சிறப்பிப்பீர் சிறந்தவரே!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்
நாம்வாழ்வில் நிகழ்வதை தடையென
என்றும் எண்ணாதீர் மாந்தரே
எதையும் தாங்கும் இதயமிருப்பதால் நான்
விதை முளைப்பதை வீரியமென்பேன்
எது வந்துதான் என்னை என்செய்யும்
என செப்பாமல் செப்பிடும் நண்பா
சிற்பி என்பவன் கல்லைச் செதுக்குவான்
நீவிரோ தமிழ் செதுக்கும் தரமான சிற்பி
ஓய்வென்பது உமக்கில்லை நண்பரே
ஓடித் திரிவோம் முன்போல் என்றும்
கூடித் திரிந்தே நாம் தொண்டாற்றிடவும்
தடை ஒன்றும் உமக்கில்லையன்றோ
ஆறென்றால் ஓடிக்கொண்டே இருக்கும்
பேறென்றோ அதற்கும் அவ்வோட்டம்
மாறிவரும் இம்மாய உலகில் எதுவும்
நிரந்தரமல்ல என்பதையும் அறிவீர்
மாற்றம் ஒன்றேதான் மாறாதெனவும்
தத்துவமேதை அன்று சொன்னதை
எத்தகைய மாற்றம் இங்கே வந்தாலும்
அத்தகையதும் ஆற்றலை அடக்காது
துள்ளிப் பாய்ந்தோடும் ஏறுபோலென்றும்
அள்ளித் தமிழ்மழை பொழிவீர் அன்பரே
சோர்ந்த பயிரும் நீரைக்கண்டால்
தோகை விரித்தே வளர்ந்திடும்
காய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவி அணைத்தே படர்ந்திடும்
என்றுரைத்த பட்டுக்கோட்டையார் பாடல்
கருத்தினை விதைப்பதுபோல்
சோர்ந்திடாது உமது மனமும் தமிழின்
தொண்டை என்றும் நினைப்பதால்
சிறப்பை சிறப்பாய் சிறப்புற சிறப்பாற்ற
சிறப்பிப்பீர் சிறந்தவரே!
-சங்கர சுப்பிரமணியன்.