தேர்தலை வாக்குகள் மூலமாகவே எதிர்கொள்ள வேண்டும்; தோட்டாக்களால் அல்ல
டொனால்ட் ட்ரம்புக்கும் தனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தாம் எதிரிகள் அல்ல என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள ஜோ பைடன்,
“எனது சக அமெரிக்கர்களே! நம் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க விரும்புகிறேன். எனக்கும் ட்ரம்புக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நாங்கள் எதிரிகள் இல்லை என்பதை உணர்த்த விரும்புகிறேன்.
நாம் அனைவரும் அமெரிக்கர்கள் என்ற வகையில் ஒன்றுபட்டு நிற்பது அவசியம். தேர்தலை வாக்குகள் மூலமாகத் தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர தோட்டாக்களால் அல்ல.
அமெரிக்காவின் வரலாற்றை மாற்றும் உரிமை மக்களின் கைகளில் தான் இருக்க வேண்டுமே தவிர கொலையாளிகளின் கைகளில் இருக்கக் கூடாது.
தாக்குதலுக்குப் பின்னர் ட்ரம்ப் நலமாக இருக்கிறார் என்பதை அறிந்தேன்.
இத்தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்துக்கு எங்களது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் இலக்கு என்னவென்பது இன்னும் தெரியவில்லை. குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைப் பற்றிய விசாரணைகளை பொலிஸ்துறை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்கா இதுபோல் கீழ்நிலைக்கு இறங்கக்கூடாது. அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை. வன்முறை எப்போதும் எதற்கான விடையையும் பெற்றுத் தந்ததில்லை. இத்தகைய வன்முறைச் சம்பவங்களை நம் நாட்டில் அனுமதிக்கவே முடியாது.
அமெரிக்கர்கள் எதிரெதிர் அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களை மதிக்க வேண்டும். நம் சமூகத்தைப் பிரிக்க அந்நிய சக்திகள் முயற்சிக்கலாம் அதற்கு நாம் இரையாகிவிடக்குடாது” என குறிப்பிட்டுள்ளார்.