பலதும் பத்தும்

உயிரிழந்த ‘முதலாளி’ குரங்கு குட்டி!  

கால்நடை மருத்துவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டிருந்த முதலாளி என்ற குரங்கு குட்டி நேற்று உயிரிழந்தது.

கோவையைச் சேர்ந்தவர் மருத்துவர் வள்ளியப்பன். கால்நடை மருத்துவரான இவர் ‘பிராணி மித்ரன்’ என்ற விலங்குகள் நல சேவை அமைப்பை நடத்துகிறார். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக சோளிங்கரில் தெருநாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி முகாம் நடத்தியபோது, அவரிடம் வனப்பாதுகாவலர் ஒருவர் நாய்களால் கடிக்கப்பட்ட குரங்குக் குட்டி ஒன்றை சிகிச்சைக்காக அளித்தார். அதை தன் சொந்த மகனாகப் பாவித்து சிகிச்சை அளித்து பத்து மாதங்களாக வளர்த்துவந்தார் வள்ளியப்பன். அந்த குரங்குக் குட்டிக்கு முதலாளி என்றும் பெயர் சூட்டினார்.

பின்னர் அந்தக் குரங்கு குட்டியை வனத்துறை பறிமுதல் செய்து வண்டலூா் அண்ணா உயிரியல் பூங்காவில் வைத்தனர். குரங்கு குட்டியை மீண்டும் தன்னிடமே ஒப்படைக்கும்படி, மருத்துவா் வள்ளியப்பன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை உயா் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், குரங்கு குட்டி உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்ததாக வண்டலூா் பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பூங்கா நிர்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:

கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி வண்டலூா் பூங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் குரங்கு குட்டிக்கு வனவிலங்கு மருத்துவா்கள் பரிசோதனை மேற்கொண்டதில், குரங்கு குட்டியின் பின் மூட்டு முடக்கம் மற்றும் அதன் முதுகில் சிராய்ப்பு காயம் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ரத்த பரிசோதனை மேற்கொண்டதில் குரங்குக்கு மிதமான ரத்தசோகை இருப்பது தெரியவந்தது.

குரங்கின் காயத்தை குணப்படுத்தவும், சிராய்ப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் பொருத்தமான படுக்கை உட்பட பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் பூங்காவின் வனவிலங்கு மருத்துவக் குழுவின் கண்காணிக்குப்பின் கீழ், குரங்கு குட்டிக்கு தேவையான மருந்துகளுடன் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. குரங்கின் உடல்நிலை படிப்படியாகக் குணமடைந்து வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக சோா்வாகக் காணப்பட்டது.

அதைத் தொடா்ந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக நிபுணர்களின் ஆலோசனைகளின் படி, குரங்குக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பெண் குரங்கு குட்டி புதன்கிழமை உயிரிழந்துவிட்டது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.