மலையகத்தில் தரமான தேயிலை கிடைத்தும் கழிவு தேயிலை விற்பனை அதிகரிப்பு: அதிரடிப்படையினரின் சோதனையில் கண்டறிவு
வெளிநாடுகளில் ‘சிலோன் டீ’ என்று அழைக்கப்படும் இலங்கையில் தேயிலையின் தேவை, குறைவதற்கு முக்கிய காரணம் கழிவு தேயிலை கடத்தல்தான் என கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை தேயிலைக்கு எப்போதுமே சந்தையில் அதிக கேள்வி இருப்பதோடு, வெளிநாட்டவர்கள் விரும்பி சுவைக்கும் முதற்தர நாமமாக இலங்கை தேயிலை தனது இடத்தை பல தசாப்தங்களாக தக்கவைத்துள்ளது.
இதனடிப்படையில், மலையக பகுதிகளில் இருந்து தரமான தேயிலை கிடைக்கும் நிலையிலும் கொழும்பில் இருந்து பல இடங்களுக்கும் நாடுகளுக்கும் தேயிலை விநியோகத்தில் ஈடுபடும் சில வியாபாரிகளின் தவறான செயற்பாடுகளால் இலங்கை தேயிலையின் தரம் குறைக்கப்படுவதமாக அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பாக அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, மலையகத்திலிருந்து கிடைக்கும் பாரியளவிலான கழிவு தேயிலையை கொண்டு நடாத்தப்பட்டு வந்த கடையை நடாத்திய நபர் ஒருவர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை – புளத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே மேற்படி கைது செய்யப்பட்டார்.
இவர் களுத்துறை – புளத்சிங்கள பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கொழும்பு 14, கிராண்ட்பாஸ் பகுதியில் கடையொன்றை நடத்தி வந்தமையும் தெரியவந்துள்ளது.
மனித பாவனைக்கு உதவாத சுமார் 10,360 கிலோகிராம் கழிவு தேயிலையை புளத்சிங்கள பகுதியில் இதன்போது சேமித்து வைத்திருந்ததாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், மேலதிக விசாரணைகளுக்காக புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார் எனவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச ரீதியில் ‘சிலோன் டீ’ என அழைக்கப்படும் இலங்கை தேயிலையின் தேவையை குறைக்க இந்த கழிவு தேயிலையால் ஏற்படும் சேதம் பாரியளவில் உள்ளது.
இது தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படும் விசேட அதிரடிப்படையினர் இந்த குப்பை தேயிலை கடத்தல்காரர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர்.
தற்போது, விசேட அதிரடிப்படையினர் இது போன்ற பல சோதனைகளை நடத்தி, இலங்கையின் முக்கிய அந்நிய செலாவணியை கொண்டு வரும் தேயிலை தொழிலை காப்பாற்ற நேரடியாக பங்களித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.