தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் தெரிவு இழுபடும் நிலையில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவராக யாரை தெரிவு செய்வதென்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே இடம்பெற்ற கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவராக பதவி வகித்த இரா.சம்பந்தன் அண்மையில் இயற்கை எய்திய நிலையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவி வெற்றிடமானது.இந்த வெற்றிடத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் நேற்று புதன்கிழமை பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் பங்கேற்காத நிலையில் ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. முதலில் இந்த பதவிக்கு செல்வம் அடைக்கலநாதனின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும் அவரை நியமிப்பதில் சட்ட சிக்கல் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதனால் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவிக்கான நியமனம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்களுக்குள் கலந்துரையாடி இவ்விடயத்தில் ஒரு தீர்மானத்துக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவிக்கு செல்வம் அடைக்கலநாதனின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும் அவர் கூட்டமைப்பிலிருந்து விலகி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற கட்சியை உருவாக்கி பதிவு செய்துள்ளமையால் அவரை கட்சி சார்பில் நியமிப்பதில் சிக்கல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்து செயற்படுகின்றன.