மணிப்பூரில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூடு
இம்பால்: மணிப்பூரில் நேற்று இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் மேற்கு இம்பாலின் கோட்ரூக் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ரோங்லவோபியில் நடந்துள்ளது.
லாம்ஷாங் காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட கோட்ருக் சிங் லேய்காய் கிராமத்தில் இருந்து நேற்றிரவு 7 மணியளவில் அதிநவீன துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் வைத்து குக்கி போராளிகள் தாக்குதல் நடத்தியதாக மேற்கு இம்பால் மாவட்ட போலீஸார் சந்தேகிக்கின்றனர். அங்கு நிலைநிறுத்தப்பட்டிருக்கும் போலீஸார் பதில் தாக்குதல் நடத்தியதால் அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டை நான்கு மணி நேரம் நீடித்தது.
இதனிடையே, பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ராங் காவல்நிலையத்துக்கு அருகே 6 கி.மீ. தொலைவில் உள்ள ட்ரோங்லவோபி கிராமத்தில் இருந்து குக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்று பிஷ்ணுபூர் மாவட்ட போலீஸார் தெரிவித்தனர்.
கெல்ஜங் மற்றும் மோல்ஷாங் பகுதிகளில் இருந்து இரவு 9.15 மணியளவில் குக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மாநில படைகளும், கிராமத் தொண்டர் படைகளும் பதிலடி கொடுத்ததால் அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, செப்.6-ம் தேதி ட்ரோங்லாவோபி கிராமத்தின் மீது குக்கி தீவிரவாதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை.
இரண்டு பிஎல்ஏ-வினர் கைது: இதனிடையே, தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை படையைச் சேர்ந்த இரண்டு பேர் தெங்னவுபால் கிராமத்தில் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸார் தெரிவித்தனர். எல்லையோரத் தூண் எண் 87-க்கு அருகே சனிக்கிழமை அசாம் ரைஃபிள் படையினர் அவர்களைக் கைது செய்தனர். பின்பு அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.