இலக்கியச்சோலை

நான் கண்ட சடாட்சரன்… செங்கதிரோன்

கவிஞர் சடாட்சரன் 06.07.2024 அன்று தனது 84 ஆவது வயதில் பெரியநீலாவணையில் காலமானார். ஈழத்து இலக்கிய உலகில் கவிஞர் மு.சடாட்சரன் என அறியப்பட்ட சடாட்சரன் அவர்களை நான் முதன்முதலாக அறியநேர்ந்தது 1970களிலாகும். 1971 இல் நான் கல்முனை நீப்பாசனத் திணைக்களத்தில் வெளிக்கள ஊழியனாகப் (ரி.ஏ-தொழில்நுட்ப உதவியாளர்) பணியேற்ற ஆரம்பகாலம் அது.

கல்முனையிலே நடைபெற்ற கவியரங்குகள்-நூல் வெளியீட்டு/ அறிமுக விழாக்களில் அறிமுகமாகிக் கொண்டோம். ஆரம்பத்தில் அவருடனான ஊடாட்டம், ஒருவரையொருவர் நேரில் காணும்போது முகம் மலர்ந்து சிரிப்பதும் முகமன் கூறிக்கொள்வதுமாக மட்டுப்பட்டேயிருந்தது. வயது வித்தியாசம் அதற்குக் காரணமாயிருந்திருக்கலாம். நான் வாலிபப் பருவத்திலிருந்தேன். அவர் நடுத்தரவயதை அண்மித்துக் கொண்டிருந்தார். அதனால் ஒரு மரியாதை கலந்த உறவும் ஊடாட்டமுமே அவரோடு எனக்கு ஆரம்பத்திலிருந்தது.
மாலைவேளைகளில் எனது வாலிபவயது நண்பர்களுடன் அதுவும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கல்முனைக் கடற்கரைக்குச் சென்று பட்டு வெள்ளை மணலிலே வட்டமிட்டு அமர்ந்து கச்சான் கொட்டை அல்லது கடலையைக் கொறித்துக் கொண்டும்இ கரைமோதும் அலைகளின் ஆர்ப்பரிப்பைக் காதில் வாங்கிக் கொண்டும், கவிஞர் மஹாகவி (து.உருத்திரமூர்த்தி) அவர்கள் தனது கவிதையிலே வடித்த ‘சிறுநண்டு மணல்மீது படமொன்று கீறும்ஃ சிலவேளை அதைவந்து அலைகொண்டு போகும்’ காட்சியைப் பார்த்து ரசித்துக்கொண்டும் மணிக்கணக்காக நேரத்தைச் செலவிடுவது அக்காலத்துச் சுகமான அனுபவம்.

எங்களுக்கு அப்பால் எம்மைப்போலவே வட்டமிட்டு எம்.ஏ.நுஃமான், மருதூர்க்கனி,அன்பு முகையதீன், மருதூர்க்கொத்தன், நீலாவணன், ஜீவாஜீவரத்தினம், பஸீல் காரியப்பர், சத்தியநாதன், சண்முகம் சிவலிங்கம், சடாட்சரன், மணிவாசகன் போன்ற கவிஞர்கள்ஃ எழுத்தாளர்கள்ஃபடைப்பிலக்கியவாதிகளும் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் அனைவரும் “பைசிக்கிள்” இல்தான் வருவார்கள். ‘சைக்கிள்’களைக் கடற்கரைப் பாதையோரத்தில் நடப்பட்டிருந்த மின்கம்பத்தில் சாத்திவிட்டு அல்லது பாதையோரம் “ஸ்ராண்ட்” இல் நிறுத்திவிட்டே மணலில் வந்தமர்வார்கள்.

வாலிபவயதைக் கடந்து நடுத்தரவயதை அண்மிக்கும்போதுதான் இவர்களுடனான நெருக்கம் எனக்கு வாய்த்தது. அப்படி வாய்த்ததுதான் சடாட்சரன் அவர்களுடனான எனது உறவும் ஊடாட்டமும். அவருடனான அறிமுகமும் உறவும் ஊடாட்டமும் அகவை அரைநூற்றாண்டைத் தாண்டிவிட்டது.

1961இல் கவிஞர் நீலாவணன் அவர்கள் கல்முனைப்பகுதியில் உள்ள எழுத்தாளர்களை ஒன்று சேர்த்துக் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தபோது சடாட்சரன் அவர்கள் அவரோடிணைந்து உழைத்திருக்கிறார்.

கவிஞர் நீலாவணனின் “மழைக்கை” கவிதை நாடகம் கிழக்கிலே (1963இல்) முதன் முதல் மேடையேறிய கவிதை நாடகமாகும். மகாபாரதத்தில் செஞ்சோற்றுக்கடன் தீர்த்த கர்ணனின் கடைசிக் காலக்கதையைக் கருவாகக் கொண்ட இப் “பா” நாடகத்தில் மு.சடாட்சரன் அவர்கள் கர்ணன் வேடத்தில் நடித்துள்ளார் (இந் நாடகத்தில் நீலாவணன் – குந்திதேவி, மருதூர்க்கொத்தன் – கிருஸ்ணன், எம்.ஏ.நுஃமான்; – இந்திரப்பிராமணன், மருதூர்க்கனி-பிராமணன், கே.பீதாம்பரம் – இந்திரன் பாத்திரமேற்று நடித்தமை குறிப்பிடத்தக்கது.)

1967 இல் நீலாவணன் கல்முனைத்தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து கழகத்தின் வெளியீடாக நீலாவணனை ஆசிரியராகக் கொண்டு “பாடும்மீன்” இலக்கிய இதழ் வெளிவந்தபோது கழகத்தின் செயலாளராக மு.சடாட்சரன் அவர்களே விளங்கியுள்ளார்.

சடாட்சரன் அவர்கள் கவிஞர் நீலாவணனின் குடும்பத்தினருடன் நெருக்கமான உறவுடையவர.; கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மக்களின் வாழ்க்;கையை இலக்கியமாக்க எத்தனித்தார். அதன்விளைவே அன்னாரின் “வேளாண்மை”க் காவியம். ஈழத்தமிழ்ப்; பிரதேசங்களில் தனித்துவம் வாய்ந்ததான மட்டக்களப்புத் தமிழகத்தின் பாரம்பரியங்களையும் அம்மாநிலத்து மக்களின் வாழ்க்கை முறைகளையும் வைத்துக் காவியம் ஒன்றினை வடிப்பதற்காகவே நீலாவணன் “வேளாண்மை” யை விதைதார்.

‘வேளாண்மை’க் காவியத்தின் ‘குடலை, கதிர்; ஆகிய இருபகுதிகளையே எழுதி முடித்திருந்தார.; நீலாவணன் தன் வேளாண்மைக் காவியத்தை 1960 களின் தொடக்க ஆண்டுகளில் எழுதினாரென்றும் அதன் இப்போதுள்ள வடிவத்தில் 1964 அல்லது 65 இல் எழுதிமுடித்துவிட்டாரென்றும், 1975 இல் அவர் மரணிக்கும் வரை இருந்த பத்தாண்டுகால இடைவெளியில் அவர் அதை நிறைவுசெய்யவில்லையென்றும் எம்.ஏ.நுஃமான்; குறிப்பிடுகின்றார்.

கவிஞர் நீலாவணன் 11.02.1975 அன்று காலமானார். 1980 காலப்பகுதியில் ஈழத்தின்; முதுபெரும் எழுத்தாளர் காலஞ்சென்ற வ.அ.இராசரெத்தினம் அவர்கள் கல்முனைப் பிரதேசத்திற்குச் சென்றிருந்தபோது கவிஞர் மு.சடாட்சரன் அவர்களே கவிஞர் நீலாவணன் எழுதி முற்றுப்பெறாத “வேளாண்மை”க் காவியத்தின் கையெழுத்துப் பிரதியைக் கவிஞர் நீலாவணனின் மனைவியிடமிருந்து பெற்று அவரிடம் படிக்கக் கொடுத்தார். அப்போது வ.அ அவர்கள் மூதூரிலே சிறு அச்சுக் கூடமொன்றிற்குச் சொந்தக்காரராயிருந்தார். அதனால் “வேளாண்மை” (குறுங்காவியம்) எனும் நூலின் முதற்பதிப்பு 1982 செப்டம்பரில் தங்கம் வெளியீடாக (தங்கம் வெளியீடுஇ திரிகூடம், மூதூர்) வெளிவந்தது. “வேளாண்மை”க் காவியம் நூலாக வெளிவருவதற்குக் கவிஞர் மு.சடாட்சரன் காலாக இருந்துள்ளார்.

சடாட்சரன் ஒரு கவிஞராவே கவனிப்புக்குள்ளானவர். எனினும், அவ்வப்போது சில நல்ல சிறுகதைகளும் எழுதியுள்ளார். அவற்றுள் பதினொரு சிறுகதைகளைக் கொண்ட தொகுதி ‘மேட்டுநிலம்’ என்ற பெயரில் கொழும்பு, புரவலர்; ஹாம் உமர் அவர்களின் ‘புரவலர் புத்தகப் éங்கா’வின் 20வது வெளியீடாக 2009 இல் வெளிவந்தது. நான் ‘செங்கதிர்’ சஞ்சிகையை நடாத்திக் கொண்டிருந்த அக்காலத்தில் ‘புரவலர் புத்தகப் éங்கா’ வின் ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்தேன். ‘மேட்டுநிலம்’ ல் வெளிவருவதற்கு நானும் மறைமுகக் காரணியாக இருந்தேன். இது பற்றிச் சடாட்சரன் அவர்களிடம்கூட நான் சொல்லவில்லை. அவர் பற்றிய கட்டுரையொன்றினை வரையச் சந்தர்ப்பம் ஏற்பட்ட இப்போது இதனையும் பதிவு செய்ய விழைந்தேன். கவிஞராக அறியப்பட்ட சடாட்சரன் அவர்களின் அச்சில் வெளிவந்த முதல்Áல் இச் சிறுகதைத் தொகுதியே.

‘பாதை புதிது’ என்பது அவரது கவிதைத் தொகுதியாகும். ‘நவீனன்’ வெளியீடாக 2012 நவம்பரில் வெளிவந்தது. மு.ச. நவீனன் என்ற பெயரிலும் சில ஆக்கங்களை மு. சடாட்சரன் அவர்கள் படைத்திருக்கிறார் என்பது பலர் அறியாத சங்கதிகளிலொன்று. ‘குழந்தைவேல்’ எனும் பெயரிலும் படைப்புகளைப் பிரசவித்திருக்கிறார். இதுவும் அதிகம் வெளித்தெரியாத விடயம்தான். ‘பாதை புதிது’ நூலின் வெளியீடு 10.02.2013 அன்று கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெற்றபோது நூலின் வெளியீட்டுரையை நானே ஆற்றியிருந்தேன்.

கவிஞர் நீலாவணனின் முற்றுப் பெறாத ‘வேளாண்மை’க் காவியத்தின் தொடர்ச்சியாகக் ‘காய், பழம்’ எனும் இரு பகுதிகளாக ‘விளைச்சல்’ எனும் பெயரில் குறுங்காவிய நூலை நான் எழுதி வெளியிட்டேன். இந் நூலின் வெளியீட்டு விழா 01.07.2017 அன்று கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடÁலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெற்ற போது நிகழ்வுக்குக் கவிஞர் மு. சடாட்சரன் (ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர்) அவர்களே தலைமையேற்றிருந்தார்.

சடாட்சரன் அவர்கள் மரணிக்கும் போது வசித்த பெரிய நீலாவணை வீட்டிற்குப் பல தடவைகள் சென்றிருக்கிறேன். அவரது வீட்டார் பரிமாறும் சுவையான தேநீரைப் பருகிக் கொண்டு இலக்கியமும் அரசியலும் பேசுவோம். அவரோடு பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அவர் தனது கருத்துக்களை மிகவும் அவதானமாகவும் அமைதியாகவும் ஆழமாகவும் பக்குவமாகவும் இங்கிதமாகவும் எடுத்து வைப்பார். அவருடைய சுபாவம் அப்படி. நான் எனது கருத்துக்களை நேரடியாகவும் ஆணித்தரமாகவும் ஆக்ரோ~த்துடனும் நறுக்கென்று கூர்மையாக வெளிப்படுத்துவேன்.

எனது சுபாவம் இப்படி. கருத்து உடன்பாடுகளும் வரும். முரண்பாடுகளும் எழும். முரண்பாடுகள் முற்றி உச்சத்திற்குவந்து கருத்து மோதல்கள் கருக்கட்டும்போது ஒரு சிரிப்புடன் அதனைக் கடந்து விடுவார். அதுதான் அவருடைய தனித்துவம். எவரையும் அவர்; கோபித்துக் கொள்வது குறைவு. எவரையும் குறை கூறுவதும் அரிது. எவரையும் நோகாதவர். எவருக்கும் தீங்கு எண்ணாதவர். எந்தச் ‘சோலி’க்கும் போகாதவர். எல்லோருக்கும் இனியவர். பாடறிந்து ஒழுகும் பண்பாளர். இலக்கிய நெஞ்சமும் இலக்கிய நடத்தையும் படைத்தவர். ஒரு நல்ல மனிதனை அவரிடம் நான் காண்கிறேன். ஓர் இலக்கியவாதி தன்னளவில் நல்ல மனிதனாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அத்தகையோர் படைக்கும் இலக்கியம் பொய்யானது. ஏனெனில் இலக்கியத்தின் அடிப்படையே மனிதத்துவம்தான்.

கவிதைகள் பற்றி நிறையப் பேசியிருக்கிறோம். ‘புதுக்கவிதை’ யைப் ‘பா’ இலக்கியத்திற்குள் வகைப்படுத்த முடியாது என்பது எனது வாதம். கவிதைக்கு ஓசை அதுவும் தொடரோசை முக்கியம். ஓசையில்லாதது கவிதையாகாது. ஓசை தேவையற்றது என்பது புதுக்கவிதைப்போக்கின் பொதுவிதி. புதுக்கவிதைப் போக்கு உரைநடையின் வளர்ச்சியே தவிர அது கவிதையின் வளர்ச்சியல்ல என்பதே எனது நிலைப்பாடாக இருக்கும். அவரது நிலைப்பாடு பக்கம் சாராமல் நடுவுநிலைமையாக இருக்கும். கவிதை பற்றிய அவரது நிலைப்பாட்டை அவருடைய எழுத்தில் நான் இவ்வாறுதான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

“நாங்கள் மரபுக் கவிதை, புதுக்கவிதை என்று பிரித்து முழுமனதோடு ஒன்றையும் அரைமனதோடு மற்றதையும் நோக்குவது இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணைபுரியுமா என்பது சந்தேகமே. தற்காலத்தில் எழுதப்படுகின்ற மரபுக்கவிதைகளிலும் வேண்டாத சொல்லடுக்கு வகைகளும் உள்ளன. அதுபோல் புதுக்கவிதை என்று எழுதப்படுபவைகளிலும் வீணான சொற்பிரயோகப் போலிகளும் உள்ளன. உணர்ச்சி வாக்கியங்களைக் கூட்டிக் குறைத்து முறித்துப்பிரசுரித்து விட்டால் அது புதுக்கவிதை ஆகிவிடாது. எந்த வடிவத்தில் அமைந்தாலும் அது உயிருள்ள கவிதையாய், கவிதை இலட்சணங்கள் நிறைந்ததாய் விளங்கவேண்டும். அதுவே வரவேற்கத்தக்கது.

கவிதை என்பது இதயத்தால் உணரக்கூடியதாகவும் இன்பம் பயப்பதாகவும் அழகிய கற்பனைகள் நிறைந்ததாகவும் அமைய வேண்டும். அத்தோடு படிக்குந்தோறும் உணர்வலைகளை கிளறத்தக்கதாகவும் இருப்பதோடு சிந்தனையில் விரும்பத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைவதே சிறந்த கவிதையாகும். இத்தன்மைகள் நிறைந்தது மரபுக்கவிதையாகவோ புதுக்கவிதையாகவோ எதுவாக இருந்தாலும் அவற்றை விரும்பி வரவேற்பதே சரியானது. அப்போதுதான் சிறந்த கவிதைகள் நம் மத்தியில் தோன்றி எம் மொழிக்கு வளம் சேர்க்க வழியேற்படும்”.

இதுவே கவிதை பற்றிய சடாட்சரன் அவர்களின் கருத்து. இக் கருத்துக்கள் அத்தனையும் அவரது ‘பாதைபுதிது’ கவிதைத் தொகுப்பு நூலிலுள்ள கவிதைகளில் அச்சொட்டாகப் பதிவாகியிருக்கின்றன.

நெஞ்சகலா இந் நினைவுகளுடன் அன்னாரை அஞ்சலித்து இக் கட்டுரையை நிறைவுசெய்கிறேன்.

செங்கதிரோன்.

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.