இலக்கியச்சோலை
சிட்னியில் நாடக ஆற்றுகை அரங்கு…. தாயக கலைஞர்கள் இணையும் மகாஜன மாலை 2024! – ஐங்கரன் விக்கினேஸ்வரா
தாயகத்தின் தலைசிறந்த நாடகக் கலைஞர்களுடன் அவுஸ்திரேலியா வாழ் கலைஞர்களும் இணைந்து வழங்கும் நாடக ஆற்றுகை அரங்கு அவுஸ்திரேலியாவின் பல மாநகரங்களில் நடைபெற உள்ளது.
கலாநிதி ரதிதரன் நெறியாள்கையில்:
இந்த அரங்கில் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் ‘உறவுகள்’ நாடக ஆற்றுகையை கலாநிதி க.ரதிதரன் அவர்கள் நெறியாள்கை ஆற்றுகிறார். அத்துடன் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் மொழிபெயர்ப்பில் Anton Chekhov’s unwilling martyr – ‘தான் விரும்பாத் தியாகி’ நாடக ஆற்றுகையையும் கலாநிதி க.ரதிதரன் நெறியாள்கை செய்து மேடையேற்றுகிறார்.
கலாநிதி கதிரேசு ரதிதரன் சிரேஷ்ட விரிவுரையாளராக நாடகமும் அரங்கக் கலைகளும் துறையில் சேர். பொன்னம்பலம் இராமநாதன் ஆற்றுகை, கட்புலக் கலைகள் பீடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமை ஆற்றிவருகிறார்.
தனது சிறுவயதிலிருந்தே நாடகத் துறையில் ஈடுபாடு கொண்டவராக காணப்பட்டவர், 1985 ஆம் ஆண்டு “வேலிக்குள் யானை” என்றமுதலாவது சமூக அரசியல் பின்புலம் கொண்ட நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்தார்.
40 நாடகங்களுக்கு மேல் எழுதி நெறியாள்கை செய்ததோடு மொழிபெயர்ப்பு மற்றும் வேறு எழுத்தாளர்களது நாடகங்கள் 15 தினை நெறியாள்கை செய்துள்ளார். அத்துடன் 25 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார். பல்வேறு நாடக வடிவங்களான சிறுவர் அரங்கு, சமூக நாடகம், வீதி நாடகம், நகைச்சுவை நாடகம், செவ்வியல் நாடகம், கவிதை நாடகம், ஊம நாடகம், பரீட்சார்த்த நாடகங்கள், விவாத கள நாடகம், சமயம் சார் நாடகம் போன்றவற்றை நெறியாள்கை செய்துள்ளார்.
இந்த ஆற்றுகை அரங்கில் சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் மற்றும் இலக்கியப்பவர் இணைந்து வழங்கும் ‘ மாலை’ நாடக ஆற்றுகையும் நடைபெறும். இதனை உள்ளூர் கலைஞர்களுடன் திரு. அ. சந்திரஹாசன் நெறியாள்கை செய்கிறார்.
கலாநிதி ஜெயரஞ்சினி் ஞானதாஸ்:
அத்துடன் கிழக்கு பல்கலை கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நாடகமும் அரங்கக் கலைகளும் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜெயரஞ்சினி் ஞானதாஸ் அவர்கள் நாடகமும் அரங்கியல் துறையில் இளங்கலைமாணி சிறப்புப் பட்டத்தினையும் 1993இலும், தொடர்ந்து பேராசிரியர் கா. சிவத்தம்பியின் நெறிப்படுத்தலில் முதுதத்துவமாணிப் பட்டத்தினையும் 2000இல் பெற்றுள்ளார்.
சிறந்த ஆய்வாளருக்கான விருதினை 2000 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். முதுதத்துவமாணிப் பட்டம் பெற்ற முதல் பெண் ஆய்வாளரும் ஆவார். இவரது ‘ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்’ எனும் ‘முதுதத்துவமாணி ஆய்வு’ நூலாக்கம் பெற்று 2003 இல் சிறந்த ஆய்வு நூலாக வடக்கு, கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப் பெற்று இலக்கிய விருதினையும் பெற்றது.
சிறந்த பெண்நிலைவாத சிந்தனை கொண்ட நாடகங்களைத் தொடர்ச்சியாகத் தயாரித்துவரும் கலைஞராகவும் எம்மத்தியில் அடையாளம் காணப்பட்டார். சிறந்த நாடகத் தயாரிப்பு, நெறியாள்கை என்பவற்றுக்கான பல விருதுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழகத்துக்கு வெளியேயும் பெற்றுள்ளார்.
1995 இலிருந்து 2006 வரை தற்காலிக விரிவுரையாளராகவும் விடுதிக் காப்பாளராகவும் ஏறத்தாளப் பத்து வருடங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி 2009இல் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியற் துறையில் நிரந்தர விரிவுரையாளராக நியமனம் பெற்றார்.
இவர் இன்று மேனாள் நாடகத்துறைத் தலைவராகவும் நாடகத்துறையில் கலாநிதிப் பட்டத்தினைப் பெற்ற முதல் பெண் நாடக ஆளுமையாகவும் எம்மத்தியில் வெளிப்பட்டு நிற்கின்றார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை இந்தியாவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மு. இராமசுவாமியின் நெறிப்படுத்தலின் கீழ் மேற்கொண்டு அதில் உயர்தரச் சித்தியினையும் பெற்றார்.
மகாஜன மாலை 2024:
சிட்னியில் நாடக ஆற்றுகை அரங்கில், தாயக கலைஞர்கள் வழங்கும் மகாஜன மாலை 2024இல் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி்யின் நாடகமும் அரங்கியலும் ஆசிரியரியரும், நெறியாளரும் , பிரபல நாடக்க் கலைஞருமான தவசோதிநாதன் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.
நாடக அரங்கக் கல்லூரி மற்றும் , சண் நாடக்க்குழுவின் ஈழத்தின் பிரபல நாடக கலைஞர் கிருபாகரன் அவர்களும் மகாஜன மாலை 2024இல் கலந்து கொள்கின்றார்.
தாயக கலைஞர்கள் பங்கேற்கும் நாடக ஆற்றுகை அரங்கு அவுஸ்திரேலியாவின் பல பாகங்களிலும் நடைபெற உள்ளது. சிட்னியில் அக்டோபர் 26இலும், பிரிஷ்பேர்னில் அக்டோபர் 27இலும், மெல்பேர்ணில் நவம்பர் 3இலும் ஆற்றுகை அரங்கேற உள்ளது.