இலங்கை

வடக்கில் 600 இடங்களில் தொல்பொருள் மையங்கள்; தையிட்டியில் போலி ஆவணங்களுடன் போராட்டம் 

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் உரிமம் கோருவதற்காக போலியான ஆவணங்களை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக சம்பத் மதுகொட வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,

யாழ்ப்பாண த்திலுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இதுவரையில் உறுதியான தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த விகாரை 1956 ஆம் ஆண்டு நகர திட்ட வரைபடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த விகாரையை அண்மித்த பகுதியில் உள்ளவர்கள் உரிமை கோருவதற்காக போலியான ஆவணங்களை வைத்துக்கொண்டு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

எனவே தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விசேட குழுவை நியமிக்க வேண்டும். இந்த விகாரையை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் குடியிருப்பவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்.

முல்லைத்தீவு குருந்தூர் மலையிலும் இதே பிரச்சினை . நீதிமன்ற உத்தரவினால் ஆராய்ச்சி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் பௌத்த மத தொல்பொருள் சின்னங்கள் அழிவடைவதற்கு காரணியாக அமையும். குருந்தூர் மலையில் நில அளவையியல் திணைக்களம் சட்ட ரீதியில் காணி எல்லைகளை அடையாளப்படுத்தியுள்ள நிலையில் ஒரு தரப்பினர் தொடர்ந்து முரண்பாடுகளை ஏற்படுத்துகிறார்கள்.

வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் பௌத்த விகாரை மற்றும் தொல்பொருள் சின்னங்களை பிரச்சினைக்குரியதாக்கி அதனூடாக அரசியல் செய்கிறார்கள். வடக்கு மாகாணத்தில் 600 இடங்கள் தொல்பொருள் மையங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரித்து, தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் .

அரசியல்வாதிகள் தொடர்பில் சமூக கட்டமைப்பில் வெறுப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் தான் அரசியல் செய்கிறோம். மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். மத தலங்கள் மற்றும் பிரிவெனா உட்பட மத பாடசாலைகள் அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.

மத நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கான திட்டங்களை குறிப்பிடவில்லை. மத தலங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.