ஏப்ரலுக்குள் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கும்

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் தேர்தல் முறைமை திருத்தத்துடன் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில்,
உயர்நீதிமன்றத்தின் அறிவிப்புக்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. அதன்பின்னர் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தலாம். மாகாண சபைகள் தேர்தலை நடத்த முடியாமைக்கு அது தொடர்பான தேர்தல் முறைமையே ஆகும். அது தொடர்பான திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். முன்னைய அரசாங்கம் தேர்தல் முறைமையை மாற்றியது ஆனால் அதன்படி தேர்தலை நடத்துவதற்காக வசதிகளை ஏற்படுத்தவில்லை. ஒன்று பழைய முறைமையான நூறுவீத விகிதாசார முறைக்கு போக வேண்டும். இல்லாவிட்டால் உள்ளூராட்சித் தேர்தல் போன்று விகிதாசார மற்றும் தொகுதிவாரியான கலப்பு முறைமைக்கு போக வேண்டும். இதற்காக காலமெடுக்கும்.

ஆனால் இப்போதைக்கு உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலேயே கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்தல் தொடர்பான சட்டத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வாறாயினும் ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும் என்று நினைக்கின்றோம். இதற்கான தினத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என்று நினைக்கின்றோம்.

இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரே மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடும். தேர்தல் முறைமை தொடர்பான திருத்தத்துடன் அந்தத் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button