இலங்கை

யாழில் போராடிய காணாமல்போனோரின் தாய்மார், உறவுகள் மீது பொலிஸார் அராஜகம்!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்(ஓ.எம்.பி.) ஏற்பாட்டில், வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களை மாவட்ட செயலகத்திற்கு வெளியே இழுத்து தள்ளி பொலிஸார் அராஜகத்தில் ஈடுபட்டனர்

பொலிஸார் இவ்வாறு காணாமல்போனோரின் தாய்மார்கள், உறவுகளுடன் அராஜகத்தில் ஈடுபட்டபோது நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மாவட்ட செயலகத்திற்குள் இருந்தபோதும் அவர் இந்தப்போராட்டத்தை, பொலிஸாரின் அராஜகத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார உள்ளிட்டோரின் பங்கேற்பில் நிகழ்வொன்று நடைபெற்றது. அதனை கண்டித்தே யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.

உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தி மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த தாய்மார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு குவிக்கப்பட்ட பொலிஸார் காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் வேடிக்கை பார்க்க போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களுடன் மிக மோசமாக நடந்து கொண்டதுடன் அவர்களை தரதரவென இழுத்து மாவட்ட செயலகத்திற்கு வெளியே தள்ளினர்.அத்துடன் அவர்களின் கைகளில் இருந்த பதாகைகளையும் பறித்தெடுக்க முயன்றபோது பொலிஸாருக்கும் தாய்மார்களுக்கும் இடையில் பெரும் இழுபறி ஏற்பட்டது. பொலிஸாரின் அராஜகத்தைப்பார்த்தது தாய்மார்களுடன் வந்த சிறு குழந்தைகள்,கதறியழுதனர்.

எனினும் மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களை கண்டுகொள்ளாத நீதி அமைச்சர் நிகழ்வு நிறைவு பெற்றவுடன் அங்கிருந்து மற்றைய நுழைவாயிலால் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேறிச் சென்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button