இலங்கை

தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி கன்னியாவில் புத்த விகாரை கட்ட அடிக்கல் நாட்டி வைப்பு; காணி உரிமையாளர் நீதிமன்றில் மனு

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய காணியில் தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சைத்தி(விகாரை)கட்டுவதற்கான அடிக்கல் நேற்று புதன்கிழமை நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

வில்கம் விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்சதிஸ்ஸ தேரரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகாமையில் தொல்லியலுக்குரிய இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான உறுதிக் காணியில் குறித்த கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுளது. இதற்கான அடிக்கல்லை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.எம்.ஹேமந்த குமார, திருகோணமலை மாவட்ட தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.யூ.சுரங்க பெரேரா உள்ளிட்ட பலர் நாட்டி வைத்தனர்.

இந்தத் தொல்லியலுக்குரிய பகுதி என கூறப்படும் பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான பகுதியில் விகாரை ஒன்று கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில் அதனை எதிர்த்து 16.07.2019 அன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருகோணமலை மடத்தடி மாரியம்மன் ஆலய தர்மகர்த்தாவும், கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலய தர்ம கர்த்தாவும் நம்பிக்கைப் பொறுப்பாளருமான திருமதி கோகிலரமணி என்பவர் பௌத்த மத ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ஆலோசனைக்கு அமைய திருகோணமலை மேல் நீதிமன்றில் 22.07.2019 அன்று வழக்கு ஒன்றை தாக்கல் செய்து ஐந்து தடை ஆணைகளை விதிக்கும்படி கோரியிருந்தார். குறித்த பகுதி தொல்லியலுக்கு உரியது என்ற காரணத்தால் பிள்ளையார் ஆலயம் கட்டுவதற்கான பிறிதொரு இடத்தில் 10 பேர்ச் காணி வழங்கப்பட்டிருந்தது.

இதன்பின்னர் அப்பகுதியில் தொல்லியத் திணைக்களத்தினால் தொடர்ச்சியாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் குறித்த பகுதியில் விகாரை கட்டுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் நேற்று முன் தினம் (21) உப்புவெளி பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆயத்த வேலைகளை பார்வையிட்டனர் இதன்போது கட்டுமானங்களுக்குத் தேவையான செங்கற்கள் உள்ளிட்ட பொருட்கள் இறக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர். அத்துடன் இது தொடர்பாக திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசனும் அரச தரப்புகளுடன் பேசியதாகவும் அதற்று மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

இந்தப் பகுதியில் பௌத்த கட்டுமானம் இடம்பெறவுள்ளதாக கூறப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அரச தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் எவ்வித புதிய கட்டுமானங்களும் இடம்பெறாது எனவும் சிதைவடைந்து இருக்கின்ற தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இடம்பெறுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (22) குறித்த இடத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதேவேளை திருகோணமலை மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்யும் முகமாக மடத்தடி மாரியம்மன் ஆலய தர்மகர்த்தாவும், கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலய தர்ம கர்த்தாவும் நம்பிக்கைப் பொறுப்பாளருமான திருமதி கோகிலரமணி என்பவரினால் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஊடாக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கையும் நேற்று (22) மேற்கொள்ளப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button