அசாத் மௌலானாவின் சாட்சி போலியானது!; உயிர்த்த ஞாயிறு தொடர்பில் கம்மன்பில வெளியிட்ட பரபரப்புத் தகவல்
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே, ஏ.என்.டி அல்விஸின் அறிக்கையில் வெளியிடப்படாத சில தகவல்களை அவர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், செனல்-4 தொலைகாட்சி வெளியிட்டிருந்த காணொளி தொடர்பில், ஆராய்வதற்காக கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாமின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார்.
ராஜபக்ஸவினரை அதிகாரத்திற்கு கொண்டு வரும் நோக்கில், அரச புலனாய்வு பிரிவினால் ஏப்ரல் 21 தாக்குதல் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கலாம் என செனல்-4 தொலைக்காட்சி ஆவணப்படுத்தியிருந்தது.
அதனை முற்றாக நிராகரிப்பதாக அந்த ஆணைக்குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
செனல்- 4 தொலைக்காட்சி ஏற்கனவே, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் செயற்பட்டுள்ளது.
அரச புலனாய்வு சேவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி, கடந்த காலத்தில் புலனாய்வு சேவை சீர்குலைக்கப்பட்டமையே, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வாளர்கள் அறிந்திருந்த போதிலும், எம்மால் அறிந்துகொள்ள முடியாமைக்கான காரணமாகும்.
இதேபோன்றுதான் தற்போது, அறுகம்பை பகுதியில் நடத்தப்படவிருந்த தாக்குதல் தொடர்பான தகவல்களை பெறும் விடயமும் அமைந்துள்ளது.
தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரியான சஹ்ரான் ஹசிமுடன் மூன்று மணிநேரம் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக அசாத் மௌலானா செனல் 4 காணொளியில் தெரிவித்துள்ளார்.
அந்தக் கலந்துரையாடலில் தேசிய புலனாய்வு சேவையின் அப்போதைய பணிப்பாளர் மேஜர் ஜென்ரல் சுரேஷ் சாலேவும் பங்கேற்றிருந்ததாக அவர் கூறுகிறார்.
இந்த சந்திப்பு புத்தளம் – வனாத்தவில்லுவில் உள்ள சஹ்ரானுக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தில் அமைந்துள்ள வீடொன்றில் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வீட்டில் இருந்தே, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 100 கிலோகிராமுக்கும் மேற்பட்ட வெடிப்பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டிருந்ததாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் 2 சந்தேகநபர்களும் அங்கு கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவரான ஹனீபா முனிஸ் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த வீடு 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் அளவிலேயே கட்டப்பட்டதாக வாக்குமூலம் வழங்கியிருந்ததாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறானால் அசாத் மௌலானா கூறியிருக்கும் காலப்பகுதியில், அங்கு வீடு ஒன்று இருந்திருக்கவில்லை.
எனவே, அவர் செனல்-4 காணொளியில் வெளிப்படுத்திய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என உறுதியாவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன், அசாத் மௌலானா கூறிய குறித்த காலப்பகுதியில் சுரேஷ் சாலே மலேசிய தூதரகத்தில் பணியாற்றியிருந்தார். எனவே, அவர் இலங்கையில் தங்கியிருக்கவில்லை.
எவ்வாறாயினும், ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து உண்மையான தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் புதிய விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்குமானால், செனல்-4 காணொளியில் வரும் இரண்டாவது நபரான அரச அதிகாரி தொடர்பிலும் தனியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.