இலக்கியச்சோலை
‘பேசுவோம் போரிடுவோம்’ படைத்த க.வே.பாலகுமாரன்… ஈழப் புரட்சிக்காக ஆகுதியாகிய தர்க்கீகவாதி!!… – நவீனன்
(நறுங் குறுந்தாடிக்கு சொந்தக்காரனான தோழர் வே.பாலகுமார் புன்முறுவல் என்றும் பூத்தவரும், நேரியபார்வை கொண்ட பண்பான தலைமைத்துவத்தின் அடையாளமாக என்றும் மிளிர்ந்தவர். ஈழப் புரட்சிக்காக தன்னையே ஆகுதியாக்கிய தர்க்கீகவாதி க.வே.பாலகுமாரனின் 77 வது பிறந்த நாள் (15 – 09 – 1947) நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)
புன்முறுவல் என்றும் பூத்த குறுந்தாடிக்கு சொந்தக்காரனான தோழர் வே.பாலகுமார் நேரியபார்வை கொண்ட பண்பான தலைமைத்துவத்தின் அடையாளமாக என்றும் மிளிர்ந்தவர். தமிழர் தேசம் திட்டமிட்ட இனவழிப்பை எதிர் கொண்டு அதற்கெதிராக போராட வேண்டிய வரலாற்றை நோக்கிப் பயணித்த காலத்தில் தன்னெழுச்சியாக தன் தலைமையில் ஒரு விடுதலை இயக்கம் கட்டி போராட எழுந்தவர் க. வே. பாலகுமாரன் அவர்கள்.
இன விடுதலைக் கனவைச் சுமந்து இன்னமும் நிற்கும் தமிழரின் போராட்ட வாழ்வியலை “பேசுவோம் போரிடுவோம்” எனும் புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவணச் சாட்சியங்களாக விளங்குகின்றன.
தமிழ் தேசத்தின் விடுதலைக் கனவைச் சுமந்து நிற்கும் ஈழத்தின் தொன்மையான வரலாற்றில் தமிழ்த் தேசிய இனம் தமக்கான தேசத்தில் தம்மைத் தாமே ஆளும் அரசாட்சி கொண்ட தேசமாக பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த வரலாற்றை பாலகுமாரன் தெளிவாக இந்நூலில் வெளிப்படுத்தி உள்ளார்.
பிற்கால வரலாற்றில் சிங்கள இனமும் இத்தேசத்தில் எவ்வாறு வந்து சேர்ந்தார்கள் என்பதை வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட சான்றுகளை ஆதாரபூர்வமாக க.வே.பாலகுமாரனின் “பேசுவோம் போரிடுவோம்” நூல் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்நூல் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் பல்வேறு காலக்கட்ட நிகழ்வுகளை நமது கண்முன்னே நிறுத்துகிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் புரட்சியாளராகப் பங்கெடுத்துக்கொண்ட க.வே.பாலகுமாரன் வரலாறு மற்றும் அரசியலில் தாம் பெற்ற பட்டறிவுகளை நேர்த்தியான வடிவில் அனைத்துலக அரசியல் நகர்வுகளோடு இணைத்து எழுதுவதில் புலமைப்பெற்றவர்.
அரசியல் தளம் மட்டுமின்றி தமிழரின் அறிவியல், சங்க இலக்கியம், தொல்லியல் என பல்துறை ஆளுமையோடு கட்டுரைகளை எழுதுபவர். ஈழ போராட்டத்தில் உன்னத புரட்சியாளரானதோழர் க. வே. பாலகுமாரன் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். இவர் விடுதலைப் புலிகளுக்கு ஒரு அரசியல் மதியுரைஞராக செயற்பட்டார்.
புலிகளுடன் இணையும் முன்னர் இவர் ஈழ புரட்சி அமைப்பின் செயலதிபராக இருந்தார். பின் ஈரோஸ் அமைப்பு விடுதலைப் புலிகளுடன் 1990களின் இறுதியில் சுயமாக இணைந்ததும் அறிந்ததே.
தமிழர் விடுதலைக் களத்தில் போரிடுவதோடு மட்டுமின்றி, தமிழீழ மக்களின் அரசியல் தெளிவிற்காக, பல்வேறு காலக்கட்டங்களில் ஆழ்ந்த அரசியல் நுண்ணறிவை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுரைகளை எழுதி அரும்பணியாற்றியவர் க.வே. பாலகுமாரன் அவர்கள். காலத்தின் தேவை கருதி தன்னை களத்தில் இணைத்துக்கொண்டு இறுதிவரை தளத்தில் நின்று தோள்நின்ற ஆய்வாளருமான திரு. க. வே பாலகுமாரன் அவர்களது ஆக்கங்களின் தொகுப்பான பேசுவோம் போரிடுவோம் என்ற நூல் வெளியீடு ஐரோப்பாவில் பல நாடுகளில் நிகழ்ந்தது.
க.வே.பாலகுமாரனின் ‘பேசுவோம் போரிடுவோம்’ நூல் விடுதலைப் போராட்ட வரலாற்றின் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை யதார்த்தபூர்வமாக வெளிப்படுத்துகிறது.
க.வே.பாலகுமாரன் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழீழ அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு “பேசுவோம் போரிடுவோம்” என்ற தலைப்பில் வெளியாகி உள்ள இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டுரையும் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவண சாட்சியப்பதிவுகளாக விளங்குகின்றன.
பாலகுமாரன் – புரட்சியின் ஒளிர்முகம்:
பொதுவுடமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பாலகுமார் புன்முறுவல் என்றும் பூத்த குறுந்தாடிக்கு சொந்தக்காரனாக, நேரியபார்வை கொண்ட பண்பான தலைமைத்துவத்தின் அடையாளமாக என்றும் மிளிர்ந்தவர்.
தமிழ் தேசிய விடுதலைப் பாதையில் நிதர்சனமாய் பாலகுமார் தன்னை இளம் பராயத்திலிருந்தே இணைத்துக் கொண்டவர். ஈழப் போராட்ட நான்கு தசாப்தங்களாக தனிமனித வரட்டுவாத பிரச்சாரங்களை தவிர்த்து, மக்களுடன் மக்களாய் போராட்ட களத்தில் தன்னை தியாகித்தவர். தமிழ் தேசியத்திற்காய் தோள்நின்று தியாகித்த யதார்த்தவாதியே தோழர் பாலகுமாரன்.
தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் பரந்துபட்ட மக்கள் போராட்டமாகவும் அதேவேளையில் சமூக நீதிக்கான போராட்டமாகவும் அமைய வேண்டும் என்பதில் நம்பிக்கை என்றும் கொண்டவர். அவர் ஈழப்புரட்சிக்காய் தன்வாழ்வையே ஆகுதியாகிய தர்க்கீகவாதி ஆவார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்:
முள்ளிவாய்க்கால் போர் மௌனிப்பின் பின்னர் 2009இல் தனது மகன் சூரியதீபனுடன் விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியானதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட போராளிகளில் பாலகுமாரும் ஒருவர்.
ஆனாலும் தோழர் பாலகுமார் எங்கு கொண்டு செல்லப்பட்டார், எந்த இரகசிய சித்திரவதை முகாமில் மறைத்து வைக்கப்பட்டார் என்கிற தகவல்கள் எதுவும் பின்னாளில் வெளிவரவில்லை.
2009இல் அன்றைய சிங்கள அரசின் புனர்வாழ்வு அமைச்சரோ, பாலகுமார் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டார் என்றும், அவர் அரச படைகளிடம் சரணடையவில்லை என்றும் அப்பட்டமான பொய்யை சொன்னார். முள்ளிவாய்க்காலில் உச்சகட்ட இன அழிப்புப்போர் நடந்து முடிந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நீதியின் கண்கள் திறக்குமா என்று ஏக்கத்தோடு காத்திருக்கும் எண்ணற்ற ஈழ மக்களில் அவரும் ஒருவர்.
உலகத்தின் மனசாட்சியை உலுப்பி, மெளனித்த முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில், தமிழ் மக்களில் உள்ள ஏக்கமெல்லாம் மண்ணை மீட்க தம்மைத் தொலைத்துக் கொண்ட பாலகுமாரும் சரணடைந்த மற்றய போராளிகளும் எப்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள் என்பதுதான்.
உலகப் புரட்சியாளர் வரிசையில் தோழர் பாலகுமாரனும் தனித்துவமாக என்றும் பிரகாசிக்கின்றார். மெளனிக்கப்பட்ட போராட்டத்தின் இறுதிக் கணங்களில் தோழர் பாலகுமார் மாயமானது உலகின் மனச்சாட்சியையே உலுப்பியுள்ளது.
அவருடன் தேச விடியலுக்காய் பயணித்த தோழர்களும், மக்களும் தோழர் வே.பாலகுமாரை ஒரு போதும் மறவர். இன்றல்ல, என்றாவது ஓர் நாளினில் வரலாறு அவரை விடுதலை செய்யும் என்ற நம்பிக்கைகளுடன் ஈழவர் காத்திருக்கின்றனர்.