பலதும் பத்தும்

2 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை!

ஹங்கேரியில் 2 அல்லது 2 க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பின்னடைவை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில், அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன்(Viktor Orbán) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு 30 வயது வரை வருமான வரியிலிருந்து விலக்கும், அதே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு, 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் தாய்மார்களுக்கு வருமானவரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் விலக்கு என்று அறிவிக்கப்பட்ட திட்டம்தான், தற்போது விரிவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில்,அதற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இளம்பெற்றோருக்கு உதவுவதற்காக ஹங்கேரி அரசு ஏற்கெனவே, வட்டி இல்லா கடன், 3 குழந்தைகள் பிறந்த பின்னர் கடன் இரத்து போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button