இலங்கை

தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன்

நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.

இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள்.

இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.

என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது.

இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது.

நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும்.

எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள்.

இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம்.

ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள்.

இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார்.

ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்.

அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள்.

இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம்.

இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் .

இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார்.

அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள்.

இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது .

அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து வடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.

பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம்.

இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள்.

அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது.

யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும்.

அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அழியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.