மண்டூர் அசோகாவின் ‘கனவுகள் சுமக்கும் காலம்’ கவிதைத் தொகுப்பு நூல் ஒரு மதிப்பீடு…. சோலையூர் குருபரன்

கவிதை என்பது வாசகரை வெறுமனே ‘வாசிக்க’ வைக்காமல், அவரை ‘யோசிக்க’ வைக்க வேண்டும். அவரது சொந்த உணர்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க வைக்கும் கவிதைகளே காலத்தைக் கடந்து நிற்கும். அத்தகைய காலத்தைக் கடந்த கவிதைகள் பலவற்றை மண்டூர் அசோகாவின் புனைவுகளில் இருந்து காணலாம். இத்தகைய போக்கை அவரின் நாவல், சிறுகதைகளிலும் காண முடிகிறது. இலங்கையில் பிரபலமான பெண் ஆளுமைகளில் குறிப்பிடத்தக்க ஒருவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் அவருக்குத் தனி இடமுண்டு. வித்துவச் செருக்கு, ஆடம்பரமில்லாமல் இதுவரை கவிதை, சிறுகதை, நாவல், கீர்த்தனை (பாமாலை) என ஆறு நூல்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார். பிரதேசம். மாவட்டம், மாகாணம், தேசியம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட பல விருதுகளக்குச் சொந்தக்காரர். இத்தகைய புகழும் பெருமையும் சிறப்பும் மிக்க மண்டூர் அசோகாவின் (திருமதி. அசோகாம்பிகை யோகராஜா) ‘கனவுகள் சுமக்கும் காலம்’ (2023) கவிதைத் தொகுப்பு பல சிறப்புக்களைக் கொண்டது என்பதை இந்நூலை நுகரும் வாசகர்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள்.
இலங்கையின் தமிழிலக்கியப் பரப்பில் பெண் கவிஞர்களும் புலவர்களும் ஆற்றியுள்ள பங்களிப்பு அளப்பெரியது. சங்க காலம் தொட்டுச் சமகால புதுக்கவிதை யுகம் வரை ஈழத்துத் தமிழ் பெண் ஆளுமைகள் பல நூல்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றனர். வரலாற்று ரீதியாகவும் சமகாலத்திலும் குறிப்பிடத்தக்க பல ஈழத்துத் தமிழ்ப் பெண் கவிஞர்கள் கவிதை இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்களுள் ஒரு மூத்த கலைஞராகவே மண்டூர் அசோகாவைப் பார்க்கின்றேன்.
ஈழத்து இலக்கிய வரலாற்றின் ஆரம்ப காலகட்டங்களில் மரபுவழிக் கவிதைகளையும், பக்திப் பாடல்களையும், சமூக விழிப்புணர்வுப் பாக்களையும் எழுதியவர்கள் பலர் உள்ளனர். அவர்களுள் பலரின் படைப்புக்கள் பாதுகாத்துச் சேகரிக்கப்படாமலும் யார், எவர் எனத் தெரியாமலும் ஆயிரக் கணக்கான கவிதைகள் மறைந்து போயின. 1920, 1925 காலப்பகுதியில் மீனாட்சியம்மாள் நடேசையர், அசலாம்பிகை அம்மையார்/ மங்களநாயகி அம்மாள், ஈழத்து நாச்சிமார் ஆகியோரை மரபுவழிப்பட்ட ஆரம்பகாலக் கவிஞர்களாக இனங்காண முடிகிறது. ஈழத்துத் தமிழ் கவிதை இலக்கியத்தில் பெண் கவிஞர்களின் பங்களிப்பு 1960 வரை மந்தமாகக் காணப்பட்டதை அவதானிக்க முடிகிறது. 1950 களில் பிச்சமூர்த்தி வழி வந்த புதுக் கவிதை மரபிலிருந்து பெரிதும் விலகிய போக்காகவும், பாரதிதாசன் மரவில் இருந்தும், கலைவாணன், ச.து.சு. யோகியார் மரபில் இருந்தம் சாதாரணமான அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு, அதேவேளை அவற்றில் இருந்து வேறுபட்டு ஈழத்துக்கேயுரிய சில தனித்துவங்களுடன் இம்மரபு வளர்ச்சியடைந்தது. மஹாகவி ருத்திரமூர்த்தி, நீலாவணன், முருகையன் முதலியோர் இம்மரபைத் தோற்றுவித்தவர்களில் முக்கியமான கவஞர்களாவர்.
இலங்கையில் 1956 நிகழ்ந்த இனக் கலவரம் இலக்கியப் பரப்பில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. ஈழத்து நவீன தமிழ்க கவிதை சமகாலப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தன. 1960 களின் கவிதைப் போக்கில் சமூகப் பிரச்சினைகளும், முற்போக்குச் சிந்தனைகளும் தமிழ்க் கவிதையின் பிரதான போக்காக அமைந்தன. பசுபதி, சுபத்திரன், புதுவை இரத்தினதுரை, எம்.ஏ.நுஹ்மான், சண்முகம், சிவலிங்கம், மௌனகுரு, ஈழவாணன், இ.சிவானந்தன், மருதூர்க்கனி, பண்ணாமத்துக் கவிராயர், கலைவாதி கலீல், ஜீவா, ஜீவரெத்தனம், வி.கந்தசாமி, காரை சுந்தரம்பிள்ளை, மு.சடாட்சரன், பஸீல் காரியப்பர், பா.சத்தியசீலன், இக்பால், அன்பு முகையிதீன், சில்லையர் செல்வராஜன். மு.பொன்னம்பலம், வெ.குமாரசாமி போன்றோரும் சமகாலச் சிந்தனை ஓட்டத்தில் அன்றைய பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு கவிதை எழுதினர்.
பிச்சமூர்த்தி வழிவந்த கவிதைப் போக்கும், 1970, 1980 களில் மஹாகவி உருத்திரமூர்த்தி வழிவந்த கவிதைப் போக்கும் இழத்தில் ஓரளவு சங்கமிப்பதையும் நாம் காணலாம். சண்முகம், சிவலிங்கம், மு.பொன்னம்பலம், நாவற்குழியூர் நடராஜன், சாரதா, இ.சரவணமுத்து, ஆ. கந்தசாமி, எம்.ஏ.நுஹ்மான், சேரன், மௌனகுரு, புதுவை இரத்தினதுரை, ஜெயபாலன், சோலைக்கிளி, சு.வில்வரெத்தினம், மேமன் கவி, அன்பு முகையிதீன், கருணை யோகன், சிவசேகரம், வசீகரன், சபா ஜெயராஜா, புரட்சிக் கமால், சுபத்திரன், பசுபதி, கருணாகரன், சில்லையூர் செல்வராஜன், மண்டூர் அசோகா ஆகியோரும் 1980 களின் பின்னர் மலைத்தம்பி, சல்மான் கான், அ.சங்கரி, குறிஞ்சித் தென்னவன், முரளிதரன், சீ.வி.வேலிப்பிள்ளை பொன்றோரும் சமகாலப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு கவிதை பாடினர். இக்காலப் பகுதியில் ஒரு சில பெண் கவிஞர்களையே இனங்காண முடிகிறது.
இலங்கையின் நவீன கவிதை வரலாற்றில், குறிப்பாக 1970 களுக்குப் பின்னரான காலப்பகுதியிலும், யுத்த காலச் சூழலிலும் பெண்ணியக் குரலையும், வாழ்வியல் துயரங்களையும் 1970 களின் பின்னர் பதிவு செய்த பெண் கவிஞர்களுள் மண்டூர் அசோகா குறிப்பிடத்தக்கவர். அவர்களுள் அவ்வை (செல்வி) ஈழத்துப் போராட்டச் சூழலையும் பெண்களின் அக, புற வாழ்வையும் அஞ்சாமல் பாடியவர். அவரின் கவிதைகளுள் பல ‘அவ்வை கவிதைகள்’ என்ற தொகுப்பில் வெளிவந்துள்ளது. சிவரமணி மிகக் குறுகிய காலம் வாழ்ந்தாலும், ஈழத்து நவீன கவிதை உலகில் ஆழமான தடம் பதித்தவர். இவரின் கவிதைகள் அவரின் மறைவுக்குப் பின்னர் ‘சிவரமணி கவிதைகள்’ என்ற தொகுக்கப்பாக வெளிவந்தது. சிற்றம்பலம் மைதிலி சமூக அரசியல் மாற்றங்களையும், பெண்களின் நிலையையும் கூர்மையாகப் பதிவு செய்து ‘மறைந்துபோகும் புள்ளிகள்’ என்ற கவிதைத் தொகுப்பாக வெளியிட்டார். அதேபோல், செல்வி திருச்சந்திரன், மைத்ரேயி (விழித்தெழும் கண்கள்), தர்மினி (அகதிப் பறவை) புலம்பெயர்ந்த நிலையிலும் ஈழத்து நினைவுகளையும் பெண்ணியம் சார்ந்த கருத்துகளையும் அகதி வாழ்க்கையின் துன்பியலையும் வெளிக் கொணர்ந்தார்.
இலங்கைப் பெண் கவிஞர்களின் வரலாற்றைக் குறிப்பிடும் போது தனிநபர் நூல்களுக்கு இணையாக, ஒட்டுமொத்தப் பெண் பெண் கவிஞர்களின் கவிதைகளைப் பதிவு செய்த கூட்டுத் தொகுப்பு நூலாக ‘சொல்லாத சேதிகள் (1986) வெளிவந்தது. இந்நூல் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சிவரமணி, செல்வி உட்படப் பல பெண் கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்த முதலாவது பெண்ணியக் கவிதைத் தொகுப்பு இதுவாகும். இதற்குப் பின்னர் பெண் கவிஞர்களின் முழுமையான கவிதைத் தொகுப்பு நூல் இதுவரை வெளிவரவில்லை.
இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பில், குறிப்பாக 21-ஆம் நூற்றாண்டில் பெண்ணியக் குரலையும், உள்நாட்டுப் போர், தற்காலக இடைத்தங்கல் முகாம் வாழ்க்கை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், கைதுகள், இடம்பெயர்வு, பெண்களின் அவலங்கள், புலம்பெயர்வு, சமகால அன்றாட வாழ்வியல் சார்ந்த அனுபவங்களையும் தங்களது கவிதைகள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்து வரும் பெண் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக, மண்டூர் அசோகா, அவ்வை, சுலைஹா, ஷர்மிளா செய்யித், அனார் பர்ஸானா, மைத்தேயி, கெக்கிராவை சஹானா, இன்பா, தீபிகா, வி.அபிவர்ணா, மலர்தேவி (செட்டியூராள்), கவிமகள் எஸ்.ஜெயவதி, போன்றோரையும் குறிப்பிடலாம். இன்று பெரும்பாலான இடங்களில் பல கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளிவருகின்றன. அவற்றுள் ஒரு சில மாத்திரமே வடிவம், உருவம், உள்ளடக்கம், கனதி கொண்டதாக அமைந்திருக்கின்றன.
ஒரு கவிதைத் தொகுப்பை (Poetry Collection) உருவாக்கும்போது, அது வாசகர்களின் மனதைத் தொடுவதாகவும், இலக்கியத் தரம் வாய்ந்ததாகவும் அமைய அத்தொகுப்பு முக்கியமான ஐந்து விடயங்களை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
1. பன்முகத் தன்மை கொண்ட கருப்பொருள்கள் (Diverse Themes). கவிதைத்
தொகுப்பானது ஒரே பாணியில் அமையாமல், மனித வாழ்க்கையின் வெவ்வேறு பக்கங்களைக் கவிதைகள் பேச வேண்டும். காதல், பிரிவு, தனிமை, அகத்தேடல், உறவுகளின் மேன்மை போன்ற அகப் பொருள் சார்ந்த விடயங்களையும், போர், அதனால் ஏற்படத்தக்க இழப்புக்கள், சமூக அவலங்கள், அரசியல் விழிப்புணர்வு, இயற்கை எழில், பெண்ணியம், சமத்துவம் போன்ற புறபொருள் சார்ந்த விடயங்களையும் பேச வெண்டும்.
2. வலுவான மொழிநடை மற்றும் உத்திகள் (Language & Style). தமக்கானதோர் மொழி நடையினையும் பொருத்தமான உத்திகளையும் நயமாகப் பயன்படுத்தல் வேண்டும். தமிழ் மொழியின் அழகைக் கவிதைகளில் கொண்டு வருவது அவசியம். சொல்ல வந்த கருத்தை நேரடியாகச் சொல்லாமல், ஒரு காட்சியைக் கண்முன் நிறுத்துவது போல் எழுதுவது படிமங்களாகும் (Imagery). கவிதைக்குப் படிமங்கள் அழகு சேர்க்கும். அதேபோல, ஆழமான கருத்துகளை உணர்த்த எளிய குறியீடுகளைப் (Symbols) பயன்படுத்துதல் வாசகனைக் கவிதையின்பால் ஈர்க்கச் செய்யும். கவிதைகளில் தேவையற்ற வார்த்தைகளைத் தவிர்த்து, “சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கும்.
3. வடிவங்களின் கலவை (Structural Variety). ஒரே வடிவம் வாசகருக்குச் சலிப்பை ஏற்படுத்தலாம். எனவே, வெவ்வேறு வடிவங்களை முயன்று பார்க்கலாம். இலக்கணக் கட்டுப்பாடு இல்லாத, எளிய நடையிலான புதுக்கவிதைகள், மூன்று வரிகளில் ஆழமான தத்துவத்தையோ, நகைச்சுவையையோ சொல்லும் ஹைக்கூ / சென்ரியு கவிதைகள், யாப்பிலக்கணத்திற்கு உட்பட்ட சில சிறப்பான மரபுக் கவிதைகளையும் சேர்க்கலாம். அது கவிதைத் தொகுப்புக்குக் கம்பீரத்தைக் கூட்டும்.
4. கவிதைத் தொகுப்பின் கட்டமைப்பு (Curation & Layout). கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கும் விதம் மிக முக்கியமானது. ஆரம்பத்தில் வாசகரை ஈர்க்கக்கூடிய எளிய, சுவாரசியமான கவிதைகளையும், நடுவில் ஆழமான தத்துவக் கவிதைகளையும், இறுதியில் மனதில் நிற்கும் படியான கவிதைகளையும் வரிசைக்கிரமமாக வைக்க வேண்டும். கவிதைகளின் தலைப்புகள் சிந்திக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும் தலைப்பற்ற கவிதைகளும் பல சந்தர்ப்பங்களில் தனி அழகு சேர்க்கும்.
5. பிற முக்கிய அம்சங்கள். இலக்கிய உலகில் மதிப்புமிக்க ஒரு ஆளுமையின் அணிந்துரை அல்லது முன்னுரை தொகுப்பிற்குப் பெருமை சேர்க்கும். தொகுப்பின் தலைப்பு ஒட்டுமொத்த கவிதைகளின் ஆன்மாவைத் பிரதிபலிக்கும் வகையில் நூலின் தலைப்பு அமைய வேண்டும். அத்தோடு அவசியமெனில் கவிதைகளுக்குப் பொருத்தமான ஓவியங்கள் அல்லது புகைப்படங்களை ஆங்காங்கே சேர்ப்பது வாசிப்பு அனுபவத்தைக் கூட்டும்.
இத்தகைய பின்புலத்தையும் நுட்பங்களையும் பின்பற்றி ஒரு கவிதைத் தொகுப்பை வெளிக் கொணரும்போது அதற்குத் தனிச் சிறப்பைக் கொடுப்பதோடு வாசகர்களின் கவனத்தையும் ஈர்த்துவிடும். அந்தவகையில் பல அம்சங்களையும் கவனத்தில் கொண்டு தொகுக்கப்பட்டிருக்கும் மண்டூர் அசோகாவின் ‘கனவுகள் சுமக்கும் காலம்’ கவிதைத் தொகுப்பு நூலில் ஒரு சில இடத்தில் தொய்வு காணப்பட்டாலும் மெச்சத்தகுந்த நூலாகவே காணப்படுகின்றது.
மண்டூர் அசோகா நாவல், சிறுகதைகள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், நவீன கவிதைகள், தன்முனைக் கவிதைகள், மண்டூர் முருகன் மீதான பாமாலை, சிறுவர் பாடல்கள், ஆய்வுக் கட்டுரைகள், கவியரங்கக் கவிதைகள் எனப் பன்முக ஆளுமை கொண்டவராக இலக்கிய உலகுக்குத் தன்னை வெறிக்காட்டியவர். அவரைப் பற்றிக் கட்டளைக் கலித்துறை அந்தாதித் தொடயில் சிறியதோர் அறிமுகம்.
மண்புகழ் மண்டூர் பதியினில் தோன்றி வளர்ந்தவளாய் விண்புகழ் கல்லடி தன்னில் வசிக்கும் விளக்கெனவோர் எண்புகழ் வானொலி மெல்லிசைப் பாடல்கள் ஏழிசையாய் பெண்புகழ் சேர்த்தவள் பாரெங்கும் வாழ்த்திப் பெருகுவளே.
பெருகு தமிழினில் எழுபதில் காலடிப் பேறுபெற்றே உருகும் இசைவழிக் கேட்டவர் நெஞ்சினில் ஊறிநின்றாள் வாரத்தில் மூன்றுநா லென்றே ஒலிகள் வழங்கிடவே தாரணி போற்றிட வாழ்ந்திடும் செல்வித் தகைமையதே.
தகைமைய தாகிய கொன்றைப் பூக்கள் தொகுப்பளித்து மிகுமதிப் பார்தே சியவிரு தினைமுதன் மாதரசி அகமகிழ் வெய்திடப் பெற்றுத் தமிழ்மகள் ஆளுமையால் ஜெகமதில் பெண்மைக்கு நல்விரு தாரம்பம் செய்தவளே.
செய்தநல் நூலவன் பாதை மாறியே சென்றபயண் எய்திய பூர்வ மாகாண சாகித்தி யத்தினையே எய்தியே நின்றாள் சிறகொடிந் தபறவை யோடுறவைத் தேடியே நின்றநல் ஏழிலக் கியங்கள் திகழுமே.
திகழுறும் மண்டூர் முருகன் பாமாலைத் தெள்ளமுதும் இகமதில் எழுதப் படாத கவிதை இளங்கனவுச் சுமையணி காலமென் றேபல நூல்கள் சுடரொளியாய்த் தகைபெறு மன்பதில் மேலாக் கதைகள் தங்குமே.
தங்கியே நின்றநூ றாண்டின் கதைகளில் சாலும்வகை மங்கையர் தம்மில் வரலாற்றுப் போக்கினில் மாண்புடையாள் எங்கும் மறுப்பிலா தேயுயர் பீடத் திருக்கையினள் பொங்கு தமிழினில் ஆய்வுகள் செய்திடப் பூத்தவளே.
பூத்த கலாபூ சணமுடன் தேசியப் புத்தகமாம் மாத்தகு சாகித்தி யம்கிழக் கின்தனி மாண்புமிகு ஏத்து விருதுகள் பாரத தேசத் திசைகளுமே கோத்த புகழினள் ஆய்வினர் போற்றும் குலமகளே.
குலமகள் ஆய்வினில் பல்கலைக்கழக மாணவர்தாம் பலமுடன் பட்டப் படிப்பினுக் காய்வுகள் பண்ணினரே நலமிகு ஆசிரியத் தொண்டினில் ஓய்வு நயந்துமிவள் இலகு தமிழினில் என்றும் அழியா திருப்பளே.
மண்டூர் அசோகாவின் (திருமதி. அசோகாம்பிகை யோகராஜா) ‘கனவுகள் சுமக்கும் காலம்’ (2023) கவிதைத் தொகுப்பு வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரே (2026) படிக்க என் கரம் கிடைத்தது. எளிமையான முன்னட்டைப் படத்துடனும், பின்னட்டை ஆசிரியரின் புகைப்படத்துடன் கலாசார உத்தியோகத்தர் திரு. மலர்ச்செல்வனின் நூலாசிரியர் பற்றிய குறிப்பினையும் கொண்டுள்ளது. 126 பக்கங்களைக் கொண்ட இக் கவிதைத் தொகுப்பில நூல் பற்றிய விபரம், சமர்ப்பணம், நன்றிகள், உள்ளடக்கம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதனின் வெளியீட்டு உரையும், ‘காலத்தின் குரல்களாகின்ற கவிதைகள்’ என்ற தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக மேனாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் இறப்பதற்கு முன்னர் இறுதியாக எழுதிய நீண்டதொரு அணிந்துரையும், உங்களுடன் சில வார்த்தைகள்..’ என்ற தலைப்பில் நூலாசிரியரின் முன்னுரையுடனும் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள, நவீன கவிதைகள் உள்ளடங்கலாக 74 கவிதைகளையும் கொண்டு, கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கிறது.
கவிதையில் யாப்பும் உள்ளடக்கமும் உடலும் உயிரும் போன்றவை என்பதை உணர்ந்து கவிதைகளைப் புனைவது சிறப்புத் சேர்க்கும். ஒரு சிறந்த கவிதையின் உள்ளடக்கத்தில் கவிதையின் கரு, உணர்ச்சி, கற்பனை, படிமம், குறியீடு ஆகியவற்றுடன் தரிசனம், தெளிவு, செறிவு, முரண், உள்ளுறை, இறைசசி ஆகிய கூறுகளையும் கொண்டிருப்பதும் விரும்பத்தக்கது. இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் சோகம், விரக்தி, வேதனை, வலி, தனிமை, காத்திருப்பு, பிரிவுத் துயர், காதல், அன்பு, பிரிவு, ஏக்கம், தவிப்பு, குடும்ப உறவுகள், நிச்சயமற்ற வாழ்க்கை, மனித நேயம், போர்க்கால அவலங்கள், இடப்யெர்வு, அகதி வாழ்க்கை போன்ற அகம்சார் தனிமனித உணர்வுகளும், வீரம், ஈகை,, சமூக நீதி, அறம், வரலாறு, சமூகப் பற்று, நாட்டுப்பற்று, தனிமனித உரிமை ஆகிய புறம்சார் விடயங்களும் மகிழ்ச்சி, சோகம், கோபம், வியப்பு, சாந்தம் ஆகிய நவரசங்களும் கவிதைகளின் உள்ளடக்கத்தில் இழையோடி இருக்கின்றன.
இத்தொகுப்பிலுள்ள 74 கவிதைகளுள் 26 மரபுக் கவிதைகளாகும். வெண்பா, அகவல்பா, அகவல் பாவுடன் கலிப்பாவும் கலந்தும் அகவலும் விருத்தப்பாவும் கலந்த யாப்பமைதிகளில் கவிதைகள் புனையப்பட்டிருக்கின்றன. இதில் பத்துப் பாடல்கள் 1975-1977 காலப்பகுதியில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான மெல்லிசைப் பாடல்களாகும். மரபுக் கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதைகளுக்குள் 30 க்கு மேற்பட்ட தன்முனைக் கவிதைகள் (Subjective Poetry / Poetry of Self-Expression) காணப்படுகின்றன. இக்கவிதைகள் யாவும் 1970 முதல் 2015 வரையான காலப் பகுதிக் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
உலக இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் தன்முனைக் கவிதை (தன்முனைப்பு) என்பது கவிஞனின் தனிப்பட்ட உணர்வுகள், சிந்தனைகள், அக உலக வெளிப்பாட்டிற்கு முக்கியத்துவம் தரும் ஒரு வடிவமாகும். இது புற உலகை விபரிப்பதை விட, தன் சுய அனுபவத்தை முதன்மைப்படுத்துவது. பொதுவான சமூகக் கருத்துக்களையோ அல்லது ஒரு கதையையோ கூறுவதை விடுத்து, *”நான்” (The ‘I’) என்ற புள்ளியில் இருந்து கவிஞரின் அகவயமான (Subjective) பார்வையை வெளிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். புற உலகை ஒரு புகைப்படக் கருவி (Camera) போலப் படம் பிடிப்பது பொதுவான கவிதை என்றால், தன் மனதிற்குள் இருக்கும் கண்ணாடியை உலகிற்குத் திருப்பிக் காட்டுவது தன்முனைக் கவிதை ஆகும். கவிதைகளில் இந்த வகையான உத்தி முறைகள் சங்க கால அகப்பொருள் இலக்கியத்தில் இருந்து இன்றைய நவீன கவிதை, புதுக்கவிதை, வசன கவிதை வரை பயன்படுத்தப் பட்டிருப்பதை அவதானிக்கலாம். ‘கனவுகள் சுமக்கும் காலம்’ கவிதைத் தொகுபட்பில் வரும் நித்சனம், வலி, நீயும், நானும், நிராகரிப்பு, வேட்டை, புதுயுகம் போன்ற தலைப்பிலான சில கவிதைகள் தன்முனைக் கவிதைகளுக்குச் சிறந்த உதாரணமாகக் காட்டலாம்.
இத்தொகுப்பிலுள்ள கவிதைபகளில் பெரும்பாலானவை பன்முகத் தன்மை கொண்ட கருப்பொருட்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றன. தலைப்புக்கேற்ப கருப்பொருள் உள்வாங்கப்பட்டுக் கச்சிதமாகக் கவிதைகளைப் புனைந்திருக்கின்றார் மண்டூர் அசோகா. கவிதையின் தெளிவும் செறிவும் கவிதையின் வடிவ நேர்த்தியைத் தீர்மானிக்கின்றன. முரண், முரண்நகை, முரண்நிலை ஆகியன கவிதையின் சுவையைக் கூட்டுகின்றன. உள்ளுறை, இறைச்சி கவிதைக்குக் கூடுதல் ஆழத்தைத் தருகின்றன. படிமம், குறியீடு கவிதைக்கு அழகு சேர்க்கின்றன. இவை அனைத்தின் வழியாகவும் கவிஞன் வாசகனுக்கு ஒரு தரிசனத்தை வழங்குகிறான். இமனை இத்தொகுப்பிலுள்ள 30 க்கு மேற்பட்ட கவிதைகளில் அவதானிக்கலாம.
இக்கவிதைத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் எளிமை, தெளிவு, செறிவு கொண்டதாக இலகுவான மொழி நிடையை ஆசிரியர் கையாண்டிருக்கின்றார். சுருங்கச் சொல்லி விளங்க வைக்க உவமை, உருவகம், படிமம், குறியீடு ஆகியவற்றைப் போதுமானளவு கையாண்டிருக்கின்றார். இதனைப் பெரும்பாலான புதுக்கவிதை, நவீன கவிதைகளில் காணலாம். கனவுகள் சுமக்கும் காலம், நிதர்சனம், பெண்ணும் பொன்னும், பலிக்கடா, எதிர் நீச்சல், பாசப் பிரிவினை போன்ற பல கவிதைகளில் விரவி வருவதை அவதானிக்கலாம். கனவுகள் சுமக்கும் காலம் என்ற தலைப்பிலான கவிதை
‘ஜன்னலின் நான்கு சட்டகங்களுக்குள் ஒரு பஞ்சுப் பொதியென ஒடுங்கி இருந்தது உன் வாழ்க்கை…’ என்ற அடிகளும் அதனைத் தொடர்ந்து வரும் அடிகளும் படிமத்தை நினைவு கூறும் ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாகும்’.
கவிதைக்குப் பெறுமானம் சேர்ப்பவை அதன் வடிவம், உருவம், உள்ளடக்கம் உத்தி ஆகியனவாகும். வடிவம், உருவம் இரண்டும் புறத்தோற்றத்தில் ஒன்று போலவே தென்படும். அதனை ஆழமாகப் பார்ப்பவருக்கே இரண்டினதும் வேறுபாடு தென்படும். வடிவம் என்பது ஒரு கவிதையின் புறக்கட்டமைப்பு.
அது கண்களுக்குத் தெரியும் அதன் சட்டகம். இது யாப்பிலக்கண விதிகளுக்கு உட்பட்டது. (வெண்பா, ஆசிரியப்பா, புதுக்கவிதை, நவீன கவிதை, ஹைக்கூ போன்றவை). எழுத்து, சொல், அடி வரையறை, சீர், தளை, எதுகை, மோனை போன்றவை வடிவத்தைத் தீர்மானிக்கின்றன. ஒரு கவிதை எந்த வடிவத்தில் வாசகனை வந்தடைகிறது என்பதே அதன் உருவமாகும். ஒரு கவிதையில் கருப்பொருள் (Theme) எவ்வாறு கையாளப்பட்டுள்ளது, சொற்கள் எவ்வாறு அடுக்கப்பட்டுள்ளன என்பதை இது குறிக்கும். தமிழ் கவிதைகளின் ‘உருவம்’ கவிதையின் கட்டமைப்பு, யாப்பு முறை, உத்தி, அதன் புறத்தோற்றத்தைக் குறித்து நிற்கும். உருவம் கவிதையின் உள்ளடக்கமும் வடிவமும் ஒன்றிணைந்து வாசகன் மனதில் தோன்றும் ஒட்டுமொத்தத் தோற்றம். புதுக்கவிதை, நவீன கவிதையில் மரபுசார்ந்த “வடிவம்” இல்லாவிட்டாலும், அதன் சொல் அடுக்குகளால் ஒரு தெளிவான “உருவம்” தென்படுவதை அவதானிக்கலாம். அந்த வகையில் மண்டூர் அசோகாவின் இக்கவதைத் தொகுப்பில் உள்ள மரபுக் கவிதை, புதுக் கவதை, நவீன கவிதை என்பவற்றில் கவிதைகளின் வடிவம், உருவம் என்பவற்றில் எந்தளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதைத் தொகுப்பைப் படிக்கும் ஒருவர் கண்டு கொள்வார்.
பாரதியார் தமிழ் மொழிக்கு அறிமுகப்படுத்திய வடிவம் வசன கவிதையாகும். ஆங்கிலத்தில் இதனை ‘Prose Poetry’ என அழைப்பர். செய்யுள் வடிவமோ உரைநடை வடிவமோ இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவத்தில் புனையப்பட்டிருக்கும். இதற்கு யாப்பு (இலக்கணம்) கிடையாது, ஆனால் ஒருவித சந்த நயம் (Rhythm) காணப்படும்.. பாமர மக்களுக்கும் கவிதை சென்றடைய வேண்டும், உணர்வுகளை வெளிப்படுத்த இலக்கணம் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் உருவானது வசனகவிதையாகும்.
புதுக்கவிதை (New Poetry / Free Verse) வசன கவிதையின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியே புதுக்கவிதை ஆகும். ‘மணிக்கொடி’ இதழ் காலக்கட்டத்தில் பிச்சமூர்த்தி, குவளைக்கண்ணன் போன்றோரால் வலுவாகத் தடம் பதிக்கப்பட்டது. யாப்பிலக்கணக் கட்டுப்பாடுகள் அற்றவை. வரிகளின் நீள அகலங்கள் கவிஞனின் விருப்பப்படி அமையும். எதுகை, மோனை போன்றவற்றைத் தேடிப் போட வேண்டியதில்லை, இயல்பாக வந்தால் விரும்பத்தக்கது. சொல்லவரும் கருத்துக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். உருவத்தை விட உள்ளடக்கமே (Content) இங்கு பிரதானமாக அமைந்திருக்கும். சாதாரண மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், காதல், சமூகச் சீர்திருத்தம் ஆகியவை இதன் மையப்பொருளாக அமைந்திருக்கும்.
புதுக்கவிதையின் உள்ளடக்கத்திலும் சிந்தனையிலும் ஏற்பட்ட தத்துவார்த்த மாற்றமே நவீன கவிதை (Modern Poetry) எனப்படுகிறது. இது பெரும்பாலும் பாரதியின் காலத்தில் ஆரம்பமாகி, 1930 களின் பின்னர் முக்கியத்துவம் பெற்று, 1970, 1980 களில் மேலைநாட்டு இலக்கியக் கோட்பாடுகளான பின்நவீனத்துவம், குறியீட்டியல், படிமவியல் ஆகியவற்றின் தாக்கத்தால் புதுவடிவம் பெற்றது. வடிவத்தில் புதுக்கவிதையைப் போன்றதே (கட்டுப்பாடற்றது) ஆயினும் மொழியைக் கையாளும் விதம் முற்றிலும் மாறுபட்டது. இது நேரடியாகப் பொருளைத் தராது. வரிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் குறியீடுகள் (Symbols), படிமங்கள் (Images) மூலம் வாசகன் தான் விரும்பியவாறு பொருளைப் புரிந்துகொள்ள இடமளிக்கும். மனிதனின் உளவியல் சிக்கல்கள், தனிமை, வாழ்வின் ஏக்கம், தவிப்பு போன்ற ஆழமான தத்துவங்களை இது பேசுகின்றது. விக்ரமாதித்யன் / கலாப்ரியாவின் கவிதைகளில் இதனைத் தெளிவாகக் காணலாம். நவீன கவிதைகள் அதன் பொருளை நேரடியாகப் பேசாமல், ஒரு காட்சியைக் கண்முன் நிறுத்தி அதன் மூலம் ஒரு தத்துவத்தையோ அல்லது வாழ்வியலின் முரணையோ வாசகனை யோசிக்க வைக்கும் வகையில் இதன் வரிகள் அமைந்திருக்கும்.
பொதுவாக, யாப்பின் பிடியில் இருந்து கவிதையை வசன கவிதை விடுவித்தது. அதை மக்களுக்கான எளிய வடிவமாகப் புதுக்கவிதை கொண்டு சென்றது. அந்த வடிவத்திற்குள் ஆழமான தத்துவங்களையும், குறியீட்டு அரசியலையும் நவீன கவிதை புகுத்திப் புதுமை சேர்த்தது. இத்தொகுப்பிலுள்ள 20 க்கு மேற்பட்ட நவீன கவிதைகளில் அதன் வடிவம், உருவம், உள்ளடக்கம், உத்தி, அதன் கனதி, படிமம், குறியீடு என்பவற்றில் இருந்து மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இத்தொகுப்பில் வரும் மரபுக் கவிதைகள் பலவற்றில் மகாகவி பாரதியார் கூறுகின்ற
“சுவை புதிது பொருள் புதிது
வளம் புதிது சொற் புதிது
சோதி மிக்க நவ கவிதை
எந்நாளும் அழியாத மகா கவிதை”
என்பதற்கிணங்க நவீன கண்ணொட்டத்தில் அக்காலச் சமூக அவலங்கள், துன்பியல் நிகழ்வுகள், வாழ்க்கைப் போராட்டங்கள், போர்க்கால வாழ்க்கை அவலங்கள் கவிதைகளில் இழையோடி இருப்பதைக் காணலாம். சமாகாலச் சமூகப் பிரக்ஞைகளைத் தன்முனைக் கவிதைகளாகவும், முன்னிலை, படர்க்க்கைப் பொருளில் உள்மன உணர்வுகளை நனவிடை உத்தி ஊடாக வெளிப்படுத்தி இருக்கின்றார் ஆசிரியர். அவ்வாறே மெல்லிசைப் பாடல்கள் பலவும் அமைந்திருக்கின்றன. இந்தப் பண்பு புதுக்கவிதை, நவீன கவிதைகளில் பெரும்பாலானவற்றில் இயல்பாகக் காணப்படுகின்றன.
கவிதை தொகுப்பினைக் கட்டமைப்பதில் நூலாசிரியர் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பத்தில் வாசகரைக் கவரக்கூடிய எளிய, சுவாரசியமான கவிதைகளையும், நடுவில் ஆழமான தத்துவக் கவிதைகளையும், இறுதியில் மனதில் நிற்கும் படியான கவிதைகளையும் வரிசைக்கிரமமாக தொகுத்தெடுக்க வேண்டும். இக்கவிதைத் தெகுப்பில் பல தவறுகள் இடம்பெற்றிருப்பதனை அவதானிக்கலாம். அதேபொல் சில கவிதைத் தலைப்புக்களிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். தொகுப்பின் நடுவில் உள்ளடக்கப்பட வேண்டிய கவிதைகள் ஆரம்பத்தில் இடம்பெற்றிருப்பதையும் அவதானிக்கலாம். அதேபொல் முன்னதாக வரவேண்டிய பல கவிதைகள் இறுதியில் வந்திருக்கின்றன.
கவிதைத் தொகுப்புக்கான பிற விடயங்களில் நூலின் தலைப்பு, அணிந்துரை, முன்னுரை, ஆகியன இடம்பெற்றிருக்க வேண்டும். அத்தோடு ஆசியுரை, வாழ்த்துச் செய்தி, பதிப்புரை, பின்னுரை கவிதைகளுக்குப் பொருத்தமான ஓவியங்கள், புகைப்படங்கள் ஆகியனவும் இடம்பெறலாம். பேராசிரியர் செ.யோகராசா அவர்களின் ‘காலத்தின் குரலாகின்ற கவிதைகள்’ என்ற தலைப்பிலான நீண்டதொரு அணிந்துரை தொகுப்புக்குப் பெருமை சேர்க்கிறது. அத்தோடு, இத்தொகுப்பு நூல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தணைக்களத்தின் வெளியீடாகவும், அதன் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் அவர்களின் வெளியீட்டு உரையினைத் தாங்கித் தேர்வுக் குழுவின் சிபார்சுக்கு இணங்க 2023 வெளியீடாக வந்திருக்கிறது.
ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பானது, அத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கவிதைகளின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் பிரதிபலிப்பதாக அமைந்திருத்தல் வேண்டும். அந்தவகையில் ‘கனவுகள் சுமக்கும் காலம்’ தலைப்புக்கு நிகரான மேலும் இரண்டு கவிதைத் தலைப்புக்களும் உள்ளன. அவற்றையும் பரசீலித்திருக்கலாம். அவற்றுள் ஓன்று ‘நதர்சனம்’ என்ற தலைப்பு. இத்தலைப்பானது 60 க்கு மேற்பட்ட கவிதைகளில் வரும் மாந்தர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது.
கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் நிண்ட கால இடைவெளியைப் (1970-2015) பிரதி பலிபலிப்பதாக அமைகின்றன. அதனால் கவிதைத் தொகுப்பில் வேறுபட்ட உத்திகள், சமூகப் பிக்ஞைகள், அவலங்கள், துன்ப துயரங்கள், இழப்புகள் மருபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், நவீன கவிதைகள் ஊடாக வெளிப்பட்டிருக்கின்றன. அதனால், கவிதையின் கரு, வடிவம், உருவம், உள்ளடக்கம், உத்தி, படிமம், குறியீடு ஆகியவற்றில் மண்டூர் அசோகாவின் உணர்வுகள், பொருள் வைப்பு, ஊடாட்டம், அனுபவம், முதிர்ர்ச்சி வேறுபட்டு பிரதிபலிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
நூலாசிரியர் தமிழ் மொழியும் இலக்கியமும் பாடத்தைப் பாடசாலையில் கற்பித்தவர் என்பதால் பெரும்பாலான கவிதைகளில் அவரின் மொழிப் புலமை தென்படுகின்றது. அதனால் ஒவ்வொரு சொல்லையும் அச்சொல்லின் பொருள், ஆழம், கனதி அறிந்து படிமம், குறியீடுகளாகவும் பயன்படுத்தி இருக்கின்றார். இதனை அவரின் மரபுக் கவிதைகள் பலவற்றிலும் 15 க்கு மேற்பட்ட புதுக்கவிதை, நவீன கவிதைகளிலும் காண முடிகிறது. சில கவிதைகளில் அவரின் சிறுகதைத் தொகுப்புக்களில் வெளிவந்த சில கதைகளின் பாதிப்புத் தென்படுகிறது. பல நவீன கவிதைகளிவ் சேரன், வ.ஜ.ச. ஜெயபாலன், புதுவை இரத்தினதுரை ஆகியோரின் சாயல் தென்படுகின்றன. படிமம், குறியிட்டுக் கவிதைகளைப் படிக்கும்போது மேமன்கவி, ராஜகவி ராகில், க.யோகானந்தம் போன்றோரின் கவிதைகளையும் ஞாபகப்படுத்துகின்றன.
பேராசிரியர் செ.யோகராசா இக்கவிதைத் தொகுப்புக்கு வழங்கிய அணிந்துரையில் “….ஈழத்து நவீன கவிதைச் செல்நெறிப் பின்புலத்தில் குறிப்பிட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் வடிவ ரீதியிலும் எடுத்துரைப்பு முறைகளிலும் உள்ளடக்க ரீதியிலும் ஏற்பட்ட மாற்றங்களை வெளிப்படுத்துவனவாக இவை அமைந்துள்ள” எனச் சான்று வழங்குகின்றார். இத்தொகுப்லுள்ள கவிதைகளுள் புதுயுகம், நிதர்சனம், வலி, நிராகரிப்பு, நியும் நானும், எதிர் நீச்சல், பெண்ணும் பொன்னும், கனவுகள் சுமக்கும் காலம், அற்ற குளம், நம்பிக்கை, சாமக் கோழிகள், அவதாரங்கள், ஊழிக் கூத்து, இது பெண்களுக்கு, இணையேது, ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல அத்துடன் மேடைகளில் ஒலித்த கவியரங்கக் கவிதைகளில் எங்கே போகின்றோம், கலைத்தாயே உங்கள் கதி ஆகிய கவிதைகளும் செந்நெறிப் பாடல் மரபு, மெல்லிசைப் பாடல் மரபு முதலியன மட்டுமின்றி நாட்டார் பாடல் மரபினையும் மண்டூர் அசோகாவால் திறம்படக் கையாள முடியும் என்பதற்கு உள்ளம் குளிர, சுந்தரியே சுணக்கமென்ன போன்ற கவிதைகள் சிறந்த எடுத்துக் காட்டாகும். இவருடைய பெரும்பாலான கவிதைகளில் மாக்சீய சிந்தனை வெளிப்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
‘கனவுகள் சுமக்கும் காலம்’ கவிதைத் தொகுப்பு நூல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின வெளியீடாக வெளிவந்திருப்பதனால் நூலின் கட்டமைப்பில் ஆசிரியரின் பங்களிப்புக் குறைவாக இருந்திருப்பதை நூலாகத்தில் அவதானிக்க முடிகிறது. அட்டைப்பட வடிவமைப்பு, பக்க வடிவமைப்பு, எழுத்து அளவு (Font Size), எழுத்தின் கருமை (Dark), ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். அவ்வாறு பக்க வடிவமைப்பு, எழுத்து அளவு ஆகியவற்றில் கவனம் செலுத்தி இருந்தால் பக்கங்கள் பல குறைந்து நூல் வடிவமைப்பும் அழகாக இருந்திருக்கும்.
மரபுக் கவிதைகளில் சில பாடல்களில் எழுத்து, சீர், தளை, எதுகை, மோனை, ஓசை என்பவற்றில் கவனம் செலுத்தி இருக்கலாம். எடுத்துக் காட்டாக, வெண்பா யாப்பில் அமைந்த ‘புலவர்மணி என்றோர் புயல்’ என்ற கவிதையின் ஒரு சில அடிகளில் (4,4,4,3 சிர்) இத்தகைய குறைபாடு இருப்பதை யாப்பமைவில் பரீட்சயம் உள்ளவர்கள் இனங்கண்டு கொள்வார்கள். இத்தவறு அச்சுப் பதிப்பின்போது முறையான சரவை பார்த்தலின்றியும் இடம் பெற்றிருக்கலாம். சகல கவிதைகளின் கீழும் அவை வெளிவந்த ஆண்டு, பிரசுரித்த ஊடகம் என்பவற்றையும் சேர்த்திருந்தால் காலக் கணிப்புக்கும், அக்கால சமூக ஊடாட்டம், ஆதன்போக்கு, கவிதைப் போக்கு என்பவற்றையும் மட்டிட உதவியாக இருந்திருக்கும். அதேபொல் 74 கவிதைகளையும் முன், இடை, முடிவு என்ற அடிப்படையில் அதன் பொருள் உள்ளடக்கம், கனதி என்ற அடிப்படையில் கவனம் செலுத்தி ஒழுங்குபடுத்தி இருக்கலாம்.
இக்கவிதைத் தொகுப்பில் இத்தகைய சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும் ஒட்டு மொத்தத்தில் அண்மைக் காலத்தில் வெளிவந்த பல கவிதைத் தொகுப்பு நூல்களில் இருந்து வேறுபட்டு நல்லதொரு கவிதைத் தொகுப்பு நூலை வாசித்த திருப்தியும், ஆழமான மனப்பதிவும் ஏற்பட்டிருக்கிறது.
![]()