மறக்காதீர்கள் !…. கவிதைகள்… ஜெயராமசர்மா
இமயம் தொட்டாலும்
ஏணியை மறக்காதீர்
அபயம் அளித்தாரை
அரைக்கணமும் மறக்காதீர்
கவலை இருந்தாலும்
காரியத்தை மறக்காதீர்
கஷ்ட நிலையிலும்
கண்ணியத்தை இழக்காதீர்
ஆசானை மறக்காதீர்
அன்னையை ஒதுக்காதீர்
அரவணைக்கும் அனைவரையும்
அகமார வாழ்த்துங்கள்
மாசுகளைச் சேர்க்காதீர்
மனமிருளச் செய்யாதீர்
மயக்கமுடன் வாழாமல்
மனவெழுச்சி கொள்ளுங்கள்
பெருங்கனவு காணுங்கள்
பேராசை தவிருங்கள்
அருங்குணத்தை அணையுங்கள்
அன்பையே ஈயுங்கள்
அறவழியை நாடுங்கள்
அறிவுரைகள் கேளுங்கள்
ஆன்றோர்கள் பாதையிலே
அடியெடுத்து வையுங்கள்
கயமை மறவுங்கள்
கருணை நினையுங்கள்
கனிவு கொள்ளுங்கள்
கடமை உணருங்கள்
வாய்மை பேசுங்கள்
மனிதம் போற்றுங்கள்
மனதில் இறையினை
இருத்தி மகிழுங்கள்
ஏழ்மை ஏருங்கள்
இரக்கம் காட்டுங்கள்
இல்லை என்னாது
ஈந்து உயருங்கள்
தாழ்மை என்பதை
தாங்கி நில்லுங்கள்
தளர்வு இன்றியே
வாழ எண்ணுங்கள்
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
எளிமை..இனிமை..அருமை. சிட்னி வந்துள்ளோம் ஐயா