கடலில் நீந்தச் சென்று சிக்கிய பெண்; 36 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு
ஜப்பான் கடற்கரையில் நீந்தச் சென்ற பெண் ஒருவர் கடலுக்குள் இழுத்துசெல்லப்பட்டார்.
பின்னர், அவர் 36 மணி நேரத்திற்குப் பிறகு கடலோரப் பகுதிக்குக் கிட்டத்தட்ட 80 கிலோமீட்டர் தொலைவில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருபது வயது மதிக்கத்தக்க சீனாவைச் சேர்ந்த அந்த பெண் காணவில்லை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகு, உள்ளூர்க் கடலோரக் காவற்படை தேடல் மீட்புப் பணியைத் தொடங்கியது.
பெயர் வெளியிடப்படாத அந்த பெண், தாம் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார். தம்மால் மீண்டும் கடற்கரைக்குத் திரும்ப முடியவில்லை என்றும் அவர் சொன்னார்.
இறுதியில், அவர் ‘சிபா போசோ’ தீபகற்பத்தில் மிதந்துக்கொண்டிருந்ததை சரக்குக் கப்பல் ஒன்று கண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருகில் இருந்த மற்றொரு சிறிய படகிலிருந்து இரண்டு ஊழியர்கள் கடலுக்குள் குதித்து அவரைக் காப்பாற்றினர்.
அந்த பெண் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இருப்பினும், உயிருக்கு ஆபத்து இல்லாததால், அவர் அங்கு தங்கியிருக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.