டிரம்பிற்கு எதிராக உலகம் : அமெரிக்காவில் போராட்டம் – ஐரோப்பாவில் எதிர்ப்பலை!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

கடந்த வாரம் வாசிங்டனில் பல்லாயிரம் மக்கள் டிரம்பிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஐந்து இலட்சம் மக்கள் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் டிரம்பிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரி உயர்வு காரணமாக அமெரிக்காவின் பல நகரங்களில் 05/4/25 சனிக்கிழமை பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் போராட்டம்:
அத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டை நிர்வகிக்கும் முறை குறித்து சீற்றமடைந்துள்ள மக்களே இந்த ஆர்ப்பாட்டங்களை பல மாநிலங்களிலும் முன்னெடுத்தனர்.
இதுவே டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களிலும் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள ஊடகங்கள், 1200 இடங்களில் டிரம்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்றன.
சர்வதேச அரங்கில் பாரிய வரிவிதிப்பதையும், அந்நாடுகளின் அரசியலில் தலையிட வேண்டாம் என்று இந்த ஆர்ப்பாட்டங்களை சிவில் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் வலியுறுத்தி இதில் கலந்துகொண்டன.
அத்துடன் அமெரிக்காவில் வலுக்கட்டாயமாக அரசாங்க ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவது, சமூக பாதுகாப்பு நிர்வாக அலுவலகங்களை மூடுவது, குடியேற்றவாசிகளை நாடுகடத்துவது, சுகாதார பாதுகாப்பு திட்டங்களை குறைப்பது போன்ற டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும் சீற்றத்தை வெளியிட்டனர்.
சில ஊடகங்களின் கூற்றுப்படி வாசிங்டனிலும் புளோரிடாவிலும் மட்டும் சுமார் 50,000 மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த டிரம்ப் எதிர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு விதமான பதாகைகளை ஏந்தியிருந்தனர். ரஷ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கு டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் போட்டனர்.
டிரம்பிற்கு எதிராக உலகம் :
இதே வேளை டிரம்பிற்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு காலகட்டங்களில் பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன. வாசிங்டனில் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் அவருக்கு எதிராக பல்வேறு கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
டிரம்ப் அரசு புலம் பெயர்ந்தோரை கையாள மிகப்பெரிய நாடு கடத்தல் திட்டத்தை தொடங்கியது. இது அமெரிக்காவில் மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் எதிர்ப்பலை:
டிரம்பின் நிலைப்பாட்டை எதிர்த்து ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் பதாகைகளுடன் பேரணி நடத்தினர். டிரம்பின் குடியேற்ற கொள்கைகளை எதிர்த்து பாரிசில் பதாகைகளுடன் பேரணி நடத்தினர்.
அத்துடன் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டதற்கு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியேற்று வாசிகள், பிறப்புரிமை, குடியுரிமை போன்றவற்றின் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மெக்சிகோவில் டொனால்ட் டிரம்பின் குடியேற்று நடவடிக்கைக்கு எதிராக எல்லை வெளியில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் போது மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றியதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பிலிப்பைன்ஸில் எதிர்ப்பு :
பிலிப்பைன்ஸில் அமெரிக்க ராணுவத்தை விரிவுப்படுத்துவதை கண்டித்து மணிலாவில் போராட்டங்கள் நடைபெற்றன.
பெல்ஜியத்தில் தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள், பெண்ணியவாதிகள் மற்றும் இனவெறி எதிர்ப்பு ஆர்வலர்கள் டிரம்பின் திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
டிரம்ப் அமெரிக்க கோடீஸ்வரர்களுக்கு சேவை செய்யும் தீவிர வலதுசாரி என்றும் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இவ்வாறு டிரம்பிற்கு எதிராக உலகமெங்கும் பாரிய போராட்டமும் எதிர்ப்பு குரல்களும் எழுந்துள்ளன.
அமெரிக்க மக்களின் எழுச்சி:
தற்போது அமெரிக்காவில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் ஏனையவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உந்துதலை வெளிப்படுத்தும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க மக்களை எழுச்சியடைய செய்வதே இதன் நோக்கம் என இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலர் தெரிவித்தனர்.
இந்நிலையில் டிரம்ப் தன்னை எதிர்ப்பவர்களிற்கு எதிராக ஆக்ரோசமாகவும், வன்முறை போக்குடனும் நடந்து கொண்டுள்ளதால் பலர் தங்கள் எதிர்ப்புகளை வெளியிட தயங்குகின்றனர் எனவும் பலர் தெரிவித்தனர்.
டிரம்பிற்கு எதிராக குரல் கொடுக்கின்றோம் என்பதை மௌனமாக உள்ள அமெரிக்கர்கள் பார்க்கவேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டங்களின் நோக்கம் என தெரிவித்தனர். இந்த துணிச்சலை பார்க்கும்போது டிரம்பை எதிர்ப்பதற்கு அமெரிக்க மக்களும் துணிவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த மூவ்ஒன் அமைப்பினை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னால் மண்டியிட தயாராகவுள்ள மக்களிற்கும் ஸ்தாபனங்களிற்கும் அதனை எதிர்ப்பதற்கான மக்கள் இயக்கம் உள்ளது என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகின்றோம் என ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நமது அரசியல் தலைவர்களிற்கு டிரம்பின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான துணிச்சல் உள்ளது என்றால் அவர்கள் அதற்கு தயாராகயிருந்தால், நாங்கள் அவர்களின் பின்னால் நிற்போம், என தெரிவித்துள்ள அவர் அரசியல் தலைவர்கள் ஜனநாயகத்தினை பாதுகாக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.