போட்டியில் இருந்து பைடன் விலகல் – ஒபாமா பாராட்டு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் ஜோ பைடனின் முடிவை, அவரது சொந்த கட்சி தலைவர்களே வரவேற்றுள்ளனர்.
இதன்படி, அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பைடனின் முடிவைப் பாராட்டியவர்களில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் ஒருவர் ஆவார்.
பைடனின் இந்த முடிவு நாட்டின் மீது அவர் கொண்ட அன்பை காட்டுகிறது என ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் பைடனுக்கு இருப்பதாக ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தேர்தலில் இருந்து விலகி இப்படியொரு சிறந்த முடிவை எடுத்ததற்காக பைடன் சிறந்த தேசபக்தர் என்று புகழப்பட்டார்.
ஜனாதிபதியாக, பைடன் சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் புகழை உயரச்செய்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றிணைத்ததாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, புதிய ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கான முறையான செயற்பாடுகளை கட்சித் தலைவர்கள் முன்னெடுப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பைடன் போட்டியில் இருந்து விலகியதால், ஜனநாயக கட்சியினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. யார் களத்தில் நிற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என நம்பப்படுகின்றது.
வேட்பாளர் யார் என்பது அடுத்த மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.