இலங்கை

எதிர் வருங்காலங்களில் தேசிய மக்கள் சக்தி வட, கிழக்கைத் தொடுவதற்கு இடமளிக்கவே மாட்டோம்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி இன்னமும் இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியடையாத நிலையில், அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. இந்த உண்மைகளை எமது மக்கள் புரிந்துகொண்டமையினாலேயே திசைகாட்டி வீட்டின் பக்கம் திரும்பியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக எதிர் வருங்காலங்களில் தேசிய மக்கள் சக்தி வட, கிழக்கைத் தொடுவதற்கு இடமளிக்கவே மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் மாங்குளம் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் ‘தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் ஒன்றிணைவோம்’ எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஆரம்பத்தில் ஒரு ஆயுதக்குழுவாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன), பின்னர் பொதுமக்களின் உரிமைகளை முன்னிறுத்திக் குரலெழுப்பும் ஒரு தொழிற்சங்கமாகத் தம்மைக் காண்பித்துவந்த நிலையில், கடந்த ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தேர்தலில் அக்கட்சி பொதுமக்களின் வலுவான ஆதரவைப்பெற்று வெற்றியீட்டியது. அதற்கு முன்னைய காலப்பகுதியில் நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்கள் ஊழல் மோசடிகளிலும், ஏனைய மீறல்களிலும் ஈடுபட்டன அல்லது அவற்றுக்குத் துணையாக இருந்தன என்பதை மக்கள் புரிந்துகொண்டமையே அந்த மாற்றத்துக்கான பிரதான காரணமாக இருந்தது.

அதன்படி எவ்வித ஆட்சி நிர்வாகப் பின்புலமும் அற்ற தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி இன்னமும் இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியடையாத நிலையில், அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

முன்னாள் சபாநாயகரின் ‘கலாநிதி’ பட்ட சர்ச்சை, அதனைத்தொடர்ந்து பதவியிலிருந்த சபாநாயகருக்கு ஆதரவாக முன்னிலையாக முடியாது என சட்டமா அதிபர் மறுத்தமை, நிலக்கரி ஊழல், அவுஸ்திரேலிய கடன் வழங்கல் தரப்புக்கு திறைசேரியின் ஊடாகச் செலுத்திய நிதி மாயம், அமெரிக்க தபால் சேவைப் பிரிவுக்கு செலுத்திய நிதி மாயம் என்பன உள்ளடங்கலாக அடுத்தடுத்துப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த இரு தேர்தல்களில் எமது மக்களில் குறித்த எண்ணிக்கையானோர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஆதரவளித்திருந்த போதிலும், அடுத்த ஆறு மாதகாலத்துக்குள் அவர்கள் அரசாங்கம் குறித்த உண்மையைப் புரிந்துகொண்டதன் காரணமாகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான உள்ளுராட்சி சபைகள் எமது வசமாகின.

இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது ‘இது சரிப்பட்டு வராது’ என்பதே நாம் அரசாங்கத்துக்குக் கூறுகின்ற செய்தியாகும். ஆட்சிபீடமேறி மிகக்குறுகிய காலப்பகுதியிலேயே பெருந்தொகைப் பெறுமதியில் நிகழும் இத்தகைய ஊழல்கள் எதிர்வருங்காலங்களில் மேலும் தீவிரமடையும். இது உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். இந்த உண்மைகளை மக்கள் புரிந்து கொண்டமையினாலேயே ஏற்கனவே திசைகாட்டி வீட்டின் பக்கம் திரும்பியிருக்கிறது. எதிர்வருங்காலங்களில் தேசிய மக்கள் சக்தி வட, கிழக்கைத் தொடுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்பதே இந்த மேதினத்தில் நாம் அரசாங்கத்துக்குக் கூறும் செய்தியாகும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button