இலங்கை

இலங்கை குறித்த தீர்மானத்தை கால நீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்க வேண்டும்: அநுர அரசிடம் சிவில் அமைப்புக்கள் வலியுறுத்து

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கால நீடிப்பு செய்வதற்கு ஆதரவளித்தல் உள்ளடங்கலாக ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக நாட்டில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளைப் புதிய அரசு முன்னெடுக்க வேண்டும் என 25 சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம், சட்டம் மற்றும் சமூக நிதியம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, இனக்கற்கைளுக்கான சர்வதேச நிலையம் உள்ளிட்ட 25 அமைப்புக்கள் ஒன்றிணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:-

“நாட்டில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய அரசின் நியமனத்தை இலங்கையின் அரசியல் மாற்றத்தின் மிகமுக்கிய மைல்கல்லாகக் கருதுகின்றோம். தேர்தலும், ஆட்சி மாற்றமும் அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றமை குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்.

நாடு இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றது. நாட்டை ஜனநாயகப் பாதையில் கொண்டு செல்வதாகவும், ஊழலை இல்லாதொழிப்பதாகவும், தனக்கு வாக்களிக்காதோர் உள்ளடங்கலாக நாட்டின் பிரஜைகள் சகலருக்கும் ஜனாதிபதியாகச் செயற்படுவதாகவும் அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுயளித்திருந்தார். அதுமாத்திரமன்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் ‘அரகலய’ போராட்டத்தின் ஊடாக மக்களால் வலியுறுத்தப்பட்ட கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கின்றது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பின்தங்கிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அரசு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் என்று நம்புகின்றோம்.

அதேவேளை,, அனைவருக்குமான நீதியை நிலைநாட்டுவதை முன்னிறுத்தி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து, அதிகாரப் பகிர்வை வழங்கக்கூடிய புதிய அரமைப்பை உருவாக்கல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல், சகல இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல், பொது ஒழுங்கைப் பேணுவதற்கும் பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கும் இராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுவரும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்தல், போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கால நீடிப்பு செய்வதற்கு ஆதரவளித்தல் ஆகிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.” – என்று அந்தக் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.