பாஜகவின் வெற்றிமுகம் வீறுகொள்கின்றதா?… நியூசிலாந்து சிற்சபேசன்


இந்திய அரசியலிலே, பாரதிய ஜனதாக் கட்சியினுடைய (பாஜக) வளர்ச்சி கவனிப்பைப் பெறுகின்றது. 2014லிருந்து தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வெற்றியீட்டியிருக்கின்றது.
இந்தியாவிலே, 28 மாநில சட்டசபைகள் உள்ளன. எட்டு ஒன்றியப் பிரதேசங்கள் உள்ளன. அதிலே, டெல்லி, ஜம்மு-காஷ்மீர், பாண்டிச்சேரி ஆகிய மூன்று ஒன்றியப் பிரதேசங்களிலேயும் சட்டசபைகள் உள்ளன. அந்தவகையிலே, மொத்தமாக 31 சட்டசபைகள் உள்ளதாகச் சொல்லலாம். அதில், 21 சட்டசபைகளிலே தனித்தோ அல்லது கூட்டணியாகவோ ஆட்சியதிகாரத்தை பாஜக கொண்டிருக்கின்றது.
காங்கிரஸ் கட்சியின் கையாலாகாத்தனம், எதிர்கட்சிகளின் ஒற்றுமையீனம் போன்றவை பாஜகவுக்கு வாய்ப்பாகிவிடுகின்றது. அதனால் லாவகமாக வளர்ச்சியடைகின்றது.
பெரியதும் சிறியதுமான இரண்டு குச்சிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அதிலே, பெரியகுச்சியைத் துண்டுகளாக உடைக்கும்போது, சிறியகுச்சி பெரியதாக்கப்படுகின்றது அல்லவா?. அதனையே பாஜக லாவகமாகச் செய்கின்றது.
மகராஷ்டிர மாநிலத்திலே சிவசேனா கட்சி வலுவானதாக காணப்பட்டதாகும். 1966ல், குடியேறிகளுக்கு எதிரான கட்சியாகவே ஆரம்பிக்கப்பட்டது. மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை என்னும் கோஷத்துடன் வளர்ச்சியடைந்தது. ஆனால், காலவோட்டத்தில் மராத்திக் கோஷம் வலுவிழந்தது. அதனால், இந்து தேசியவாதத்தை வரித்துக்கொண்டது. அதன்மூலமாக சக்திவாய்ந்த பிராந்தியக் கட்சியாக வளர்ச்சியடைந்தது. கூடவே, குடும்ப ஆதிக்கம் கட்சியிலே அதிகரித்தது. வாரிசுப் போட்டி ஏற்பட்டது. அதனால் அதிருப்தியாளர்கள் பெருகினார்கள்.
அத்தகையை சூழலிலேயே பாஜகவின் ஆட்டம் ஆரம்பமாகியது. சிவசேனாவின் அதிருப்தியாளர் ஏக்நாத் ஷிண்டேவை முன்னிறுத்தி, “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை” பறித்துக்கொண்டது. சிவசேனா உடைக்கப்பட்டது. மாநிலத்தின் ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது.
மற்றுமொரு வலுவான கட்சியான, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சிக்கலுக்குள்ளாகியது.
இரண்டு கட்சிகளுடைய உடைவும் ஒரே “வார்ப்புரு”விலேயே ஒப்பேற்றப்பட்டன. அதிருப்தியாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். எம்எல்ஏக்களின் கிளர்ச்சி உருவாக்கப்பட்டது. சட்டசபையிலே எண்ணிக்கைப் பலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே சட்டபூர்வமான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டது. அதேபோன்று, அஜித் பவார் தலைமையிலான அணியே சட்டபூர்வமான தேசியவாதக் காங்கிரஸ் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

முன்னொருகாலத்தில், கட்சித்தாவல் என்பது தனிப்பட்டவர்கள் பிரிந்து செல்வதோடு முடிந்துவிடுவதாகும். ஆனால், இன்றையகாலகட்டத்திலே அதிருப்தியாளர்கள் ஒன்றுதிரள்கின்றனர். ஒட்டுமொத்தமாகவே கிளர்ச்சி செய்கின்றனர்.
அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.
ஒன்று, கட்சித்தாவல் சட்ட ஏற்பாடுகளின் தன்மையாகும். ஒரு கட்சியின் பாராளுமன்றக் குழுவில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் பிரிந்து சென்றால், அவர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கமுடியாது என்றே இந்திய கட்சித்தாவல் தடைச் சட்டம் சொல்கின்றது.
மற்றையது, இந்திய அரசியலிலே பாஜக தனித்த பலசாலியாக ஆகியிருக்கின்றது. அதனால், அரசியல் சமன்பாடு மாற்றமடைந்திருக்கின்றது. அதிகாரம், பணம், பாதுகாப்பு போன்றவை “அதிருப்தியாளர்”களுக்குத் தாராளமாகவே கிடைக்கின்றன. அதனால், கட்சிகளை உடைப்பதற்கு “கரும்பு தின்னக் கூலியா?” என்று கேட்கக்கூடிய காலமாகியிருக்கின்றது.
ஊழலுக்கு எதிரான அனா ஹஸ்ரேயின் போராட்ட பாதையிலிருந்து உருவாகியதே ஆம் அத்மி கட்சியாகும். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலே வீறுகொண்டது. டில்லியிலும், பஞ்சாபிலும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டது. அஃது அதிகார மையங்களை உறுத்தியது. அதனால், அக்கட்சியை வலுவிழக்கச்செய்யும் நகர்வுகள் ஆரம்பமாகின.
முதலில் மதுபானக் கொள்கை முறைகேடு, ‘ஷீஷ் மஹால்’ விவகாரம் போன்ற ஊழல் புகார்கள் எழுந்தன. அதனூடாக ஆம் ஆத்மியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டது. டெல்லி முதலமைச்சராகப் பதவிவகித்த அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, கெஜ்ரிவால் குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டார். ஆனாலும்கூட, அவருடைய பிம்பம் உடைக்கப்பட்டுவிட்டது. அதனால் உட்கட்சிப் பூசல்கள் பெருகின. அதிருப்தியாளர்கள் அதிகரித்தனர்.
2026 ஏப்ரலில், ஆம் அத்மிக் கட்சியின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களிலே ஏழு பேர் – அதாவது மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் – ஒரே நாளில் கட்சியிலிருந்து விலகினார்கள். பாஜாகவில் இணைந்துகொண்டனர்.
அதே பாணியிலே, மேற்கு வங்கத்திலும் காட்சிகள் விரிந்தன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் உடைவுகள் ஏற்படுத்தப்பட்டன. கட்சியின் மரபுகளையும், கட்டுக்கோப்பையும் மீறுவதற்கு கிளர்ச்சியாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

அக்கட்சி 80 உறுப்பினர்களைச் சட்டசபையிலே கொண்டிருந்தது. அதிலே, மூன்றில் இரண்டு பங்குக்கு அதிகமான எண்ணிக்கையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 58 அதிருப்தி எம்எல்ஏக்கள் திரண்டனர். அதனால், கட்சியின் உடைவு, சட்டசபையிலே, வெள்ளிடை மலையாகியது.
அதனுடைய பிரதிபலிப்பு டெல்லியிலும் எதிரொலித்தது.
பாராளுமன்றத்திலே, 28 உறுப்பினர்களை அக்கட்சி கொண்டிருந்தது. அதிலே, 20
வரையானோர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ‘இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி’ என்னுமொரு “லெட்டர் பேட்” கட்சியில் இணைந்துகொண்டனர். அதனூடாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆக, “எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்பதாக கிளர்ச்சியின் பின்னணி துல்லியமாக வெளியாகியது.
இத்தகைய சம்பவங்கள் “மாதிரிக்கு” ஒருசில உதாரணங்களேயாகும்.
பாஜக திட்டமிட்டுச் செயல்படுகின்றது. சாம – பேத – தான – தண்டம் என அனைத்து வழிகளையும் பயன்படுத்துகின்றது. அதனால், “சொல்லி வைத்து” வெற்றி பெறுகின்றது.
அதனாலேயே, பாஜகவின் வெற்றிமுகம் வீறுகொள்கின்றமை யதார்த்தமாகின்றது.
![]()