திருத்தப் பணிகளில் தாமதம்; யாழ்., ரயில் சேவை அடுத்த வருடமே
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை வழமையாக ரயில் சேவைகளை மீண்டும் முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
நவீனமயமாக்கல் காரணமாக மூடப்பட்டிருந்த, மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான ரயில் மார்க்க பகுதியில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அந்த மார்க்கம் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த ரயில் மார்க்க பகுதியில், வழமையாக ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மார்க்கத்தின் சமிக்சை அமைப்பை நவீனப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும் அதற்கான ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்படாததே இதற்கு காரணம் என தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமிக்சை அமைப்பு நவீனமயப்படுத்தி மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க 4 மாதங்களுக்கும் மேலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹவயில் இருந்து அனுராதபுரம் வரை 47 ரயில் கடவைகள் உள்ளதுடன், 15 ரயில் கடவைகள் பிரதான வீதிகளுக்கு குறுக்கே அமைந்துள்ளன. அவற்றில் 9 கடவைகள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் உள்ள பிரதான வீதிகளை கடக்கின்றன.
பிரதான வீதிகளின் குறுக்கே அமைந்துள்ள ரயில் கடவைகளூடாக ரயில்கள் பயணித்தால் பாதுகாப்பு கடவைகளை இயக்குவதற்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய ரயில் கடவைகளுக்கு எச்சரிக்கை பலகைகளை நிறுவ வேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான 22 தினசரி ரயில் சேவைகளையும் முன்னெடுக்க முடியாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.