கதைகள்

ஆகாயப்பந்தல் 15….  ஏலையா க.முருகுதாசன்

ஏலையா க.முருகுதாசன்

ஒரு நாள் அடங்கலுக்குள் ஒவ்வொரு விநாடிப் பொழுதுகளின் ஒவ்வொரு விநாடியையும் கடந்து செல்லும் செயல்பாடுகள்,ஒருவரோடொருவர் பல்வேறுபட்ட காரணங்களுக்காக பல்Nவுறுபட்ட தேவைகளுக்காக தொடர்பாடும் தொடர்பே மனிதர்களினால் அந்தந்த நாட்களில் மேற்கொள்ளம் நடவடிக்கைகளாகின்றன.
சரவணன் தன்னுடன் படிக்கும் மதுசாவை தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து இன்னும் பிற்பகல் இரண்டு மணியாகக்கூடவில்லை.
இந்தக் நேரக் கால இடைவெளிக்குள்ளேயே மதுசா தன்னோடு படித்தவன் வீட்டுக்கு வந்த போது இருந்த மனநிலையைவிட இப்பொழுது அவள் விநாடிக்கு விநாடி தனக்குள் ஏற்படும் அந்த மாற்றத்தை அவளால் படிப்படியாக உணர முடிகின்றது.

சரவணன் வீட்டின் வாசல்படியில் அவள் காலடி எடுத்து வைச்ச விநாடியே, அவளின் உடல் ஒரு சுகமான அதிர்வை உணர்ந்த போது அது மனித உடலில் அப்பப்ப எழும் கிளர்ச்சிப் புளகாங்கிதம் அல்லது புல்லரித்தல் என்றுதான் நினைச்சுக் கொண்டிருந்தவளுக்கு வீட்டுக்குள் வந்து சரவணனின் அப்பா அம்மா தங்கச்சியார் என எல்லோரையும் சந்திச்ச போது அவர்களின் இயல்பு தான் பிறந்து உலகை அறிந்ததிலிருந்து இதுவரை பார்த்த மனிதர்களின் இயல்பு போல இல்லையே,இன்னும் தன்னுடன் கூடவே வாழும் அப்பா அம்மாவின் இயல்பு போல இல்லையே என சில நிமிட இடைவெளிகள் அவளை உணர வைத்த போதும்,தனது நினைப்புத்தான் தவறானதோ என்ற எண்ணத்துக்குள்ளும் அவள் சென்று வந்தாள்.
நாம் ஒருவருடன் அல்லது பலருடன் கதைச்சுக் கொண்டிருக்கும் போது அச்சூழ்நிலை வேறொரு உளவியல் தளத்தில் சென்று கொண்டிருக்கும்.மதுசா சரவணனின்; வீட்டுக்குள் அடியெடுத்து வைச்சு அந்தப் பறவைகளைப் பார்த்த போது அந்தப் பறவைகளின் தோற்ற வெளிப்பாடும் அவற்றின் நிறங்களும் மனிதர்களுக்கு உள்ளது போன்ற கண்களும் அவளை சரவணனின் குடும்பத்தினர் யார் என ஒரிரு விநாடிகள் சிந்திக்க வைத்தன.தான் வேற்றக்கிரகத்தின் மனிதர்களுடனா இப்பொழுது சந்திச்சுக் கொண்டிருக்கிறேன்,அப்படியாயின் அவர்களால் எப்படி பூமியில் வாழ முடியும்,அவர்கள் எப்பொழுது பூமிக்கு வந்தார்கள் என மதுசா தன்னை மறந்து குத்திட்ட சிந்தனைக்குள் ஓரிரு விநாடிகள் அமிழ்ந்திருந்தாள்.

தங்களைப் பற்றி மதுசா என்னவெல்லாம் யோசிப்பாள் என்பது மகேந்திரராஜா,சசிகலா,சரவணன்,சாரிணி என எல்லோருக்கும் தெரிந்தேயிருந்தது.
மதுசாவை தனது குடும்பத்து மருமகளாக எடுக்க வேண்டும் என்பதோ மதுசா தனக்கு அண்ணியாக வரவேண்டும் என்ற எண்ணமோ மதுசா தங்கள் வீட்டுக்கு வந்த இன்று எடுத்த முடிவு அல்ல.

ஒரு மாசத்துக்கு முன்னர் மதுசா, சரவணன,; சாரிணி படிச்சுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைவிழாவில் மதுசா ஆடிய நடனத்தைப் பார்த்துவிட்டு அவளுடைய இயல்பை மகேந்திரராசாவாலும் சசிகலா,சாரிணியாலும் தங்களை மறந்து இரசித்த போது சாரிணிதான் பெற்றோரிடம் அம்மா மதுசாவைப் பார்த்தியா எவ்வளவு குணமா இருக்கிறாள் அவள் எங்கள் வீட்டுக்கு மருமகளாக வந்தால் அணணனுக்கு ஒரு நல்ல மனைவி கிடைச்சதாக இருக்குமம்மா என்ற அவள் சொல்ல அருகில் நின்ற சரவணனும் அதைக் கேட்டு இரசிச்;சுக் கொண்டிருந்தான்.ஆனால் தனக்கும் அதில் விருப்பம் என்பதைக் காட்டிக் கொள்ளவேயில்லை,கேட்டும் கேளாதமாதிரியிருந்தான்.
ஏற்கனவே மதுசா மீது ஒரு ஈர்ப்பிலிருந்த சரவணன் தனது தங்கச்சியார் மதுசா தனக்கு மனைவியாக வரவேண்டுமென்ற விருப்பத்தை தங்கள் வீட்டுக்கு மருமகளாக வரவேண்டும் என்று சொன்னதைக் கேட்டதும் தான் மதுசாமீது இரகசியமாகக் கொண்ட காதலுக்கு இவ்வளவு சீக்கரத்தில் தனது வீட்டில் தனது தங்கச்சியார் மூலமாக அனுமதி கிடைச்சதை அவன் எதிர்பார்க்கவேயில்லை.
காதலர்கள் தமது காதலைப் பலவிதமாக வெளிப்படுத்தவார்கள்.காதலர்களில் பெண்கள் வெளிப்படையாகவோ வேகமாகவோ தமது காதலை வெளிப்படுத்தமாட்டார்கள்.

ஆனால்,ஆண்கள் தாம் விரும்பும் காதலியின் சுவாசத்தை அருகிருந்து உருசிக்கவும்,காதலியின் சருமத்திலிருந்து வரும் வாசனையை,அவளின் தலைமயிரிலிருந்து வரும் வாசனையை,அவளின் உடையிலிருந்து வரும் வாசனையை,தனது காதலி தலைக்கு சீயாக்காய் அரைச்சுப் போட்டுக் தலைமுழுகியிருந்தால்கூட காதலனுக்கு அது தேவலோகத்து கன்னிகள் வாசனைத் திரவியங்கள் போட்டு குளித்துவிட்டு ஈரம் துடைதச்சது பாதி துடைக்காதது பாதியாக ஆங்காங்கே தண்ணீர்;;த் துளிகள் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்க தன்னெதிரே வந்து நின்றது போல கற்பனை முளையிலிருந்து தொடங்கி உடலெங்கும் பரவுவது போல இருக்கும்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் காதல் அரும்புவதுகூட ஒருவருக்கொருவர் ஏதோவொருவகை ஈர்ப்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்,இல்லையெனில் எப்பேர்ப்பட்ட உலக மகா அழகியாகவிருந்தாலும் சரி, கம்பீரமான ஆணழகனாகவிருந்தாலும் மகா அழகி என்பதற்காக அவள் மீது ஒரு ஆணுக்கோ அல்லது கம்பீரமான ஆண் என்பதற்காக ஒரு பெண்ணுக்கோ காதல் வரவே வராது.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் ஒருவருக்கொருவர் கண்டறிய முடியாத ஒரு ஈர்ப்பும் வசியத்தன்மையும் இருந்தால் மட்டுமே காதல் வரும்.
சசிகலா மகேந்திரராசா குடும்பத்தினர்,வேற்றுக்கிரகவாசியினராக இருந்த போதும் அவர்களின் உடல் பழக்கவழக்கங்கள் யாவும் பூமி மனிதர்களைப் போலவே இருந்ததனால் போகும் நகரத்து தமிழ்மக்களுக்கு அவர்கள் மீது துளியளவும் சந்தேகம் வரவேயில்லை.

போகும் நகரத்தில் மட்டுமல்ல ஜேர்மனி எங்கும் உள்ள நகரங்களில் இருந்த இலங்கைத் தமிழர்கள்,இலங்கையில் பல ஊர்கலிலிருந்து வந்தவர்களாகையால் மகேந்திரராசா சசிகலா குடும்பத்தினரும் இலங்கையில் ஏதோ ஒரு ஊரிலிருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற ஊகத்தில் அவர்களின் ஊரைப்பற்றி விசாரிக்கும் ஆர்வம் அந்நகர தமிழர்களுக்கு ஏற்படவில்லை.
மகேந்திரராசா குடும்பம்,போகும் நகரத்தில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கோ,பிறந்தநாள் நிகழ்வுகளுக்கோ மிகவும் அரிதாகவே சென்று வந்தனர்.

பொதுவாகவே யாழ்ப்பாணத் தமிழர்கள,கிழக்கு மாகாணத் தமிழர்களின் கொண்டாட்டங்களில் பெரிதாகக் கலந்து கொள்வதில்லை.அதைப் போல கிழக்கு மாகாணத் தமிழர்களும் யாழ்ப்பாணக்குடாநாட்டுத் தமிழர்களின் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதில்லை.கொழும்புத் தமிழர்களும் அப்படித்தான்.

இலங்கையில் தமிழர்கள் தம்மை யாழ்ப்பாணத்தான், மட்டக்களப்பான்,கொழும்பான்,மன்னாரான்,வன்னியான் எனப் பிரித்தப் பார்ப்பார்கள்.பலம்பெயர்ந்த நாடுகளிலும் அவர்களைவிட்டு அது போகவேயில்லை.

மகேந்திரராசா குடும்பம் தம்மை யார் என்று வெளிப்படையாகச் சொல்:லாமலிருப்பதற்கு இலங்கைத் தமிழர்களின் இப்பழக்கவழக்க அணுகுமுறை அவர்களுக்குப் பாதுகாப்பானதாகவே இருந்தது.

மகேந்திரராசா தங்களுடைய பரம்பரை யாழ் குடநாட்டிலுள்ள வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்களென்றும் தமது ஐஞ்சு பரம்பரையினருக்கு முன்னரானவர்கள் கல்கமுவ என்ற சிங்களக் கிராமத்துக்கு போய் வாழ்ந்தவர்கள் என்றும் அவர்களின் பரம்பரையினரே தாம் என்றும்,மகேந்திரராசா குடும்பத்தினர் என்ன பகுதியினர் என்பதை அறிஞ்சு கொள்வதற்காகத் துருவிக் கேட்ட போது இந்தப் பதிலைச் சொன்னதும் தமிழர்கள் அரிதிலும் மிக அரிதாக ஒன்று இரண்டு தமிழ்க் குடும்பத்தினர் அதுவும் இந்திய வம்சாவழியினர் ஆங்காஙகே சிங்கள ஊர்களிலுள்ள தென்னந்தோட்டங்களில் வேலை செய்வதால் இவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் அவையின்ரை கதைபேச்சைப் பார்க்கேக்கிலை யாழ்ப்பாணத்தாரான எங்கடை பேச்சு மாதிரியாகவா இருக்குது என்றும், அவை யாராக இருந்தால்தான் நமக்கென்ன என்பது போல அப்பப்ப மகேந்திரராசா குடும்பம் யாராக இருக்கும் என்று பேச்சு வரும் போது,தங்கடை அடி வட்டுக்கோட்டையென்று சொல்லுகினம் எனக்கென்றால் அதில் நம்பிக்கையில்லை இவை கண்டித் தேயிலைத் தோட்டத்திலை வேலை செய்யிறவையின்ரை ஆட்களாகத்தான் இருக்க வேணும் என்று அவையவையின்ரை ஊகத்திற்குத் தற்காலிகமாக கொம போட்டு வைச்சிடுவினம்.
சரவணனுக்கு மதுசா மீது ஒரு ஈர்ப்பு இருந்தாலும் அதனை அவன் ஒரு போதும் பல்கலைக் கழகத்தில் வைச்சு சாடைமாடையாகக்கூடக் காண்பிக்கவில்லை.
காதலின் ஆரம்பத்தைக் காதலர்களில் எல்லோரும் ஒரே மாதிரியாகக் காண்பிப்பதில்லை.மதுசாவை தனது வீட்டுக்குச் சரவணன் கூட்டிக் கொண்டு வரும் போது தனது உள்விருப்பத்தை கார்ப் பிரயாணத்தின் போது அவன் சாடைமாடையாகக் காண்பிக்கவும் இல்லை.

ஒரு சக மாணவியைத் தனது பெற்றோருக்கு அறிமுகப்படுத்துவதற்காக கூட்டிக் கொண்டு போகிறான் என்றுதான் மதுசாவின் பெற்றோரும் நினைச்ச போதும்,உளவியல் படிப்பில் பட்டதாரியான சகுந்தலா,இவ்வளவு அக்கறையாக தனது பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைக்கவென எதற்காக கூட்டிக் கொண்டு போவான் ஒரு வேளை மதுசா மீது சரவணனுக்கு ஈர்ப்பு இருக்குமோ என நினைக்காமலும் இல்லை,சகுந்தலாவும் மதுசாவின் வயசைக் கடந்து வந்தவள் பருவ வயசையடைந்த பொழுது பாடசாலையில் சக மாணவர்களில் ஒருசிலரில் ஏற்பட்ட பருவவயது ஈர்ப்பு இறுதியில் தனக்கப் பொருத்தமானவர் என ஒருவரைத் தேர்ந்தெடுப்பவரான போது அது பாடசாலையில் தனது வகுப்புச் சக மாணவன் வேலானந்தன்தான் தனக்கானவன் என்ற இறுதி முடிவில் வந்து நின்றது.
பல்கலைக்கழகத்தில் வேலானந்தன் பூகோளவிற்பவியலை தனக்கான விருப்புப் பாடமாக தேர்வு செய்த போது சகுந்தலா உளவியல் பகுப்பாய்வுப் பாடத்தைத் தேர்வு செய்தாள்.

வேலானந்தன்தான் தனது வாழ்க்கைத்துணை என அவள் முடிந்த முடிவு என முடிவெடுத்த போதும் மலையைக்கூட அசைக்கும் புயல்போல பல்கலைக்கழக வாழ்க்கையில் அங்கும் சக மாணவர்களுடன் வேலானந்தனை அவளுடைய மனம் தடுமாறி ஒப்பிட்ட போது,அவள் தேர்வு செய்த உளவியல் பகுப்பாய்வுப் பாடம் அவளின் சலன அசை தடுத்து நிலைநிறுத்தியது.

சகுந்தலா உளவியல் பகுப்பாய்வுப் பாடப் பிரிவில் பட்டதாரியாகிய போது அவள் மனங்களை அறுவை சிகிச்சை செய்து பார்ப்பது போல அவள் மனத்தின் மிக நுண்ணிய அசைவுகளையும் அறிந்து கொண்டாள்.

அதனால்தான் தனது மகள் சரவணனுடன் போகும் போது ஏதோ சக மாணவனுடன் போகிறாள் அவனின் நண்பியாக என்பதற்கப்பால் அவளுக்குச் சரவணன் மீது நட்புத் தாண்டிய ஏதோ இருக்கலாம் எனவும் சிந்திக்கத் தவறவில்லை.மதுசா மற்றைய நிறங்களைவிட மஞ்சள் நிறத்தையே அதிகம் விரும்புகிறவள். சரவணனுடன் போகும் போது மஞ்சள் சீலையை உடுத்திக் கொண்டும்,சரவணன் வீட்டுக்கு கொண்டு போகவென வாங்கி வைச்சிருந்த றோசப்பூக் கொத்தினைக் கொண்டு போனதைப் பார்த்த போது கடவுள் என்ன கணக்கைப் போட்டு வைச்சிருக்கிறானோ தெரியாது என்று நினைச்ச சகுந்தலா, இரு உடல்களின் உளவியல் உளவலைகள் கலந்திடலாம் என்று அவள் நினைச்சதை அவளுடைய மூளை தடுக்கவேயில்லை.

(தொடரும்…)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button