இலங்கை

தமிழ் கட்சிகளின் செயல்களால் “தேசமாய் ஈழத் தமிழர்களை ஒன்றுதிரட்டும் முயற்சி தோல்வி

தமிழ் கட்சிகளின் செயல் “தேசமாய் ஈழத் தமிழர்களை ஒன்றுதிரட்டுதல்’ என்ற உன்னத குறிக்கோளுக்கு முற்றிலும் விரோதமானது என தமிழ் மக்கள் பொதுச்சபை தெரிவித்துள்ளது.

இன்று தமிழ் மக்கள் பொதுச்சபை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்கள் பொதுச்சபை ஈழத்தமிழ் மக்களின் விடிவை நோக்கிய பயணத்திற்கும் மக்களை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்கும் தொலைநோக்குடன் உருவாகியது. அது தன்னைப் போதியளவில் ஒழுங்கமைத்து வலுவூட்டி விரிவாக்குவதற்கு முன்னரேயே மிகக்குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட சிறீலங்காவின் ஜசனாதிபதித் தேர்தலை ஈழத்தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பரீட்சார்த்த களமாக கையாளுவதற்கு முன்வந்தது.

இம்முயற்சியில் வெற்றிபெற்றது மாத்திரமல்லாது ஒரு புதிய அரசியல் அணுகுமுறைக்கூடாக ஒடுக்கப்படும் மக்கள் எவ்வாறு தங்கள் ஒற்றுமையினையும் திரட்சியினையும் தேசமாய் முன்நிறுத்தலாம் என்ற மாதிரியையும் உலகின் முன் துணிவுடன் காட்டியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பொதுச்சபை ஒரு தேர்தலாகவோ, பதவிக்கான போட்டியிடலாகவோ கொண்டிருக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து சில நாட்களுக்குள் அறிவிக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தல் பதவிகளுக்கான போட்டி அரசியலாகவும், மக்களை அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்ந்து கூறுபடுத்தி சிதறடிக்கும் செயற்பாடுகளை முதன்மையாக கொண்டுள்ளது என நாங்கள் அறிவோம்.

இத்தகைய நிலையில் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளை அவர்களது இருப்புக்கான, பதவிக்கான நலன்களுக்கு அப்பால் அழைத்துச் சென்று தேசத்திற்காய் ஒருங்கிணைக்க கால அவகாசமோ, சாத்தியமோ தமிழ் மக்கள் பொதுச்சபைக்கு தற்போதைய நிலையில் இல்லை.
அதேவேளையில் பதவி நோக்கங்களுக்காக எதிரணியாக பிரிந்து நின்று மக்களின் ஒற்றுமையின் சிதறடிக்கும் போட்டி அரசியல் தமிழ் மக்கள் பொதுச்சபை வரித்துக் கொண்ட ‘தேசமாய் ஈழத்தமிழர்களை ஒன்றுதிரட்டுதல்’ என்ற உன்னத குறிக்கோளுக்கு முற்றிலும் விரோதமானது என்பதனையும் மீண்டும் நினைவூட்டுகின்றோம்.

இதனடிப்படையில் 2024 நவம்பர் 14ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபை எந்தவொரு வகி பாகத்தினையும் எடுப்பதில்லை என்று இன்று(நேற்று)
2024 ஒக்ரோபர் 05 ஆம் திகதி பொதுச்சபைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.
தமிழ் மக்கள் பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் இந்த தேர்தல் தொடர்பாக பொருத்தமான தீர்மானங்களை தங்கள் அமைப்பு சார்ந்து மேற்கொள்ளுமாறு
ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

இந்த தேர்தலின் பின்பு தமிழ் மக்கள் பொதுச்சபை வலுவூட்டப்பட்டதாகவும், விரிவுபடுத்தப்பட்டதாகவும் ஈழத் தமிழர் தேசத்தைக் கட்டமைப்பதற்காக மக்களை ஒன்று திரட்டும் தனது குறிக்கோள் நோக்கிய பணியில் தளராது பயணிக்கும் என்பதனையும் இவ்விடத்தில் உறுதியாக தெரிவிக்கின்றது எனத் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.