இலங்கை

சுமந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கும் தமிழரசு கட்சியின் மகளிர் அணி

நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள கட்சியின் மகளிர் அணியினர், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்கள்.

தமிழரசுக் கட்சியின்மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தினர்.

இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணித் தலைவி மதனி நெல்சன் தெரிவித்ததாவது:-

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளிர் அணிக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உண்மையில் எதற்காக இவ்வாறான தெரிவுகளைச் செய்தார்கள் என்ற சந்தேகமும் கேள்வியும் இருக்கின்றது. இந்தப் பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. இதனால் கட்சியில் உள்ள பெண்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் யாழில் போட்டியிடுவதற்காக மகளிர் அணியில் இருக்கின்ற ஐந்து பேர் இரண்டு கிழமைக்கு முன்னதாகவே விண்ணப்பித்து இருந்தனர்.

ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும், காடுகள், மலைகள், மேடுகள், பள்ளங்கள் எனப் பல இடங்களிலும் பெண்களைத் தேடுவதாகவும் தனது பாணியில் கிண்டலாகச் சொல்லியிருந்தார்.

ஆனால், 5 ஆம் திகதி பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றவர் மறுநாள் 6 ஆம் திகதி இரண்டு பெண்கள் விண்ணப்பித்து அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றார். உண்மையில் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களை மறைத்து யாரும் விண்ணப்பிக்கவில்லை எனச் சொன்னவர் திடீரென இருவர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களைத் தெரிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றார்.

ஆகவே, எதற்காக அவர் உண்மையைச் சொல்லாமல் பொய் சொல்லுகின்றார். இவ்வாறாக அவரின் பொய்களைக் கேட்கவோ, சர்வாதிகாரத்துடன் அவர் செயற்பட்டு வருவதையோ அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை.

எங்களில் பல பேர் போட்டியிட விண்ணப்பித்து இருக்கையில் அதனை மறைத்துவிட்டு தனக்குத் துதிபாடுபவர்களை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நிறுத்தியுள்ளார். ஆக முதலில் விண்ணப்பித்த நாங்கள் யார்? இப்போது சுமந்திரன் தெரிவு செய்த இருவரும் யார்? எந்த அடிப்படையில் அவர்களைச் சுமந்திரன் தெரிவு செய்தார்.?

ஆக மொத்தத்தில் தனக்குத் துதி பாடுபவர்களைத் தானே நிறுத்திவிட்டு இப்போது ஆளுமை மிக்க பெண்கள் என அவர் புருடா விடுகின்றார். ஆக இந்தப் பருப்பு எல்லாம இனி வேகாது.

வெறுமனே அடாவடித்தனமாகச் சர்வாதிகாரத்துடன் தான் செயற்படுவதால் மற்றவர்களை முட்டாள்கள், மடையர்கள் எனச் சுமந்திரன் நினைக்கக்கூடாது. எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற அவரது ஆட்டம் இனி முடிவுக்கு வரும்.

இந்த இரு பெண் வேட்பாளர்களின் தெரிவு என்பது தன்னிச்சையாக சுமந்திரனால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதற்கு யாருடைய ஒப்புதலும் இன்றி தனக்குத் துதிபாடுபவர்களைத் தனது வாக்கு வங்கிக்காக அவர் தெரிவு செய்துள்ளார்.

எங்கள் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த இருவரையும் சுமந்திரன் நியமித்துள்ளார். முன்னர் விண்ணப்பித்தவர்களைப் புறந்தள்ளி தனக்குத் துதிபாடிக்கொண்டு தன்னோடு பயணிக்கக்கூடிய இரண்டு கொத்தடிமைகளை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நியமித்துள்ளார்.” – என்றார்.

தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் ரஜனி ஜெகப்பிரகாஷ், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி ஜங்கரன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த விமலேஸ்வரி ஆகியோரும் பெண் வேட்பாளர் நியமனத்துக்கு எதிராகக் கருத்து வெளியிட்டனர்.

தமிழரசுக் கட்சிக்குள் தற்போது சுமந்திரனின் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கின்றது என்றும் அவர்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.