நடத்தப்படாத தேர்தலுக்கு 65 கோடி செலவு; தேசிய கணக்காய்வு அறிக்கையில் தகவல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய திகதியில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவால் முடியாமல் போனாலும் தேர்தல் செலவாக அறுபத்தைந்து கோடியே ஐம்பது இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரத்து இருநூற்று இருபத்தி ஆறு (655,096,226) ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஆகும் போது ஒரு கோடியே ஐம்பத்தொன்பது இலட்சத்து முப்பத்து மூவாயிரத்து நானூற்று எழுபத்திரண்டு ரூபாய் மேலும் செலுத்த வேண்டிய செலவினங்களின் பட்டியலில் இருந்ததாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகளில் 15 வீதம் கூடுதல் நேரம் மற்றும் விடுமுறை ஊதியத்துக்கும், 23 வீதம் எழுதுபொருட்கள் வாங்குவதற்கும், 7 வீதம் எரிபொருளுக்கும், 31 வீதம் அச்சிடுவதற்கும், 7 வீதம் விருந்துகளுக்கும், 4 வீதம் பொலிஸ் துறைக்கும் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் குறித்த வேட்புமனு அறிவிப்பு 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி காட்சிப்படுத்தப்பட்டது.
தேர்தல் தொடர்பில் மூன்று வர்த்தமானிகளும் வெளியிடப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பாக 2023ஆம் ஆண்டின் அடிப்படையில் வெளியிடப்பட்ட செயல்திறன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.