டதாகும். ஆனாலும்கூட, காணி மற்றும் நிதி அதிகாரமற்ற உப-பிரதேசசெயலக அந்தஸ்திலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றது.

முழுமையான அதிகாரங்களைக் கொண்ட செயலகமாக மாற்றும் முயற்சி “அனாதையாக” அலைகின்றது. “தமிழ் பேசும்” கட்சிகளினால் உரிய தீர்வை ஏற்படுத்த முடியவில்லை.

இத்தகைய பின்னணியிலேயே, அரசியல்கட்சிகளின் “ஒற்றுமை” தொடர்பிலான கதைகளைக் கேட்கும்போதே, “கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத நிலையில், வானம் ஏறி வைகுண்டம் போன” கதை நினைவுக்கு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button