புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு; லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்
பிரித்தானியாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் இணைந்து கொண்டனர்.
பிரித்தானிய குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனையடுத்து நகரம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, “அகதிகளை வரவேற்கிறோம்”, “வலதுசாரிகளை குப்பையில் போடுங்கள்” என்ற முழக்கங்களுடன், தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக லண்டனில் மற்றுமொரு குழுவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், நகரில் பொது ஒழுங்கை பராமரிக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை உதவி ஆணையர் ரேச்சல் வில்லியம்ஸ் தெரிவித்தார்.
மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் எந்தவொரு செயலும் இடம்பெற வாய்ப்பில்லை எனவும், எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் நடனப் பட்டறை ஒன்றில் கலந்துகொண்ட மூன்று சிறுமிகள் கடந்த ஜூலை மாதம் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், முஸ்லிம் குடியேறி என்று சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரவியபோது, நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்திருந்தன.
எவ்வாறாயினும், நேற்றைய போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நபர், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
அவர் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் பிரித்தானியாவை விட்டு வெளியேறிய போது தனது கைப்பேசியின் பின் (PIN) இலக்கத்தை வழங்கத் தவறியமைக்காக அவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.