இலங்கை

வடக்கில் அத்துமீறிய நில ஆக்கிரமிப்பின் எல்லைக் கற்களாக புத்தர் சிலைகள்

காவி உடை உடுக்கவே பொருத்தமில்லாத சிலரால் வடக்கில் புத்தபெருமானின் திருவுருவச் சிலைகள் நில ஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுகின்றன , வடபகுதியில் நீதிமன்ற கட்டளைகளைமீறி, அத்துமீறி கட்டியெழுப்பப்பப்படும் விகாரைகள் ஒருபௌத்த சின்னமல்ல ஊழலின் சின்னம்.எனகுற்றம்சாட்டிய தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன், பௌத்த விகாரை ஒன்றையும், அசோகச் சக்கரத்தையும் தனது சின்னமாக கொண்ட இலங்கை தொல்பொருள் திணைக்களம், எவ்வாறு இலங்கையில் உள்ள எல்லாமதத்தவர்களின் தொல்லியலையும் நடுநிலமையுடன் கையாளக்கூடிய திணைக்களமாக இருக்கமுடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

புத்தபிரானின் போதனைகளையும் அவரது பஞ்சசீலக் கொள்கைகளையும் கைவிட்ட சில பௌத்தபிக்குகள் அவர்களின் பின்நின்று இயக்கும் சில அரசியல்வாதிகளின் தயவுடன் இந்தநாட்டில் அமைதியின்மையையும், இனமுறுகலையும் ஏற்படுத்தி இலங்கையில் இன,மத நல்லிணக்கத்தை இல்லாதொழிதுள்ளார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இனப்பரம்பல் வீதத்தை மாற்றி அமைக்கமுயலும் பேரினவாத சக்திகளின் ஊதுகுழல்களாக செயற்பட்டுவரும் இந்தப்பௌத்தப் போக்கினைக் கடைப்பிடித்துவரும் சில பௌத்தபிக்குகள் இலங்கையின் அரசதிணைக்களங்களான, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை தொல்பொருள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு படைகள் என்பவற்றை வெளிப்படையாகவே வழிநடத்தி வருவது கடந்த காலத்தில் வெளிப்படையாகவே அவதானிக்கப்பட்டது.

முல்வைத்தீவு கொக்கிளாய் கிராமத்தில் நீதிமன்றக்கட்டளைகள் மீறப்பட்டு பௌத்தவிகாரை அமைக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை, அது ஒருதொல்லியல் பிரதேசம் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். விடுதலைப்புலிகளின் காலத்தில் அங்கிருந்த தொல்பொருட்சின்னங்களுக்கு இம்மியளவுகூட பங்கமேற்படவில்லை. அங்கு தொல்பொருள் சின்னங்களுள் ஒன்றாய் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த திரிசூலம் ஒன்று காணப்பட்டது. அது பல நூற்றாண்டுகளாகவே சுற்றயல் கிராம மக்களால் வழிபடப்பட்டுவந்தது. கிராமியமுறையில் பொங்கல் செய்து படையலிட்டு பயபக்தியுடன் இம்மக்களால் வழிபடப்பட்டு வந்தது. ஆனால் இன்று பிடுங்கி எறியப்பட்டு இந்துமத வழிபாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளன .

வவுனியா மாவட்டத்தில், வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரவில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை வன்னியில் வாழும் இந்துக்களின் ஆதிவழிபாட்டுத்தலம். கடந்த வருடம் இங்கு சிவராத்திரி வழிபாட்டிற்காக சென்றிருந்த மக்கள் இலங்கைப்பொலிசாரால் துரத்தியடிக்கப்பட்டனர். இங்கு வழிபாடு மேற்கொண்ட பரம்பரை பூசாரியும் இன்னும் 14பேரும் சிவராத்திரியை வெடுக்குநாறிமலையில் அனுஸ்டித்ததற்காக, இரண்டு வாரங்கள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்தவருடமும் சிவராத்திரி பூசைகள் மாலை 6. மணிக்கு பின் தொடர அனுமதிக்கப்படவில்லை.

இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராக, அவர்களுடைய வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு, அவர்களுடைய மரபு உரிமைகள் சிதைக்கப்பட்டு அம்மக்கள் நசுக்கப்பட்டு வரும் நிலைமை இன்னமும் தொடர்ந்து வருகின்றது. பௌத்த விகாரை ஒன்றையும், அசோகச்சக்கரத்தையும் தனது சின்னமாக கொண்ட இலங்கை தொல்பொருள் திணைக்களம், எவ்வாறு இலங்கையில் உள்ள எல்லாமதத்தவர்களின் தொல்லியலையும் நடுநிலமையுடன் கையாளக்கூடிய திணைக்களமாக இருக்கமுடியும்/. இதுவே இலங்கையில் தொடரும் பௌத்த மேலாதிக்க ஆட்சியின் ஊழலின் சின்னம்.

எமது வழிபாட்டிடங்களில் எம்மை வழிபடவிடுங்கள். பௌத்தர்கள் அல்லாத இடங்களில் எதற்கு பாரிய பௌத்த விகாரைகள்?, இராணுவ முகாம்களில் பாரிய விகாரைகள் கட்டப்படுகின்றன. கடந்தகால ஆட்சியாளர்கள் இனவாதப் போக்குடன் அராஜகமான போக்குடன் செயற்பட்ட நிலைமைகளை இந்த அரசாங்கம் நீக்கவேண்டும். அமைச்சர் எமது பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மதத்திணிப்புக்கள் தொடர்பில் நேரடியாக வந்துபார்வையிடவேண்டும். அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.