சஜித் அணியில் தொடரும் சிக்கல்கள்: பட்டியலும் மாற்றம்?
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இன்னும் குறிப்பிட்ட சில தினங்களே காணப்பட்டு வரும் நிலையில் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட சஜித் பிரேமதாச மற்றும் ரணில் தரப்பில் இருந்த முன்னாள் உறுப்பினர்கள் சிலர் இம்முறை போட்டியிடப் போவதில்லை என தெரியவந்துள்ளது.
விசேடமாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினுள் புதிதாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தொடர்பில் ஆலோசனை செய்து இறுதி தருணத்தில் வேட்புமனுக்களை மீளப் பெற அவர்கள் தயாராக உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாற்று பட்டியல் ஒன்றை சஜித் பிரேமதாச மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தயாரித்து வரும் நிலையில் இளைஞர்கள் மற்றும் படித்தவர்களுக்கு அடுத்த தலைமைத்துவத்தை வழங்கும் நோக்கில் குறித்த பட்டியலை தயாரித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் தரப்பில் தேர்தலுக்கு முன்னிலையாக தயார் நிலையில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவும் இம்முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆஷூ மாரசிங்க, அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்காக சஜித் பிரேமதாச அணியில் கட்சித் தாவி இணைந்தவர்கள் தொடர்பில் பொதுமக்களிடம் காணப்படும் எதிர்ப்பு தான் தோல்விக்கு காரணமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்தியில் ஹர்ஷ டி சில்வா தடுமாற்றமடைந்துள்ளார்.
பிரதான சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் அவரிடம் இவ்வாறன ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
கட்சித் தாவும் கலாச்சாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வது சஜித் பிரேமதாசவின் தோல்விக்கான பிரதான காரணமா என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதன்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னிலையாகும் வேட்பாளர்கள் பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாக ஹர்ஷ டி சில்வா பதிலளித்தார்.
எனினும், மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டதையடுத்து , ” அதனை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டதனால் தான் பட்டியல் மாற்றப்பட்டுள்ளது. சிலருக்கு வேட்புமனு கிடைக்காது” என ஹர்ஸ டி சில்வா பதிலளித்தார்.