பட்டலந்த குற்றச்சாட்டுக்களால் ரணிலுடன் சேர சஜித் தரப்பு பின்னடிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி முற்றாக நிராகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், பிணைமுறி மோசடி, பட்டலந்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ரணில் விக்ரமசிங்கவுடனோ அல்லது வஜிர, ராஜித, ஹரின் மற்றும் மனுஷ நாணயக்கார போன்ற மக்கள் ஆதரவு இல்லாதவர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியிலோ இணையக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் தொடர்ந்தும் அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை வலியுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி குற்றசாட்டுகளற்ற ஒரு குழுவினரை கொண்டிருப்பதால், குற்றச்சாட்டுகளைக் கொண்ட குழுக்களுடன் தொடர்புபடக்கூடாதெனவும் ஐக்கிய மக்கள் சக்தியில் பேரம் பேசுபவர்கள் இருக்கக்கூடாதெனவும் அவ்வாறு இருந்தால், அவர்களை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிராம மட்டத்தில் உள்ள அடிமட்டக் கட்சி உறுப்பினர்களும் தொகுதி அமைப்பாளர்களும் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இல்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்களின் இந்த அறிவிப்பால், ரணில் விக்ரமசிங்கவுடன் ஒப்பந்தங்கள் செய்த வியாபாரிகளும், ரணிலிடமிருந்து பார் உரிமங்களையும் நிதியையும் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க மீது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் காரணமாக, இருக்கட்சிகளும் இணைவது தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுக்ககூடாதெனவும் அம்முடிவை கைவிடுமாறும் அக்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையால், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.