இலங்கை

பிரித்தானிய தூதரகம் முன் விமல் அணி போராட்டம்; உயிர்த்தியாகம் செய்தாவது இராணுவத்தினரை பாதுகாப்போம்

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு பிரித்தானியாவால் விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினர் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள பிரித்தானியா உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர தலைமையிலான குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு 07 விஜேராம சந்திக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தில் இருந்து பேரணியாக சென்று பிரித்தானியா உயரிஸ்தானிகராலயத்திற்கு முன்ளால் சென்று பிரித்தானியா அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பாதாதைகளை ஏந்தியாவறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்களால் பிரித்தானியா உயர் ஸ்தானிகராலயத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

இவ்வேளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜயந்த சமரவீர கூறுகையில்,

இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு செயற்பட்ட எமது நாட்டு இராணுவத்தினருக்கு எதிராக பிரித்தானியாவால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் கடற்படைத் தளபதி உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவிய கருணா அம்மானுக்கும் பிரித்தானியவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிவினைவாத விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே இவர்கள் போராட்டம் நடத்தினர். எமது இராணுவத்தினரால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு நாட்டை மீட்டெடுத்துள்ளனர். தமது உயிரை பணயம் வைத்தே இவர்கள் நாட்டில் அமைதியை ஏற்படுத்தினர்.

இவ்வாறான நிலைமையில் எமது இராணுவத்தினருக்கு எதிராக தடைகள் விதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது இராணுவத்தினரை பாதுகாக்க நாங்கள் எப்போதும் முன்னிற்போம். பிரித்தானியாவால் விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம். பிரித்தானியாவிலேயே போர்க் குற்றவாளிகள் இருக்கின்றனர். உங்களின் இராணுவமே ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தானில் கொலைகளை செய்துள்ளன. எமது இராணுவம் அவ்வாறு சர்வதேச சட்டத்தை மீறிச் செயற்படவில்லை. மனித உரிமைகளை பாதுகாத்தே செயற்பட்டது. இவ்வாறான எமது இராணுவத்திற்கே நீங்கள் தடைகளை போட்டுள்ளீர்கள்.

எவ்வாறாயினும் பிரித்தானியாவின் தற்போதைய அரசாங்கத்திற்கு நாங்கள் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றோம். நீங்கள் எமது இராணுவத்தினர் மீது விதித்துள்ள தடைகளை நீக்கிக்கொள்ள வேண்டும். இங்குள்ள திசைக்காட்டி அரசாங்கத்தை நீங்கள் உங்கள் முன்னால் மண்டியிடச் செய்தாலும் இந்த நாட்டு மக்கள் மண்டியிட மாட்டார்கள். 1818இல் உங்கள் முன்னால் மண்டியிடாத கெப்பிட்டிபொல, எல்லபொல போன்ற மக்களே இருக்கின்றனர்.

நாங்கள் எமது இராணுவத்தினர் மீது கை வைக்க இடமாளிக்க மாட்டோம். பிரித்தானியா போன்ற நாடுகள் எமது இராணுவத்தினருக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்கள் மீது கைவைக்க வந்தால் உயிர்த் தியாகம் செய்தாவது எமது இராணுவத்தினரை பாதுகாப்போம் என்ற செய்தியை கூறவே நாங்கள் இங்கே வந்துள்ளோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *