நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாகவே விகாரை; சாணக்கியன் எம்.பி. தெரிவிப்பு

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாகவே விகாரைக்கான புதிய கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.இதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றகுழுத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவிஇடமே இவ்வாறு தெரிவித்த இரா. சாணக்கியன் எம்.பி. மேலும் பேசுகையில்,
திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்தில் இன்றுகாலை (நேற்று புதன்கிழமை ) புதிய விகாரை கட்டுமானப் பணிகளை தொல்பொருள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. அண்மையில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரை சந்தித்து ஆக்க பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.அந்த வகையில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரை தொடர்பு கொண்டு உரையாட முயற்சித்தேன்.
கன்னியா வெந்நீரூற்று பகுதி தொடர்பில் 2020 ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மதம் சார்ந்த எவ்வித கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் நீதிமன்ற உத்தரவுக்கு அப்பாற்பட்டு கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் இன்று காலை (நேற்று புதன்கிழமை காலை ) மாவட்ட அரசாங்க அதிபரும் ,ஏனைய அரச அதிகாரிகளும் இணைந்து மதம் சார்ந்த கட்டுமானப் பணியை ஆரம்பித்துள்ளார்கள்.இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாகவே தற்போது இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எமது கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார்.பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் முயற்சிக்கின்ற பின்னணியில் இந்த சம்பவம் தொல்பொருள் திணைக்களம் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
![]()